நீண்ட கால நோக்கத்திற்கான ஒத்துழைப்பு
Lokalhistoriewiki.no இல் உள்ள தமிழ் செயற்திட்டத்தின் மூலம், நோர்வேயில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் சுய ஆவணப்படுத்தலுக்கான களத்தை இந்தப் பணிக்குழு உருவாக்கியுள்ளது. நோர்வேயில் உள்ள தமிழ்ச் சமூகம் மற்றும் நிர்வாக அதிகாரம் கொண்ட தமிழ் அமைப்புக்கள் பின்வரும் மூன்று செயற்பாடுகளை ஒழுங்கு செய்ய ஒத்துழைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறது.
- உங்கள் நிர்வாகக் குழுவுடன் வீக்கி செயற்திட்டம் பற்றிய தகவல் கூட்டம் ஒழுங்கு செய்தல் (மெய்நிகர் சந்திப்பு 30 நிமிடம்-1 மணி நேரம்)
- சமூக ஒன்றுகூடலுடனான இயற்பியல் வீக்கிப் பட்டறை. அங்கு கட்டுரைகளை எழுதக் கூடிய எழுத்தாளர்களை சேர்த்தல். நோர்வேயிய மொழியில் எழுதக்கூடிய இளைஞர்களாகவோ அல்லது பெரியவர்களாகவோ இருக்கலாம். (சுமார் 3-4 மணிநேர இயற்பியல் வீக்கிப் பட்டறை)
- உங்கள் நிறுவனம்/முன்முயற்சி பற்றிய கட்டுரை(களை) எழுதுதல் அல்லது புதுப்பித்தல் பொறுப்பை ஏற்றல்
தகவல் கடிதம் மற்றும் தகவல் சிற்றேடு
வீக்கி பட்டறைக்கான திட்டத்தின் எடுத்துக்காட்டு:
- 18:00: வீக்கி குழுவின் வரவேற்பு மற்றும் அறிமுகம்.
- 18:05: வீக்கி செயற்திட்டம் பற்றிய தகவல்.
- 18:10 – 20:00: களஞ்சியக் கட்டுரைகள் அல்லது நினைவகப் பதிவுகளைத் (minnefortelling) திட்டமிடுதல் மற்றும் எழுதுதல்.
- 20:00-20:30: இதுவரை செய்த எழுத்து வேலையை அனைவருடனும் பகிருதல் – உணவு மற்றும் பானத்துடன்.
வீக்கி பட்டறையின் முடிவில் பங்கேற்பாளர்களிற்கு வீக்கி-கைப்பை கொடுத்தல்.
சுய ஆவணப்படுத்தலுக்கான வீக்கி பட்டறையின் முக்கியத்துவம்
முதல் தலைமுறை புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழர்களின் புலம்பெயர்ந்த வரலாற்றின் தொடக்கப்புள்ளி ஆகும். “புலம்பெயர் தமிழர்” (Tamil Diaspora) என்று சர்வதேச அளவில் அறியப்பட்ட அடையாளத்திற்கு அவர்கள்தான் ஆதாரம். நோர்வே மற்றும் உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் தமிழர்களின் தகவல், சான்றுகள், நினைவகம், அடையாளம், பண்பாட்டுப் பாரம்பரியத்திற்கான தோற்றமும் அடித்தளமும் அவர்களின் வரலாறே ஆகும். அது பல்வேறு நாடுகளில் வாழும் இரண்டாம், மூன்றாம் மற்றும் வருங்கால சந்ததியினரின் அடையாளத்தின் அடிப்படையாகும். “நாம் யார்” என்ற கேள்விக்கு அவர்களே ஒரு வாழும் பதில். புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளில் சமூக தொடர்பாடல்களின் ஆவணங்கள் இல்லாமையால், சுய ஆவணப்படுத்தல் இன்னும் அவசியமாகிறது. ஒரு வெற்றிகரமான சுய ஆவணப்படுத்தலின் விளைவும், சுய ஆவணப்படுத்தல் இல்லாததன் விளைவும் நீண்ட கால ஓட்டத்திலேயே புலப்படும். வருங்கால சந்ததியினர் நோர்வேயில் தங்களின் வேர்கள் பற்றிய தகவல்களையும் ஆதாரங்களையும் தேடத் தொடங்கும் போது, சமகால ஆவணங்களின் இல்லாமை அல்லது பற்றாக்குறை இருப்பின் அவர்களின் அடையாளத்தை இழந்த நிலைக்கே தள்ளப்படுவார்கள்.
சுய ஆவணப்படுத்தல் ஏன் முக்கியமானது?
- நோர்வேயில் தமிழர்களின் குடியேற்ற வரலாற்றின் தொடர்ச்சியைப் பிரதிபலிக்கும் ஆவணங்கள் இல்லாமை
- தமிழ் அமைப்புகளில் தமிழர்களின் சமூக தொடர்பாடல்கள் பற்றிய ஆவணங்கள் இல்லாமை
- தமிழ் அமைப்புகளில் ஆவணங்களின் அணுக்கம் கிடைக்காமை
- நோர்வேயில் தமிழர்களின் புலம்பெயர்ந்த வரலாற்றின் பிரதிநிதித்துவத்தைக் காட்டக்கூடிய நோர்வேயிய ஆவணக் காப்பகங்கள், நூலகங்களில் தமிழ் அமைப்புகளின் சுவடிகள் இல்லாமை
- தமிழ் அமைப்புகளில் சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள்
வீக்கி பட்டறை பின்வரும் விடயங்களை சுய ஆவணப்படுத்தல் மூலம் ஊக்குவிக்கும்:
• நினைவுகள்
• அனுபவங்கள்
• நிகழ்வுகள்
• பயணங்கள்
• செயல்முறைகள்
• வளர்ச்சிகள்
• மாற்றங்கள்
• வேர்கள்
• பாரம்பரியம், வரலாறு, பண்பாடு
• உள்ளூர் மற்றும் வரலாற்றுக் கதைகள்

Lokalhistoriewiki.no மற்றும் தமிழ் செயற்திட்டம்
Lokalhistoriewiki.no இல் உள்ள “Et mangfold av historier: norsk-tamilenes historie” செயற்திட்டம் பல தமிழ் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் நோர்வேயின் தேசிய நூலகத்திற்கும் இடையில் உருவான கூட்டுச் செயற்திட்டமாகும். தமிழர் வள ஆலோசனை மையம் ஒரு அனுசரணையாளராக உள்ளது. 20.09.2021 அன்று, Lokalhistoriewiki.no இல் உள்ள தமிழ் செயற்திட்டமானது “Snøfnuggpalmen-பூம்பனிப்பனை” என்ற பெயர் கொண்ட இலச்சினையைப் பெற்றது.
Lokalhistoriewiki.no என்பது நோர்வேயின் தேசிய நூலகத்தில் உள்ள நோர்வேயிய உள்ளூர் வரலாற்று நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு இணையதளமாகும். இது நோர்வேயின் உள்ளூர் வரலாற்றை எழுதும் தன்னார்வப் பணிக்கான இணையதளமாகும்.
“Et mangfold av historier – norsk-tamilenes historie” (ஒரு பன்முகம் மிக்க கதைகள் – நோர்வேயிய தமிழர்களின் வரலாறு) என்ற செயல்திட்டத்திற்கான பணிக்குழு, நோர்வேயில் உள்ள தமிழ் அமைப்புகளை அழைக்கிறது. அதனூடாக தங்கள் உறுப்பினர்களை இந்த சமூக முயற்சியில் ஈடுபடவும் ஊக்குவிக்கவும் அழைக்கிறது.
தகவல் பகிர்வுக்கும் பரவலாக்கத்திற்கும் நன்றி
- தமிழர் வள ஆலோசனை மையம் (Tamilsk Ressurs og Veiledningssenter)
- அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் (இக்கலைக்கூடம் தமிழ்க் கல்விக்கான நோர்வே நாடு தழுவிய ஒரு அமைப்பாகும். 13.11.2022 அன்று ஒசுலோவில் நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தில் வீக்கிப் பட்டறை பற்றிய தகவல் பகிரப்பட்டது. அங்கு நோர்வேயைச் சுற்றி அமைந்துள்ள இக்கலைக்கூடத்தின் கிளைகள் கலந்து கொண்டன.)
- Abirami Cash & Curry (தமிழ் மளிகைக் கடை, வேய்த்வெத், ஒசுலோ)
- நெய்தல் (தமிழ் மளிகைக் கடை, கல்பக்கன், ஒசுலோ)
- JPP Catering (தமிழ் உணவுக் கடை, கல்பக்கன், ஒசுலோ)
- மகாராஜா இந்திய உணவகம் மற்றும் பார் (கல்பக்கன், ஒசுலோ)
- தமிழ் முரசம் வானொலி
- தேந்தமிழ் ஓசை வானொலியின் மின் செய்தித்தாள்
- தமிழ் மூத்தோர் முற்றம், தமிழர் வள ஆலோசனை மையம்
- விளையாட்டுத் துறை, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
- தமிழ் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒசுலோ – வீக்கன்
- Norway News Tamil
- தமிழ் இளையோர் அமைப்பு – நோர்வே
- நோர்வே தமிழர் சுகாதார அமைப்பு
- தமிழ் மகளிர் அமைப்பு நோர்வே
- Norway Tamil Sangam



மேலதிகத் தகவல்:
Lokalhistoriewiki.no இல் நடைபெறும் “Et mangfold av historier: norsk-tamilenes historier” செயற்திட்டம் (A diversity of stories: Norwegian-Tamil history; ஒரு பன்முகம் மிக்க கதைகள் – நோர்வேயிய தமிழர்களின் வரலாறு): https://lokalhistoriewiki.no/wiki/Forside:Tamilsk_historie_og_kultur
புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் இணையத்தளத்தில் வீக்கி செயற்திட்டம் பற்றி, அதன் செயல்பாடுகள், வளர்ச்சி பற்றிய தகவல்கள்:
புதுப்பிப்பு│Update: 04.03.2023