நோர்வேயிய மொழியில் திவனுயா சந்திரமோகன்
அனைவரும் அறிந்திடாத பல்வேறு உள்ளூர் மரபுகளை பதிவு செய்வதே உள்ளூர் வரலாற்று வீக்கியின் முக்கிய பணியாகும். தமிழ் பண்பாடு மற்றும் வரலாறு குறித்த பணியை Lokalhistoriewikiயில் ஒரு பணிக்குழு எடுத்துள்ளது. அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் றொம்மன் வளாகத்தின் மாணவர்கள் தன்னார்வலர்களாக இங்கு அமர்ந்து கட்டுரைகளைத் திட்டமிடுகின்றனர்.



21 ஒக்டோபர் 2021 அன்று, «Et mangfold av historier: norsk-tamilenes historier» (ஒரு பன்முகத்தன்மையான கதைகள்: நோர்வே-தமிழர்களின் கதைகள்) திட்டத்திற்கான பணிக்குழு தனது முதலாவது வீக்கிப் பட்டறையை ஒசுலோவில் உள்ள Solli Plassஇல் அமைந்துள்ள நோர்வேயின் தேசிய நூலகத்தில் ஏற்பாடு செய்தது. இந்த வீக்கிப் பட்டறையில் பங்கேற்ற இளைஞர்கள் பணிக்குழுவுடன் இணைந்து ஒரு அடிமட்ட அணுகுமுறையைத் (grassroots approach) திட்டமிட்டனர். அதுவே றொம்மனில் உள்ள அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் நடைபெற்ற வீக்கிப் பட்டறைக்கு வழிவகுத்தது.



21. நவம்பர் 2021 அன்று, இத்திட்டத்திற்கானப் பணிக்குழு றொம்மனில் உள்ள தமிழ்க் கலைக்கூடத்துடன் இணைந்து அங்கு உள்ள மாணவர்களுக்கு இத்திட்டத்தின் ஒரு சுறுக்கத்தை வழங்கியது. அங்கு 10 ஆம், 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் 36 நபர்கள் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவும் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்தது. பின்னர் அவர்கள் கட்டுரைகளைத் திட்டமிடும் ஒரு கூட்டு எண்ணிமக் குழுப்பணியில் பங்கு பெற்றனர். இந்தக் குழுப்பணி உள்ளூர் அல்லது நாடுகடந்த மற்றும் வரலாறு சார்ந்த மூன்று வெவ்வேறு கருப்பொருட்களைக் கண்டறிவதை அடிப்படையாகக் கொண்டது. பின்னர் அவர்கள் கட்டுரைகளின் அமைப்பு மற்றும் பொருத்தமான படங்களை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று திட்டமிட்டனர். இப்பயிற்சிப் பட்டறையின் முடிவில், அவர்கள் தங்கள் குழுப்பணிகளை அனைவருடனும் பகிர்ந்து கொண்டனர்.




தமிழ் பண்பாடு மற்றும் வரலாறு சார்ந்த சொற்களஞ்சியக் கட்டுரைகளை (lexicon articles) எழுதுவதற்கான தொடக்கப்புள்ளியை இக்குழுப்பணி நோக்காக் கொண்டது. அதனூடாக நோர்வே சமூகத்தில் உள்ள ஏனைய பண்பாடுகள் தமிழ் பண்பாடு மற்றும் வரலாறு குறித்த தமிழ் கண்ணோட்டத்தை பெறலாம். பட்டறையின் முடிவில் பல சுவாரசியமான தலைப்புகள் வெளிவந்தன. சுமார் 20-25 நிமிடங்களில் மூன்று கட்டுரைகளைத் திட்டமிட்ட இளைஞர்களின் செயல்திறனைக் கண்டு பணிக்குழு வியந்து ஆச்சரியப்பட்டது. இளைஞர்கள் திட்டமிட்ட கட்டுரைகளை எழுத்து வடிவில் கொண்டுவர, அவர்களுடன் தொடர்பில் இருக்கப் பணிக்குழு எதிர்பார்க்கின்றது.
அன்றைய தினம் உணவு மற்றும் பானத்துடன் கூடிய ஒரு சமூகச் சந்திப்பாகவும் அமைந்தது. எதிர்காலத்தில் மேலும் பல வீக்கி பட்டறைகளை ஏற்பாடு செய்ய நாடு முழுவதும் உள்ள தமிழ் பள்ளிகள் மற்றும் அமைப்புகளின் ஒத்துழைப்பை ஏற்படுத்த இப்பணிக்குழு ஆர்வாக உள்ளது.
நிகழ்கால மற்றும் எதிர்காலத்திற்கான மதிப்புமிக்க பணிகளில் இளைஞர்கள் பங்களிக்கத் தயாராக இருப்பதை இந்த வீக்கிப் பட்டறையில் காணக்கூடியவாறு இருந்தது. வரலாற்றை எழுதுவதற்கான அவர்களின் பணி இழக்கப்படவிருக்கும் கதைகளை சேமித்துக் காக்க உதவும். புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் அவர்களின் ஆர்வம், நேரம், அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்புக்கு அன்பையும் வாழ்த்துக்களையும் மகிழ்வுடன் தெரிவிக்கின்றது.
புதுப்பிப்பு│Update: 11.01.2022