வீக்கிப் பட்டறை – ஒக்டோபர் 2022

பெப்ரவரி 2022 க்குப் பின்னர் வீக்கிப் பட்டறை 12. ஒக்டோபர் 2022 அன்று ஒசுலோ, றொம்மனில் அமைந்துள்ள தமிழர் வள ஆலோசனை மையம் (TRVS) கட்டடத்தில் நடைபெற்றது

தேசிய நூலகத்தில் உள்ள Lokalhistoriewiki.no இல் நடைபெறும் “Et mangfold av historier – norsk-tamilenes historie” (ஒரு பன்முகம் மிக்க கதைகள் – நோர்வேயிய தமிழர்களின் வரலாறு) என்ற செயல்திட்டத்திற்கான பணிக்குழு, ஒஸ்லோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தமிழ் அமைப்புகளை அழைத்தது. அதனூடாக தங்கள் உறுப்பினர்களை இந்த சமூக முயற்சியில் ஈடுபடவும் ஊக்குவிக்கவும் அழைத்தது. நோர்வேயில் உள்ள நிகழ்கால மற்றும் எதிர்கால தமிழ் சமூகம் மற்றும் பெரும் சமூகம் ஆகிய இரண்டிற்கும் பெறுமதியான மற்றும் பலனளிக்கும் பண்பாட்டுப் பாரம்பரியமாக மாறக்கூடியவற்றை ஆவணப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பங்களிக்க இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

படம்: PowerPoint (வீக்கிக்குழு, 12.10.2022)

திட்டமிடப்பட்ட அன்றைய நிகழ்ச்சி:

  • 18:00: வீக்கி குழுவின் வரவேற்பு மற்றும் அறிமுகம்.
  • 18:05: வீக்கி செயற்திட்டம் பற்றிய தகவல்.
  • 18:10 – 20:00: களஞ்சியக் கட்டுரைகள் அல்லது நினைவகப் பதிவுகளைத் (minnefortelling) திட்டமிடுதல் மற்றும் எழுதுதல்.
  • 19:00-20:00: நினைவகப் பதிவுகளை எழுத விரும்பும் எழுத்தாளர்களை TRVS இல் நடைபெறும் மூத்தோர் முற்றத்திற்கு (eldretreff) அழைத்துச் சென்று அங்கு எழுத்துப்பதிவு செய்யும் செயல்முறையை நிகழ்த்துதல்.
  • 20:00-20:30: இதுவரை செய்த எழுத்து வேலையை அனைவருடனும் பகிருதல் – உணவு மற்றும் பானத்துடன்.
    வீக்கி பட்டறையின் முடிவில் பங்கேற்பாளர்களிற்கு வீக்கி-கைப்பை கொடுத்தல்.

புலம்பெயர் தமிழர்களின் மூத்தோருக்கு மரியாதை வணக்கம்

2021ம் ஆண்டு கோடை காலம் தொடக்கம் நிகழ்ந்து வரும் வீக்கி பட்டறைகளுடன் ஒப்பிடும்போது, துரதிர்ஷ்டவசமாக, இந்த வீக்கிப் பட்டறையில் பங்கேற்பாளர்கள் எவரும் வரவில்லை. இந்த நிலை  புலம்பெயர் தமிழ் சமூகத்தில் ஆவணப்படுத்தலுக்கு முன்னுரிமை வழங்கத் தவறுவதையே புலப்படுத்துகிறது. இதனால் புலம்பெயர் தமிழர்களின் வரலாறு எந்தளவிற்கு ஆபத்தில் உள்ளது என்பதையும் காட்டுகிறது. ஆனால் மூத்தோர் முற்றத்துடனான வருகை அமர்வு வீக்கி செயற்திட்டம் பற்றிய தகவல் சந்திப்பாக மாற்றப்பட்டது.

படம்: வீக்கிக்குழு (12.10.2022)

இந்தத் தகவல் சந்திப்பு மூத்தவர்களின் வரலாறு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றது. மூத்தவர்களின் வரலாறு நமது வேர்களுக்கும் நோர்வேயில் உள்ள புதிய/எதிர்கால தலைமுறைகளுக்கும் இடையேயான ஒரு உறவுப்பாலமாக செயல்படுகிறது. தகவல் சந்திப்பு ஆக்கப்பூர்வமான மற்றும் ஆரோக்கியமான விவாதத்திற்கும் வழி அமைத்தது. வீக்கி செயற்திட்டம், நோர்வேயில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் செயல்முறையின் இன்றைய நிலை மற்றும் நோர்வேயில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்துவதற்கான முந்தைய பணிகள் குறித்து மூத்தவர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அதோடு இந்தச் சந்திப்பு “ஆவணப்படுத்தல்” மற்றும் «ஊடகத் தயாரிப்பு/ பத்திரிகை” ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாட்டைப் புரிந்துகொள்ளவும் விழிப்புணர்வைக் கொடுக்கவும் ஒரு வாய்ப்பை உருவாக்கித் தந்தது.

தமிழர்கள் நூல் மற்றும் நூலக மரபுகளை நன்கு அறிந்திருப்பதால், ஆவணங்கள்/ சுவடிகள் (documentation) மற்றும் சுவடிகள் காப்பகம் (archive) தமிழ் சமூகத்திற்கு ஒரு புதிய விடயமாகவும் தொலைதூரமாகவும் உள்ளதை உணரக்கூடியவாறு இருந்தது. இருப்பினும், புலம்பெயர்ந்த தமிழ் செய்தித்தாள்கள், நூல்கள், சஞ்சிகைகள், ஆண்டுவிழா மலர்கள் மற்றும் பிற ஊடக தயாரிப்புகள் போன்ற வடிவங்களில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாறு வெளிவந்துள்ளபதியப். மறுபுறம், புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளுடன் தமிழர்களின் பல்வேறு சமூக தொடர்பாடல்களை ஆவணப்படுத்தும் செயல், பெரும்பாலான நேரங்களில், அறியாமலும் தற்செயலாகவும் நடந்து வருகிறது. கூட்ட அறிக்கை போன்ற அவர்களின் தொடர்பாடல்களுக்கான ஆவணங்கள் தமிழ் அமைப்புகளால் நிர்வாக நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவை பொதுவாக குறுகிய கால சிந்தனை ஓட்டத்திலேயே பதியப்படுகின்றன. எனவே, நீண்டகாலப் பேணிப்பாதுகாப்புச் சிந்தனை ஓட்டத்துடன் சமூகத் தொடர்பாடல்களை ஆவணப்படுத்தல் அவசரத் தேவையாக உள்ளது.

தமது பன்முகத்தன்மையான வரலாறு கண்டு, கேட்டு, அங்கீகரிக்கப்பட்டதாக உணர்ந்த மூத்தோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. வீக்கிப் பட்டறையின் முடிவில், மூத்தோருக்கு Lokalhistoriewiki.no மற்றும் பூம்பனிப்பனை ஆகிய இரண்டு சின்னங்கள் பொறிக்கப்பட்ட கைப்பைகள் வழங்கப்பட்டன. இது நோர்வேயில் மூத்தோர் உருவாக்கிய புலம்பெயர் வரலாற்றிற்கான அடையாளப் பரிசாக அமைந்தது. மூத்தோர் முற்றத்தின் பொறுப்பாளரும் பங்கேற்பாளர்களும் எதிர்கால வீக்கிப் பட்டறைகளில் மீண்டும் வருகை தருமாறு வீக்கிக் குழுவை அன்புடன் அழைத்துள்ளனர்.

வீக்கி பட்டறையின் நோக்கம்

பின்வரும் விடயங்களை சுய ஆவணப்படுத்தலுக்கு ஊக்குவித்தல்:

• நினைவுகள்

• அனுபவங்கள்

• நிகழ்வுகள்

• பயணங்கள்

• செயல்முறைகள்

• வளர்ச்சிகள்

• மாற்றங்கள்

• வேர்கள்

• பாரம்பரியம், வரலாறு, பண்பாடு

• உள்ளூர் மற்றும் வரலாற்றுக் கதைகள்

சுய ஆவணப்படுத்தல் ஏன் முக்கியமானது?

  • நோர்வேயில் தமிழர்களின் குடியேற்ற வரலாற்றின் தொடர்ச்சியைப் பிரதிபலிக்கும் ஆவணங்கள் இல்லாமை
  • தமிழ் அமைப்புகளில் தமிழர்களின் சமூக தொடர்பாடல்கள் பற்றிய ஆவணங்கள் இல்லாமை
  • தமிழ் அமைப்புகளில் ஆவணங்களின் அணுக்கம் கிடைக்காமை
  • நோர்வேயில் தமிழர்களின் புலம்பெயர்ந்த வரலாற்றின் பிரதிநிதித்துவத்தைக் காட்டக்கூடிய நோர்வேயிய ஆவணக் காப்பகங்கள், நூலகங்களில் தமிழ் அமைப்புகளின் சுவடிகள் இல்லாமை
  • தமிழ் அமைப்புகளில் சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள்
படம்: PowerPoint Presentation (Wiki team, 12.10.2022)

சுய ஆவணப்படுத்தலுக்கான வீக்கி பட்டறையின் முக்கியத்துவம்

முதல் தலைமுறை புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழர்களின் புலம்பெயர்ந்த வரலாற்றின் தொடக்கப்புள்ளி ஆகும். “புலம்பெயர் தமிழர்” (Tamil Diaspora) என்று சர்வதேச அளவில் அறியப்பட்ட அடையாளத்திற்கு அவர்கள்தான் ஆதாரம். நோர்வே மற்றும் உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் தமிழர்களின் தகவல், சான்றுகள், நினைவகம், அடையாளம், பண்பாட்டுப் பாரம்பரியத்திற்கான தோற்றமும் அடித்தளமும் அவர்களின் வரலாறே ஆகும். அது பல்வேறு நாடுகளில் வாழும் இரண்டாம், மூன்றாம் மற்றும் வருங்கால சந்ததியினரின் அடையாளத்தின் அடிப்படையாகும். “நாம் யார்” என்ற கேள்விக்கு அவர்களே ஒரு வாழும் பதில். புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளில் சமூக தொடர்பாடல்களின் ஆவணங்கள் இல்லாமையால், ​​சுய ஆவணப்படுத்தல் இன்னும் அவசியமாகிறது. ஒரு வெற்றிகரமான சுய ஆவணப்படுத்தலின் விளைவும், சுய ஆவணப்படுத்தல் இல்லாததன் விளைவும் நீண்ட கால ஓட்டத்திலேயே புலப்படும். வருங்கால சந்ததியினர் நோர்வேயில் தங்களின் வேர்கள் பற்றிய தகவல்களையும் ஆதாரங்களையும் தேடத் தொடங்கும் போது, ​​சமகால ஆவணங்களின் இல்லாமை அல்லது பற்றாக்குறை இருப்பின் அவர்களின் அடையாளத்தை இழந்த நிலைக்கே தள்ளப்படுவார்கள்.

நீண்ட கால நோக்கத்திற்கான ஒத்துழைப்பு

Lokalhistoriewiki.no இல் உள்ள தமிழ் செயல்திட்டத்திற்கான பணிக்குழு மாதம் ஒருமுறை வீக்கி பட்டறையை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதனூடாக இந்தப் பணிக்குழு நோர்வேயில் புலம்பெயர்ந்த தமிழர்களின் சுய ஆவணப்படுத்தலுக்கான தளத்தை உருவாக்கியுள்ளது. நோர்வேயில் உள்ள தமிழ்ச் சமூகம் மற்றும் நிர்வாக அதிகாரம் கொண்ட தமிழ் அமைப்புக்கள் பின்வரும் இரு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய ஒத்துழைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறது.

  1. உங்கள் நிர்வாகக் குழுவுடன் வீக்கி செயல்திட்டம் பற்றிய தகவல் கூட்டம் ஒழுங்கு செய்தல் (மெய்நிகர் சந்திப்பு 30 நிமிடம்-1 மணி நேரம்)
  2. சமூக ஒன்றுகூடலுடனான இயற்பியல் வீக்கிப் பட்டறை. அங்கு கட்டுரைகளை எழுதக் கூடிய எழுத்தாளர்களை சேர்த்தல். நோர்வேயிய மொழியில் எழுதக்கூடிய இளைஞர்களாகவோ அல்லது பெரியவர்களாகவோ இருக்கலாம். (சுமார் 3-4 மணிநேர இயற்பியல் வீக்கிப் பட்டறை)

நீங்கள் ஒரு பெறுமதியான வரலாற்றைக் கொண்டிருக்கிறீர்கள்! ஆவணப்படுத்துவதற்கும் எதிர்கால சந்ததியினருக்குக் கடத்துவதற்கும் நீங்கள் பங்களிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

மேலதிகத் தகவல்:

Lokalhistoriewiki.no இல் நடைபெறும் “Et mangfold av historier: norsk-tamilenes historier” செயற்திட்டம் (A diversity of stories: Norwegian-Tamil history; ஒரு பன்முகம் மிக்க கதைகள் – நோர்வேயிய தமிழர்களின் வரலாறு): https://lokalhistoriewiki.no/wiki/Forside:Tamilsk_historie_og_kultur

புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் இணையத்தளத்தில் வீக்கி செயற்திட்டம் பற்றி, அதன் செயல்பாடுகள், வளர்ச்சி பற்றிய தகவல்கள்:


புதுப்பிப்பு│Update:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: