“நோர்வேக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களால் எவ்வாறு நோர்வேயில் தமிழ்மொழிக் கல்வி வளர்ச்சி அடைந்தது” என்ற கருப்பொருளில் ஓர் நூல் திட்டத்தை பகீரதி குமரேந்திரன் 2017ம் ஆண்டு முதல் முன்னெடுத்து வந்தார். இது நோர்வேயில் உள்ள தமிழர்களின் உள்ளூர் வரலாற்றை ஆவணப்படுத்த அவரால் சுயாதீனமாக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் ஆகும்.
இத்திட்டம் தொடர்பாக நோர்வேயிய தேசிய நூலகத்தின் நோர்வேயிய உள்ளூர் வரலாற்று நிறுவனத்துடன் (The Norwegian Institute of Local history / Norsk lokalhistorisk institutt – NLI) 2018ம் ஆண்டு முதல் தொடர்பில் இருந்து வந்தார்.
இவர் முன்னெடுத்த நூல் திட்டத்திற்கு தரவுகள் சேகரிக்கும் முகமாக 22. ஏப்ரல் 2020 அன்று “நோர்வேயில் தமிழ்க் கல்வி – இரண்டு கேள்விகள் கொண்ட தரவுத் திரட்டு” என்ற ஓர் முகநூல் இடுகையை பதிவு செய்தார். பின்னர் 23. ஏப்ரல் 2020 அன்று ஆரம்பிக்கப்பட்ட “நோர்வே வாழ் தமிழர் ஆவணம் – Archive of Tamils in Norway” என்ற முகநூல் பக்கம் மூலமாக தரவுகளை தொடர்ந்து சேகரிக்க முயற்சி எடுத்தார். இந்த முகநூல் பக்கமே காலப் போக்கில் dspora.no (DsporA Tamil Archive) எனும் இணையத்தளமாக 22. யூலை 2020 அன்று பரிணமித்தது. அதோடு நூல் திட்டமும் இணையவழிக் கட்டுரை வெளியீடாகப் பரிணமித்தது.
இந்த பின்புலத்தின் அடிப்படையில் 22. ஏப்ரல் 2020 அன்று lokalhistoriewiki.no இல் உள்ள நோர்வேயிய-தமிழர் பண்பாடு மற்றும் வரலாற்று வேலைத்திட்டத்தை மீள் செயல்படுத்த NLI நிறுவனத்தைச் சேர்ந்த ஊலா அல்ஸ்விக் (Ola Alsvik) அவர்கள் பகீரதியைத் தொடர்பு கொண்டார். NLI இன் வேலைத்திட்டத்திற்கான கடிதம் நோர்வே வாழ் மக்களுக்கு 08. யூலை 2020 அன்று “DsporA Tamil Archive” இன் முகநூல் பக்கம் வாயிலாக அறியப்படுத்தப்பட்டது. இது நோர்வே உள்ளூர் தமிழ் வரலாற்றை உருவாக்குவதற்காக அனைத்துத் தமிழர்ளையும் பங்களிப்பாளர்களாக வருமாறு அழைக்கும் NLI இன் அழைப்புக் கடித முயற்சி.
புதுப்பிப்பு│Update: 21.03.2023