DsporA Tamil Archive இன் முதல் காணொளி நேர்காணல் ஆண்டம் மீடியா, ஒசுலோவால் மேற்கொள்ளப்பட்டது. அது 16 செப்டம்பர் 2020 அன்று வலையொளியில் வெளியிடப்பட்டது. அண்டம் மீடியாவின் நேர்காணல், “தமிழர் தம்மை ஆவணப்படுத்த முன் வரவேண்டும்“, இரண்டு வெவ்வேறு தலைப்புகளை பார்வையிட்டது. ஒருபுறம் ஆவணப்படுத்தல். மறுபுறம் புலம்பெயர் தேசத்தில் தமிழ் மொழி. இந்தக் கட்டுரை நேர்காணலுக்கு பொது மக்களிடமிருந்து கிடைத்த கருத்துகளை பார்வையிடவுள்ளது.
ஆவணப்படுத்தல் ஒரு செயல்முறை ஆகும். இந்த செயல்முறையின் முதன்மை நோக்கம் நிர்வாக ஒழுங்கை பராமரிப்பதாகும். நிர்வாகத்திற்கான பதிவுகளை வைத்திருப்பதன் நோக்கம் ஒரு நிறுவன கட்டமைப்பிலும் சமூகத்திலும் கட்டுப்பாடு, ஜனநாயகம் மற்றும் வெளிப்படைத்தன்மை மேம்படுத்துவது ஆகும். இந்த செயல்முறையின் இரண்டாம் கட்ட நோக்கம் அப்பதிவுகளை வரலாற்றுப் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆவணங்களாக பேணிப் பாதுகாப்பதாகும். நம்பகத்தன்மையான ஆவணங்களை உருவாக்குவதன் மூலம் எங்கள் உரிமைகள் மற்றும் வரலாற்றுக்கான சான்றுகளாக அவை மாற்றம் பெறும். இருப்பினும், இந்த செயல்முறை தமிழர்களுக்கு தொலைதூர மற்றும் புதிய விடயமாக உள்ளது.
தமிழர்களின் வரலாற்றை உற்று நோக்குகையில், தமிழர்களிடையே ஆவணப்படுத்தல் செயல்முறைக்கான சான்றுகள் சங்க காலத்தைக் குறிக்கின்றன. இது கிமு 6 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரை காணப்படுகின்றது. இது சேர, சோழ, பாண்டிய அரசுகள் பண்டைய தமிழகத்தை (இப்போதைய கேரளா உட்பட தமிழ் நாடு) ஆட்சி செய்த காலம். சோழ அரசு ஒரு தமிழ் அரசு ஆகும். இது உலக வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த அரசுகளில் ஒன்றாகும். இது ஈழத்தையும் (முழு தீவின் பூர்வீக பெயர், இப்போதுள்ள ஸ்ரீலங்கை) ஆட்சி செய்துள்ளது.1.

சோழ இரச்சியம் கடல் வர்த்தகம் மற்றும் வணிகம்2 ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த ஆட்சி ஆகும். கிரேக்க-ரோமானிய கையேட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பான “The Periplus of the Eritrean Sea” (1912)3 போன்ற ஆவணப் பொருட்கள் தமிழகத்தில் வாழ்ந்த தமிழருடன் மேற்கொண்ட ரோமானிய கடல் வணிகத்திற்கு சான்றாக அமைகின்றது. இதனை வில்பிரட் எச். ஷாஃப் (Wilfred H. Schoff) மொழிபெயர்த்துள்ளார். இதன் மூலக் கையேடு துறைமுகங்கள் மற்றும் கடலோர அடையாளங்களை பட்டியலிடும் கையெழுத்துப் பிரதி ஆவணமாகும். ஒரு கப்பலோட்டி (captain) கரையோரங்களில் எதிர்பார்க்கக்கூடிய தோராயமாக தலையிடும் இடைவெளிகளும் இதில் உள்ளடங்கும். கடல் வர்த்தகத்தில் உள்ள வணிக நடைமுறைகள், துறைமுகங்களில் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் (சுங்க விதிகள்), தென்னிந்தியாவில் உள்ள பண்டைய தமிழகத்திற்கு வந்த வர்த்தகர்கள் பற்றிய விவரங்கள் (ரோமன், அரேபியா, மற்றும் இன்றைய இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து வந்த வணிகர்கள்). அத்துடன் வணிக நிகழ்வுகள் மற்றும் முக்கிய வர்த்தக பொருட்கள் பற்றிய விவரங்கள் உள்ளடங்கும். தொல்பொருள் ஆராட்சியில் கண்டெடுத்த சோழ நாணயங்கள், கடல் ஆமை முத்திரைகள் மற்றும் சின்னங்கள் போன்றவை கடல் ஆமை இடப்பெயர்வு அடிப்படையில் சோழர்களின் கடல் வர்த்தகத்திற்குச் சான்றாக அமைகின்றது. வணிகம் எங்கிருக்கின்றதோ அங்கு நிர்வாகக் கட்டுப்பாட்டிற்கான ஆவணங்கள் இருக்கும். எனவே, இந்த நேரத்தில் தமிழர்கள் தங்களது ஆளுகையை கடல் வர்த்தக வணிகத்தின் மூலம் கட்டியெழுப்பினர். அவை கட்டாயம் ஆவணங்களை உருவாக்கியிருக்கும். கவலைக்குரிய விடயமாக, நிர்வாகத்தின் பரிவர்த்தனைகளைக் காட்டும் ஆவணங்கள் சமகால சமுதாயத்திற்காகப் பேணிப் பாதுகாக்கப்படவில்லை. அது படையெடுப்பு, பல்வேறு காலனித்துவம், போர் மற்றும் இடப்பெயர்வு காரணமாக இருக்கலாம். மீதமுள்ள எழுதப்பட்ட ஆவணங்கள் வெளிநாட்டினரால் உருவாக்கப்பட்டுள்ளன மற்றும் தென்னிந்தியா மற்றும் ஈழத்திலிருந்து மட்டுப்படுத்தப்பட்ட தொல்பொருள் கலைப்பொருட்களே பொது அணுக்கத்திற்கு கிடைக்கின்றன.
தமிழ் மக்கள் ஆவணவியல் துறையைப் பற்றி அறியவதற்கான தமது ஆர்வத்தை DsporA Tamil Archive இற்கு அறியப்படுத்தி வருகின்றனர். மறுபுறம், தமிழர்களிடையே சந்தேகங்கள் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வுகள் உள்ளதையும் நாங்கள் அடையாளம் காண்கின்றோம். சவால்கள் மற்றும் சந்தேகங்கள் இருந்தபோதிலும், நோர்வே மற்றும் பிற நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் இக்கருப்பொருளை ஒரு நிறுவன மட்டத்தில் ஒரு பேசு பொருளாக்கியுள்ளதை நாம் பாராட்டுகின்றோம். இக்கருப்பொருளை பேசு பொருளாக்குவது இன்றைய மற்றும் எதிர்கால தமிழ் தலைமுறையினருக்கு மிகவும் வரவேற்கத்தக்கதும் தேவையானதும்கூட.
ஈழத்தின் இறுதித் தமிழ் இராச்சியமான யாழ்ப்பாண இராச்சியம், 15 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய படையெடுப்பால் வீழ்த்தப்பட்டது. பின்னர் ஒல்லாந்தர், அதன்பின் ஆங்கிலேயர் ஆட்ச்சியாகத் தொடர்ந்தது. ஆங்கிலேயர்கள் தங்களது காலனித்துவக் காலத்தை 1948 ஆம் ஆண்டு சிங்களவரிடம் முழு ஆளுகையையும் வழங்குவதன் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்தனர். ஒரு ஆளுகையின் மூலம் பொது ஆவணங்களை உருவாக்குகின்றது. எனவே, 15 ஆம் நூற்றாண்டிலிருந்து, இலங்கைத் தீவில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு தமிழ் ஆட்சியும் இருக்கவில்லை. இதன் விளைவாக ஈழத்தில் உள்ள தமிழர்கள் சுமார் 400 ஆண்டுகளாக தமக்கென்றோர் ஆளுகையின்றி இருந்தனர். இந்த நிலை புலப்பெயர் ஈழத் தமிழர்களிடையே இன்றும் தொடர்கிறது. மறுபுறம், 1980களின் இறுதிப் பகுதி முதல் தமிழீழ சிவில் நிர்வாக அமைப்புகள்4 கட்டியெழுப்பப்பட்டு 2009 வரையிலான காலகட்டத்தில், ஈழத்தில் ஒரு தமிழ் “de facto-state” ஆளுகை மூலம் தமிழ் பொது ஆவணங்கள் உருவாக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் ஆவணவியல் துறையைப் பற்றி அறிவதற்கான தமது ஆர்வத்தை DsporA Tamil Archive இற்கு அறியப்படுத்தி வருகின்றனர். மறுபுறம், தமிழர்களிடையே சந்தேகங்கள் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வுகள் உள்ளதையும் நாங்கள் அடையாளம் காண்கின்றோம். சவால்கள் மற்றும் சந்தேகங்கள் இருந்தபோதிலும், நோர்வே மற்றும் பிற நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் இக்கருப்பொருளை ஒரு நிறுவன மட்டத்தில் ஒரு பேசு பொருளாக்கிள்ளதை நாம் பாராட்டுகின்றோம். இக்கருப்பொருளை பேசு பொருளாக்குவது இன்றைய மற்றும் எதிர்கால தமிழ் தலைமுறையினருக்கு மிகவும் வரவேற்கத்தக்கதும் தேவையானதும்கூட.
ஈழத் தமிழ் வரலாற்றின் அடிப்படையில், இச்சமூகம் ஒரு “போராட்டச் சமூகம்” ஆகும். இதன் பொருள் என்னவென்றால், ஈழத் தமிழர்களின் சமூக வளர்ச்சி பல்வேறு போராட்டங்களால் தூண்டப்பட்டுள்ளது. அதில் அனுகூலமும் பிரதிகூலமும் உள்ளன. பிரதிகூலங்களில் ஒன்று அதிகப்படியாக ஒன்றை பாதுகாக்கும் தன்மை மற்றும் புதிய விடயங்களை உள்நுழைய விடுவதில் அதிகூடிய சந்தேகத் தன்மை. ஆயினும்கூட, ஈழத் தமிழர் வரலாறு இவர்களுக்கு ஒரு தனித்துவமான பண்பை அளிக்கின்றது. அதுவே சுய அறிவூட்டல் சமூகம். அறிவைப் பகிர்வதன் மூலமும் ஒருவருக்கொருவர் கல்வி கற்பித்தல் மூலமும் இச்சமூகம் வளர்ச்சி அடைந்து வந்துள்ளது.
சமூக மட்டத்தில் ஆவணப்படுத்தல் எனும் கருப்பொருளை ஒரு பேசு பொருளாக்குவதன் மூலம் 400 ஆண்டுகளுக்கு மேலாக இல்லாமல் இருந்த செயல்முறையை மீண்டும் தமிழ் சமுக மட்டத்தில் கொண்டுவருவதற்கு வழிவகுக்கும். இதனை ஒரு பேசு பொருளாக்கும் செயல்முறை வெவ்வேறு கட்டங்களைக் கொண்டதாக இருக்கலாம். இந்த செயல்முறையின் முதல் கட்டத்தில் பின்வரும் நடவடிக்கைகள் இருக்கலாம்:
- “ஆவணப்படுத்தல்” பற்றிய விழிப்புணர்வையும் அறிவூட்டலையும் பெறுதல்.
- நிறுவன மட்டத்தில் மற்றும் சமூக மட்டத்தில் இத் துறையைப் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்ளும்போது சமூக திறன்களைப் (social skills) பேணுதல்.
- இக்கருப்பொருளை பேசு பொருளாக்குவதன் மூலம் எழும்பக்கூடிய சமூக சிக்கல்களை கையாளுதல்.
இது ஒரு சமூக செயல்முறை என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே பல ஆண்டுகள் எடுக்கக்கூடும். ஆனால் இச்சமூக செயல்முறை புலம்பெயர் வாழ் முதல் தலைமுறையினர் எம்முடன் இருக்கும் இக்காலத்தில் ஆரம்பிப்பது மிக அவசியமானது. அது இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறையின் இருப்பிற்கு இன்றியமையாதது என்பதை மறந்துவிடாதீர்கள்.
Endnote and reference:
1 Chandrakumar, Mathi. (n.a). The History of the Tamils in Ealam and
The Jaffna Kingdom. From https://www.sangam.org/ANALYSIS/ChKumar12_00.htm
2 Ramakrishna Rao, K.V. (2007) The Shipping Technology of Cholas. From https://sangam.org/wp-content/uploads/2019/04/The-Shipping-Technology-of-Cholas-2007.pdf
3அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறை மற்றும் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி முதுகலை தமிழ் ஆய்வுத் துறை இணைந்து “வரலாற்றியல் நோக்கில் தமிழர் பண்பாட்டு அடையாளங்கள்” எனும் தலைப்பில் நடாத்திய ஒரு வார பன்னாட்டுக் கருத்தரங்கம் . 08. ஆகஸ்ட் 2020 அன்று கருத்தரங்கின் 6 ஆம் நாள் அமர்வு “ரோமானியப் பேரரசு கால ஆவணங்கள் கூறும் சங்ககால வணிகச் செய்திகள்“என்ற தலைப்பில் நடாத்தப்பட்டது. இத்தலைப்பை க.சுபாஷினி வழங்கினார். அவர் பன்னாட்டு பண்பாட்டு ஆய்வறிஞர் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை, யேர்மனி இன் நிறுவனத் தலைவர் ஆவர்.
4 தமிழர் நலன்புரி மன்றம், துரண்யம். (14.03.1987). “புலிகளில் கலைமாலை சிறப்பு மலர்”. துரண்யம், நோர்வே.
பொறுப்புத் துறப்பு:
தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இதனால் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களில் வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளது.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை எழுதுவது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்குமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.
புதுப்பிப்பு│Update: 18.10.2020