Lokalhistoriewiki.no இல் தமிழ்-நோர்வேயிய உள்ளூர் வரலாற்றை எழுத ஆர்வமுள்ள அனைவருக்கும் நோர்வே வாழ் தமிழ் இளைஞர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
மதுஷியா பிரபாகரன், அமிர்தா பிலிப் மற்றும் பகலோன் நிர்மலன் ஆகியோர் 2021ம் ஆண்டு நடைபெற்ற கோடை கால விக்கிப் பட்டறையில் பங்குபற்றி இத்திட்டத்துடன் தொடர்ந்து பயணிக்கும் மூன்று தமிழ் இளைஞர்கள். ஊலா அல்ஸ்விக் (Ola Alsvik) நோர்வே உள்ளூர் வரலாற்று நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார். இவர் lokalhistoriewiki.no இல் உள்ள “தமிழ்-நோர்வேஜிய வரலாறு மற்றும் பண்பாடு” எனும் திட்டத்தின் வழிநடத்தல் குழுவில் ஒருவர் ஆவார்.
ஒக்டோபர் 2021ம் ஆண்டு நோர்வேயில் உள்ள இரண்டு தமிழ் வானொலிகளில் இவர்கள் பங்கேற்று lokalhistoriewiki.no இல் நடைபெறும் “தமிழ்-நோர்வேஜிய வரலாறு மற்றும் பண்பாடு” திட்டத்தைப் பற்றிய தகவலையும் முக்கியத்துவத்தையும் கூறியுள்ளனர்.
புலம்பெயர் தமிழர் வரலாறு மற்றும் பண்பாட்டை பதிவு செய்வதனூடாக கல்வித் திறன்கள், ஆளுமை வளர்ச்சி மற்றும் சமூக ஈடுபாடு போன்ற சமூக திறன்களை வளர்த்துக் கொள்ள இவர்கள் ஆர்வமுள்ளவர்களை அழைக்கின்றார்கள். அது மட்டுமன்றி தமிழரின் வரலாறும் பண்பாடும் நோர்வேயின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். அந்தப் பிரதிபலிப்பை உருவாக்க இது இரு பண்பாடுகளைச் சந்திக்க வைக்கும் ஒரு நல்ல தளமாகவும் அமையும் என்று கூறுகிறார்கள்.
தேன் தமிழ் ஓசை வானொலி. 26.10.2021. பெர்கன், நோர்வே
தமிழ் முரசம் வானொலி. 10.10.2021. ஒசுலோ, நோர்வே
“தமிழ்-நோர்வேஜிய வரலாறு மற்றும் பண்பாடு” திட்டம்
Lokalhistoriewiki.no என்ற இணையதளம் விக்கி தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு தளமாகும். இந்த இணையத்தளம் 2007ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது நோர்வேயிய தேசிய நூலகத்தில் (National library of Norway) உள்ள நோர்வேயிய உள்ளூர் வரலாற்று நிறுவனத்தால் (Norwegian Local History Institute) நிர்வகிக்கப்படுகிறது. எனவே, இது ஒரு நோர்வேயிய அரசு நிர்வகிக்கும் விக்கித் தளமாகும். ஆனால் lokalhistoriewiki.no இல் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் நோர்வே பொதுமக்களின் தன்னார்வப் பணி மற்றும் பங்கேற்புப் பங்களிப்பு (participatory contribution) மூலம் உருவாக்கப்பட்டவை. இதில் நோர்வேஜிய உள்ளூர் வரலாற்று நிறுவனத்தின் ஊழியர்கள் வழிகாட்டுதல் மற்றும் உதவி வழங்குபவர்களாக உள்ளனர்.
2020ம் ஆண்டு கோடை காலத்தில், நோர்வேஜிய உள்ளூர் வரலாற்று நிறுவனத்தில் (Norsk Lokalhistorsk Institutt – NLI) தமிழ்-நோர்வேஜிய வரலாற்றுத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டது. 2021ம் ஆண்டு கோடை காலத்தில் நடைபெற்ற தமிழ்-நோர்வேஜிய விக்கிப் பட்டறையில் இளம் தலைமுறை தமிழர்கள் குழு ஒன்று பங்குபற்றியது. அவர்கள் ஏறத்தாள 2 மாதங்களில் சுமார் 26 விக்கிக் கட்டுரைகள் எழுதினர்.
புதுப்பிப்பு│Update: