ஆக்கம், நற்கீரன் இலட்சுமிகாந்தன் (கனடா)
Malar – மலர் (Booklet)
மலர் என்பது காப்பகச் சுவடிகள் (archival records), கலைப் படைப்புக்கள் (creative works), புலமைப் படைப்புக்களை (academic works) ஒருங்கே கொண்டிருக்கும் ஒரு வெளியீடு ஆகும். மலரை நூல், இதழ், பத்திரிகை போன்ற பொது வெளியீடுகளோடும், துண்டுப் பிரசுரம், சுவரொட்டி (poster), அறிவிப்பு (notice) போன்ற குறுங்கால ஆவணங்களோடும் (ephemera) ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். மலர்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிகழ்வினை, நிறுவனத்தினை அல்லது நபரை முன்வைத்து வெளியிடப்படுகின்றன. அவற்றோடு தொடர்புடையவர்களை முதன்மை அவையோராக (audience) கொள்கின்றன. அவை பொதுவாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்படுவதில்லை.
ஆங்கிலத்தில் commemorative publications என்றும் souvenir publications என்றும் மலர்கள் அறியப்படுகின்றன. மேற்குநாடுகளிலும் இத்தகைய படைப்புக்கள் வெளியிடப்பட்டாலும், தமிழ்ச் சூழலில், இந்த ஆவண வகை (genre) தனித்துவமான பண்புகளையும் பயன்பாட்டினையும் கொண்டிருக்கிறது. ஜேர்மனில் வெளியிடப்படும் Festschrift வோடு மலர்களை ஒப்பிடலாம். எனினும் Festschrift புலமைசார் வெளியீடாகவே (academic publication) முதன்மையாகக் கருதப்படுகிறது.
மலர்கள் பலவகைப்பட்டோரால், சிறிய அவையோரை நோக்கி வெளியிடப்படுவதால், அவை சிறிய எண்ணிக்கையிலேயே அச்சிடப்படுகின்றன. அவை ஒரு சில பக்கங்கள் தொடக்கம், நூல்கள் போன்று பல பக்கங்களையும் கொண்டிருக்கலாம். அதோடு, அவை பொதுவாக வணிக நோக்கத்துக்காக வெளியிடப்படுவதில்லை. விற்பனைக்கோ பரந்த விநியோகத்துக்கோ வருவதில்லை. இதனால் பெரும்பாலானவை நூலகங்கள் (libraries), சுவடிகள் காப்பகங்களில் (archives) இடம்பெறுவதில்லை.
உள்ளடக்கம்
இலங்கையில், ஆய்வு இதழ்களை, அச்சு வெளியீடுகளை வெளியிடுவதில் உள்ள தடைகள் காரணமாக மலர்கள் காப்பகச் சுவடிகளோடு புலமை படைப்புக்களையும், கலைப் படைப்புக்களையும் வெளியிடுவதற்கான ஒரு முக்கிய களமாகவும் அமைகின்றன என்று நூலகர் சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்கள் குறிப்பிடுகிறார். பல வகைப்பட்ட வேரடி அமைப்புக்கள், நிகழ்வுகள், நபர்கள் தொடர்பாக இந்த வெளியீடுகள் அமைவதால், உள்ளூர் வரலாறுகளை இவை பதிவு செய்கின்றன.
கட்டமைப்பு
ஒவ்வொரு வகை மலருக்கும் வேறுபட்ட கட்டமைப்பு இருக்கும். எ.கா ஒரு நிறுவன மலர், அந்த நிறுவனத்தின் உறுப்பினர்கள், சந்திப்புக்கள் பற்றிய விபரங்கள், வரவுசெலவு, செய்திகள் போன்ற தகவல்களையும், மலர் வாழ்த்துச் செய்திகளையும், அந்த நிறுவன உறுப்பினர்களுக்கு ஈடுபாடு உடைய கட்டுரைகளையும் கொண்டு இருக்கும். நினைவு மலர் இரங்கல் பா, வாழ்க்கை வரலாறு, இலக்கியங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட படைப்புக்கள், நண்பர்கள் சக செயற்பாட்டாளர்களின் நினைவுகள், பொதுக் கட்டுரைகள், குடும்ப மரம் போன்ற வற்றை கொண்டு இருக்கும். இதுவரை அறிந்ததின் அடிப்படையில், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இருவரும் இறந்த ஆண்டு நினைவையொட்டி மலர்கள் உருவாக்குகின்றனர். அதனை நினைவு மலர் என்று அழைப்பதுடன், கல்வெட்டு அல்லது கல்வெட்டு நூல் என்றும் அழைக்கப்படுகிறது.
மலர்களின் வகை
- நிகழ்வு மலர்
- மாநாட்டு மலர்
- விழா மலர்
- திறப்பு நிகழ்வு மலர்
- பரிசளிப்பு விழா மலர்
- விளையாட்டு விழா மலர்
- நிறைவு மலர்
- வைர விழா – 75 ஆண்டுகள்
- மணி விழா – 60 ஆண்டுகள்
- பொன் விழா – 50 ஆண்டுகள்
- நிறுவன மலர்
- ஊர் அமைப்பின் மலர் (village association’s malar)
- சமய நிறுவன மலர் (religions organization’s malar)
- கலை/பண்பாட்டு நிறுவன மலர் (arts and culture organization’s malar)
- பாடசாலை மலர் (school/old boys or girls association’s malar)
- பல்கலைக்கழக மலர் (university unit malar)
- தொழில் வல்லுனர் அமைப்புக்களின் மலர் (professional organization’s malar)
- அரசியல் அமைப்புக்களின் மலர் (political organization’s malar)
- ஊடகங்களின் மலர் (media organization’s malar)
- வணிக நிறுவன மலர் (business organization’s malar)
- குடிசார் அமைப்பின் மலர் (civic organization’s malar)
- சிறப்பு மலர்
- பாராட்டு மலர்
- நினைவு மலர்
நிறுவன மலர்கள் பொதுவாகக் கொண்டிருக்கும் கூறுகள்
- வெளியிட்டாளர் காப்பகச் சுவடிகள் (archival records)
- உறுப்பினர்கள் விபரம்
- வரவு செலவு
- சந்திப்புக்கள் விபரம்
- செய்திகள்
- வாழ்த்துச் செய்திகள்
- கட்டுரைகள்
- படைப்பாக்கங்கள்
- விளம்பரங்கள்
நினைவு மலர்கள் பொதுவாகக் கொண்டிருக்கும் கூறுகள்
- திதி வெண்பா/இரங்கல் பா
- வாழ்க்கை வரலாறு
- சமய/இலக்கிய படைப்புக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாடல்கள்
- நண்பர்கள்/சக செயற்ப்பாட்டாளர்கள்/மாணவர்கள்/உறவினர்களிடம் இருந்து நினைவுப் பகிர்வுகள்
- பொதுக் கட்டுரைகள்/படைப்புகள்
- தகவல் தொகுப்புகள்
- குடும்ப மரம்
- நன்றி
மேற்கோள்கள்
https://www.sbl-site.org/publications/article.aspx?ArticleId=861
https://firstmonday.org/ojs/index.php/fm/article/view/3353/3030
பின் இணைப்பு
https://en.wikipedia.org/wiki/Anniversary
https://thamizhkalanchiyam360.blogspot.com/2018/08/blog-post_94.html
புதுப்பிப்பு│Update: 22.02.2023