நோர்வே வாழ் தமிழ்-நோர்வேயிய சிறுவர்களுக்கு வணக்கம்,

நாங்கள் புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் (DiasporA Tamil Archives – DTA). நாம் 23 ஏப்ரல் 2020 முதல் தமிழ் பண்பாட்டுப் பாரம்பரியம் மற்றும் நோர்வேயில் புலம்பெயர் தமிழரின் குடியேற்ற வரலாற்றைப் பேணிப்பாதுகாத்தல், கடத்துதல் மற்றும் பரப்புதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பணியாற்றி வருகிறோம். DTA இப்போது ஒரு இணைய வழி வள மையம் மற்றும் சமூகக்குழுச் சுவடிகளாக (Community Archives) இயங்குகின்றது.
கடந்த ஆண்டு, “ஆண் ஆதிக்க உலகில் தமிழ்-நோர்வேயியப் பெண்கள்” என்ற தலைப்பில் நடாத்திய கண்காட்சிக்குப் பின்னர், இந்த ஆண்டு “சிறுவர் மற்றும் சிறுவர் கதைகள்” என்ற கருத்தாக்கத்தில் ஒரு கண்காட்சியை ஏற்பாடு செய்ய விரும்புகிறோம்.
இக்கண்காட்சியில், தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வரும் தமிழ்ச் சிறுவர் கதைகளில் கவனம் செலுத்தி அதனைப் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறோம்.
பல நல்ல அறநெறிகளைக் கொண்ட இந்தக் கதைகளைப் பேணிப் பாதுகாக்க, 6-18 வயதுக்குட்பட்ட (பங்கேற்பாளர்கள்) பலரைத் தொடர்புகொண்டு உங்களுக்கு மிகவும் பரிச்சயமான சிறுவர் கதைகளைக் கேட்க விரும்புகிறோம். உங்கள் பதில்களை விரிவாகக் கூற, சில குறிப்பிட்ட கேள்விகள் இங்கே உள்ளன:
1. பதில்களை நோர்வேயிய மொழியில் எழுத்துரு வடிவில் எங்களுக்கு அனுப்பவும். தேவைப்பட்டால் பெரியவரின் உதவியைப் பெறவும்:
அறிமுகம் (சிறுவரைப் பற்றிய தகவல். பெரியவர் பதிலளிக்கலாம்)
- பெயர், வயது, நோர்வேயில் வசிப்பிடம், நோர்வேயில் நீங்கள் எத்தனையாவது தலைமுறை, பெற்றோரின் வேர்கள்
6-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான கேள்விகள். (சிறுவர்கள் பதிலளிக்க வேண்டும்)
- சில வாய்வழி தமிழ் சிறுவர் கதைகளை குறிப்பிட முடியுமா?
- தமிழ் சிறுவர் கதையை எங்கிருந்து/யாரிடம் கேட்டீர்கள்?
- உங்களுக்குப் பிடித்த வாய்வழி தமிழ் சிறுவர் கதை எது?
- ஏன் இது உங்களுக்கு பிடித்த தமிழ் வாய்வழி சிறுவர் கதை?
- உங்களுக்குப் பிடித்த தமிழ் சிறுவர் கதையின் செய்தி/ அறநெறி/ முக்கிய நோக்கம் என்ன?
2. நோர்வேயிய மொழியில் அல்லது தமிழ் மொழியில் ஒலிக் கோப்பு மற்றும் ஒரு படத்தை எங்களுக்கு அனுப்பவும்
நீங்கள் சொல்லும் தமிழ் சிறுவர் கதையை ஒலிப்பதிவு செய்ய வேண்டுகிறோம். சிறுவர்களுக்கான கதையை நீங்கள் நோர்வேயிய மொழியிலோ அல்லது தமிழ் மொழியிலோ சொல்லலாம். இதை எங்கள் இணையதளத்திலும் கண்காட்சிச் சுவரொட்டியிலும் பயன்படுத்த பெற்றோர்கள்/பாதுகாவலர்களின் ஒப்புதல் தேவை. இது உங்கள் படத்தைப் பயன்படுத்துவதற்கும் பொருந்தும். பெற்றோர்/பாதுகாவலர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய ஒப்புதலுக்கு தனிப் படிவத்தைப் பார்க்கவும்.
தற்போது இந்த கண்காட்சியை 23 ஏப்ரல் 2023 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட இடம் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
உங்கள் பங்களிப்பு இதில் ஒரு பகுதியாக இருக்க விரும்பினால் அதை நாம் பெருமிதத்துடன் வரவேற்கிறோம். மேலும் கண்காட்சிக்கு உங்களை வரவேற்கிறோம்!
பங்களிப்பை 29/03/2023 இற்குள் அனுப்பவும். அதனூடாக நாம் பெறவிருக்கும் உங்களது ஆக்கத்துடன் வேலை செய்ய எமக்கு போதிய காலம் கிடைக்கும்.மின்னஞ்சல்: diasporatamil@hotmail.com
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்!
உங்களிடமிருந்து பதிலுக்காக காத்திருக்கிறோம்.
நன்றி.
அன்புடன்,
மதுஷியா மற்றும் ஜென்னி
«சிறுவர் மற்றும் சிறுவர் கதைகள்» கண்காட்சிக்கான செயற்திட்ட மேலாளர்கள்
12.03.2023
புதுப்பிப்பு│Update: