வாய்மொழி வரலாறு: நேர்காணல் செயல்முறை
படிநிலை 1:
வழி 1
- ஒரு கருப்பொருளை தேர்வு செய்க.
- அந்த கருப்பொருளுக்கு பொருத்தமான கேள்விக் கொத்து உருவாக்குக. நீங்கள் நேர்காணும் நபர் மற்றும் நேர்காணலின் சூழலுக்கு பொருத்தமான கேள்விகளைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஒரு நேர்காணலின் போது, நீங்கள் நேர்காணும் நபர் சொல்லும் கதை மேலும் சில கேள்விகளை உங்களுக்குள் எழுப்பக்கூடும். உங்கள் நேர்காணலின் கருப்பொருள், நோக்கம் மற்றும் சூழலுடன் அக்கேள்விகள் பொருத்தமானவையாக இருந்தால், அக்கேள்விகளைக் கேட்கவும்.
வழி 2
- கொடுக்கப்பட்ட கருப்பொருளுக்குள் நேர்காணப்படும் நபர் அவரது கதையை சுதந்திரமாக சொல்ல ஆரம்பிக்கலாம். பின்னர், தேவைக்கேற்ப, நீங்கள் தயார்படுத்திய நேர்காணல் வழிகாட்டியிலிருந்து கேள்விகளைக் கேட்கலாம்.
கவத்தில் கொள்க:
- தயார் செய்யும் கேள்விகள் பரவலான கேள்விகளாக (open questions) இருக்க வேண்டும். அதாவது கேள்விகள் ஆம் அல்லது இல்லை என்ற பதிலைத் தருவதற்காக நேர்காணப்படும் நபரை வழிநடத்தக்கூடாது. அல்லது கேள்விகள் ஒரு சார் பதில் தரும் வகையில் நேர்காணப்படும் நபரை இட்டுச் செல்லக்கூடாது.
- விவாதங்களுக்குச் செல்ல வேண்டாம். நேர்காணப்படும் நபர் சொல்லும் கதை அல்லது தகவல் நீங்கள் ஒரு நேர்காணல் செய்பவராக ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம்.
- நீங்கள் செய்தியைச் செவிமடுப்பவர் (listener) மட்டுமே தவிர பாதுகாவலர் (defender) அல்ல!
படிநிலை 2:
வாய்மொழி வரலாறு நேர்காணலை மேற்கொள்க.
- நேரடி சந்திப்பு நேர்காணல் அல்லது இணையவழி நேர்காணல்.
- ஒலி வடிவிலான நேர்காணல் அல்லது ஒளி/ ஒலி வடிவிலான நேர்காணல்
வாய்மொழி வரலாற்றுப் பதிவின் ஆரம்பத்தில் நேர்காணலை மேற்கொண்பவர் கூற வேண்டியவை:
- திகதி, நாள். (நேர்காணலின் விவரக்குறிப்புப் பதிவு (log) எழுதும் பொழுது ஒரு நேர்காணலின் திகதி நாள் குழப்பமடையாமல் இருக்க இலகுவாக இருக்கும்.)
படிநிலை 3:
- ஒரு வாய்மொழி வரலாற்றுப் பதிவு செய்த பின், அந்தப் பதிவில் உள்ள தகவல்கள் நேர்காணப்பட்ட நபர் சரிபார்த்து அனுமதி வழங்க வேண்டும். அதற்கு அந்த ஒலி அல்லது ஒளிக் கோப்பை நேர்காணப்பட்ட நபர் பார்வையிட வாய்ப்பு வழங்க வேண்டும்.
- அதைப் பார்வையிட்ட பின்னர் பேணிப் பாதுகாப்பதற்கான சம்மதம் அவர் தருவதற்கு இலகுமாக இருக்கும்.
- ஏதேனும் தணிக்கைகள் இருந்தால், அவற்றைத் தணிக்கை செய்யவும்.
படிநிலை 4:
- தணிக்கைகள் செய்த வெளியீட்டுக் கோப்பு (published version) உருவாக்கவும்.
- வெளியீட்டுக் கோப்பும் (published version), அதன் விவரக்குறிப்புப் பதிவும் (log) சுருக்கமும் (summary) வாய்மொழி வரலாறு கூறியவரிடம் அனுப்பவும்.
- வாய்மொழி வரலாறு எவ்வாறு பயன்படுத்தப்படலாம் மற்றும் பேணிப் பாதுகாக்கப்படலாம் என்ற ஒப்புதல் படிவத்தில் கையொப்பம் பெறவும்.
படிநிலை 5:
- பொது அணுக்கத்திற்கு விடக் கூடிய வாய்மொழி வரலாறுகளை எவ்வாறு/ எங்கு பொது அணுக்கத்திற்கு விடலாம் என்று இனம் காணவும்.
- பதிவுகளை சேமித்து (storage) மற்றும் நீண்ட காலப் பேணிப் பாதுகாப்பிற்கான (preservation) ஏற்பாடுகளை செய்வும்.