தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் தமிழ் அடையாளம்

ஒரு கொள்கை ஆவணத்திற்கான கோரிக்கை

புலம்பெயர் நாடுகளில் உள்ள மதிப்பிற்குரிய அரசியல் மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்புகளிற்கு. இது ஒரு தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் தமிழ் அடையாளம் குறித்த கொள்கை ஆவணத்திற்கான ஒரு தாழ்மையான வேண்டுகோள்.

வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாக்கும் பணிகளைக் கொண்ட நிறுவனங்களான ஆவணக்காப்பகங்கள், நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கும் அரசியல் கொள்கை ஆவணத்திற்கும் எந்த வகையில் தொடர்பு உள்ளது என்று நீங்கள் கேட்கலாம்.

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் வடகிழக்கு மற்றும் தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், இவர்கள், குறிப்பாக இனக் கலவரம், இனப்படுகொலை மற்றும் போரினால் அகதிகளாக 1980கள் தொடக்கம் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள், தாம் புலம்பெயர்ந்த நாடுகளில் “புலம்பெயர் தமிழர்” (“Tamil diaspora») என்ற ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கியுள்ளனர். புலம்பெயர் தமிழர் என்பது ஒரு நாடுகடந்த சமூகமாகும். இது பல்வேறு உறவுப் பாலங்களைக் கொண்டுள்ளது. பல நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழ் சமூகங்கள், தாயகம் மற்றும் புலம்பெயர்ந்த  நாட்டில் உள்ள பிரதான சமூகத்திற்கு இடையேயான தொடர்புகளைக் கொண்டுள்ளது.

புலம்பெயர் தமிழ் சமூக கட்டமைப்பு (Tamil diaspora social structure)  ஆயிரக்கணக்கான அன்பு உள்ளங்களின் அளவிட முடியா நேரம், வளங்கள் மற்றும் தன்னார்வப் பணிகள் மற்றும் பங்களிப்புகள் ஊடாக உருவாக்கப்பட்டது. முதல் தலைமுறை தமிழர்களால் உருவாக்கப்பட்ட அடித்தளம் இன்று இளம் தலைமுறை தமிழர்களால் தொடரப்படுகிறது.

ஒரு ஆவணக் களஞ்சியக் கண்ணோட்டத்தில், “தமிழ் தேசியம்” மற்றும் (Tamil Nationhood) இந்த புலம்பெயர்ந்த சமூகத்திற்கான “புலம்பெயர் தமிழ் அடையாளம்” (Tamil diasporic identity) பற்றிய பொதுவான ஒரு கொள்கை ஆவணம் தவறப்பட்டு வருகின்றது. அல்லது பொதுமக்களுக்கு கிடைக்காமல் உள்ளது. இது ஒரு பொதுவான தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் தமிழ் அடையாளத்தை பாதுகாக்கும் (protect), பராமரிக்கும் (maintain), பேணிப் பாதுகாக்கும் (preserve) செயல்பாடுகளிற்கு அடிப்படையாக அமையும் ஒரு ஆவணமாகும். இருப்பினும், புலம்பெயர் நாடுகளில் உள்ள பெரும்பாலான தமிழ் அமைப்புகள் யாப்பு மற்றும் பிற மேலாண்மை ஆவணங்களைக் கொண்டு இயங்குகின்றன. ஆயினும்கூட, தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் தமிழ் அடையாளம் பற்றிய ஒரு பொதுவான கொள்கை குறித்து வழிகாட்டுதல்களை வழங்கும் ஆவணத்தின் பற்றாக்குறை உள்ளது. ஏனெனில் இந்த  புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் நடவடிக்கைகளும் செயல்பாடுகளுமே நிர்வாக பதிவுகளையும் (administrative records) வெளியீடுகளையும் (publications) உருவாக்குகின்றன. அவை தமிழ் தேசியத்தின் இருப்பு, தொடர்ச்சி மற்றும் இந்த நாடுகடந்த சமூகத்தின் புலம்பெயர் தமிழ் அடையாளத்திற்குமான ஆதார மூலங்களாகின்றன (evidence). இந்த பதிவுகளும் வெளியீடுகளும் ஆவணக்காப்பகங்கள், நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் நீண்ட கால பேணிப் பாதுகாப்பிற்காக கையகப்படுத்தப்படும் மூலப் பொருட்களாகின்றன.

ஆவணக் காப்புக் களஞ்சியங்களான ஆவணக்காப்பகங்கள், நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் நினைவக நிறுவனங்கள் ஆகும். அவை வரலாற்று சான்றுகள், அறிவு மற்றும் ஆராய்ச்சிக்குத் தேவையான ஆதார மூலங்களைப் பாதுகாத்து பரப்புகின்றன. இந்த ஆவணப் பொருட்கள் ஒரு சுழற்சி விளைவாக (as a circular effect) தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் தமிழ் அடையாளத்தை பராமரிப்பதோடு சிதைவை தடுக்கும் திறனைக் கொண்டுள்ளன.

தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் தமிழ் அடையாளத்தை பாதுகாக்கும் (protect) மற்றும் பேணிப் பாதுகாக்கும் (preserve) செயல் ஒரு சவாலான நீண்ட கால திட்டமாகும். இந்த சவால் மிக்க நீண்ட கால திட்டத்தில் ஒரு எழுதப்பட்ட கொள்கை ஆவணம் அடிப்படையான, பொதுவான புரிதலில் எழக்கூடிய தேவையற்ற மற்றும் நேரத்தை விரையப்படுத்தும் சவால்களை தவிர்க்கும். வரையறுக்கப்பட்ட அடிப்படை எல்லைகள் (boundaries), மதிப்புகள் (values) மற்றும் கோட்பாடுகள் (principles) பல்வேறு அமைப்புகளிற்கு இடையே ஒரு பொதுவான புரிதலை உருவாக்கும். இது சிக்கல் தீர்ப்பை (conflict solving) விட வேலைப் பணியை அதிகரிக்க வழி வகுக்கும். இது நம்பிக்கையைக் கட்டி எழுப்பி, கூட்டு முயற்சி (collaboration) மற்றும் ஒத்துழைப்பிற்கான (co-operation) பாதையை வகுக்கும்.

படம்: தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் அடையாளம் பற்றிய பொதுவான கொள்கை ஆவணம். அது அறிவு மற்றும் ஆராய்ச்சிக்கான வரலாற்று சான்றுகள் மற்றும் ஆதாரப் பொருட்களாக மாறும் பதிவுகள் மற்றும் வெளியீடுகளை உருவாக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக உள்ளது. அவை மீண்டும் அடையாளத்தைத் தக்கவைத்து, சிதைவைத் தடுக்கும்.

வரலாறு என்பது, பல விடயங்களுடன், கடந்த கால அரசியல் செயல்பாடுகளின் விளைவாகும். தமிழில் அரசியல் எனும் சொல் அரசு + இயல் என்ற இரு கூறுகளால் இணைக்கப்பட்டது. இச்சொல் தேசபரிபாலன நெறி என்று பொருள்படும்; தேசிய நடத்தை விதி (national code of conduct) (University of Madras, 1924-1936; சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி, n.a.). தமிழ் தேசியத்திற்கான தேசிய நடத்தை நெறிமுறை மற்றும் இந்த நாடுகடந்த சமூகத்திற்கான புலம்பெயர் தமிழ் அடையாளம் பற்றிய பொதுவான கொள்கை ஆவணம் பற்றாக்குறையாக உள்ளது, அல்லது கிடைக்கப் பெறாமல் உள்ளது, அல்லது அதனை எழுத்து வடிவில் கொண்டு வர பல தடைகளை எதிர்கொள்கிறது.

தமிழ் ஆட்சி

தமிழர்கள், குறிப்பாக ஈழத்தமிழர்கள், தமது புலம்பெயர் வாழ்க்கை நிலையை வெளிப்படுத்த பின்வரும் கூற்றை பொதுவாகப் பயன்படுத்துவார்கள்: “தமிழன் இல்லா நாடில்லை. தமிழனுக்கு என்றோர் நாடில்லை.”

1619ம் ஆண்டு (Britannica) ஈழத்தில் யாழ்ப்பாண இராச்சியம் வீழ்ச்சியடைந்த பின்னர், தமிழர் ஆட்சியின் எழுச்சி 1980 களின் இறுதிப் பகுதிகளிலிருந்து மே 2009 வரை இருந்தது. அக்காலகட்டத்தில் «தமிழீழ சிவில் நிர்வாக அமைப்புகள்» கட்டியெழுப்பப்பட்டன. அதுவே தமிழீழ நடைமுறை அரசு ஆகும். சங்க காலம் தொடக்கம் (கிமு 600 – 300 கிபி) இருந்து வந்த தமிழர் ஆட்சியின் இழந்த தொடர்ச்சியை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் சமூக கட்டமைப்புகள் தமிழீழ நடைமுறை அரசில் உருவாக்கப்பட்டது. இங்கு நீதித்துறை, நிதித்துறை, காவல்துறை, இராணுவப் படைகள், கல்வித்துறை, வெளிவிவகாரத்துறை, சுங்கத்துறை, பொருளாதார மேம்பாட்டிற்கான பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் மற்றும் பல பிரிவுகள் உருவாக்கப்பட்டன. அவை ஒரு நிலையான (sustainable) தமிழ் சமுதாயத்தை உருவாக்க தமிழீழத்தில் கட்டியெழுப்பப்பட்டன. இத்தகைய ஒழுங்கமைக்கப்பட்ட நடைமுறை அரசிற்கான கட்டமைப்பை உருவாக்க, அவர்கள் பொதுவான சட்ட விதிமுறைகள் மற்றும் நெறிகள், அதோடு ஒரு நிர்வாகத்தின் பல்வேறு நிலைகளில் மேலாண்மை ஆவணங்களை பயன்படுத்தினார்கள் என்பது வெளிப்படையானது. இந்த ஆவணங்கள் தமிழீழத்தில் ஒரு “தமிழ் தேசியத்தை” பாதுகாக்க பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அத்துடன் அந்த ஆவணங்கள் தமிழீழத்தில் தமிழ்த் தேசியத்திற்கு சேவை செய்வதற்கும், அதைப்  பாதுகாப்பதற்கும் அடிப்படையாக அமைந்திருக்கும். அதோடு ஒவ்வொரு அமைப்புகளின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யவும் பயன்படுத்தப்பட்டிருக்கும். தமிழீழ நடைமுறை அரசில் இருந்த  அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட பதிவுகள் மற்றும் வெளியீடுகள் 1980 களில் இருந்து மே 2009 வரை இருந்த  தமிழ் சமூகக் கட்டமைப்பின் பல்வேறு கதைகளை (narratives) இந்த எஞ்சி இருக்கும் ஆதார மூலங்களே கூறுகின்றன.

அந்தக் காலகட்டத்தில், தமிழீழ நடைமுறை அரசிற்காக உருவாக்கப்பட்ட பொதுவான கொள்கை பெரும்பான்மை புலம்பெயர் தமிழர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தத் தாக்கம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்காக புலம்பெயர் தமிழர்களின் கவனத்தையும் முயற்சியையும் ஆக்கிரமித்தது. எனவே, ஒரு நாடு கடந்த சமூகமான புலம்பெயர் தமிழ் சமூகம் தமக்கான பொதுவான கொள்கையை வரைவதற்கான நேரமோ அவசியத்தையோ உணர்வதற்கான சமூகத் தேவை இருக்கவில்லை.

மே 2009 இற்கு பின்னர்

தமிழீழ நடைமுறை அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், புலம்பெயர் மற்றும் தாயகம் ஆகிய இரண்டிலும் “தமிழ் தேசியம் என்றால் என்ன” மற்றும் “தமிழ் தேசியத்தின் எல்லைகள் என்ன” என்பதில் பல்வேறு கண்ணோட்டங்கள் உள்ளன. இருப்பினும், நிர்வாகத்தில் அடிப்படை கொள்கைகள் மற்றும் மதிப்புகளுக்கு ஒரு பொதுவான அரசியல் கொள்கை தேவைப்படுகிறது. அரசியல் என்பது “an art of state” என்ற வகையில் இந்த எல்லைகளை தெளிவுபடுத்த வேண்டும்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் தமிழ் அடையாளத்தை பராமரிப்பதற்கான ஒரு பொதுவான கொள்கை என்ன? புலம்பெயர் தமிழ் அடையாளம் மற்றும் ஈழத்தில் தமிழ் அடையாளம் பற்றி தமிழர்களிடையே (புலம்பெயர் மற்றும் தாயகம்) உள்ள பல்வேறு கண்ணோட்டங்கள் என்ன? ஒரு தமிழ்த் தேசியத்தைப் பற்றி தமிழர்கள் (புலம்பெயர் மற்றும் தாயகம்) மத்தியில் உள்ள பல்வேறு முன்னோக்குகள் என்ன? புலம்பெயர் தமிழர்களின் கொள்கை எந்த வகையில் ஈழத்தில் வாழும் தமிழர்களுடன் தொடர்பு பட்டுள்ளது? தமிழ் தேசியம் அல்லது புலம்பெயர் தமிழ் அடையாளம் குறித்த கொள்கைகள், மதிப்புகள் மற்றும் செயல்பாடுகளில் “ஏற்றுக்கொள்ளத்தக்கது” மற்றும் “எல்லை மீறல்” என்பதற்கான இடையக வரி (buffer line) என்ன?

இது போன்ற விடயங்களை விவரிக்கும், விவாதிக்கும் அல்லது வரையறுக்கும் பொதுவான கொள்கை ஆவணம் இருப்பின், புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு புலம்பெயர் தமிழ் அடையாளத்தையும், தமிழ் தேசியத்தையும் பொதுவான புரிதலுடன் பாதுகாக்கவும் (protect) பேணிப் பாதுகாக்கவும் (preserve) உதவும்.

தமிழீழ நடைமுறை அரசிற்காக வரையப்பட்ட கொள்கை பெரும்பாண்மை புலம்பெயர் தமிழ் அமைப்புகளில் தாக்கத்தை உருவாக்கியது. அதனால் பெரும்பாண்மை புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அதில் சார்ந்திருந்தன. ஆனால், அவை மே 2009ம் ஆண்டு அரசியல்-இராணுவ தலைமையின் (politico-military leadership) வீழ்ச்சிக்குப் பின்னர் ஒரு தலைமை (leadership) அல்லது மத்திய ஒருங்கிணைந்த அமைப்பு (central unified body) இல்லாத நிலையில் பல்வேறு சவால்களையும் தடைகளையும் எதிர்கொள்கின்றன. இந்த நிலையில், புலம்பெயர் நாடுகளில் உள்ள அரசியல் மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்புகள் எப்படி தமிழ் தேசியம் மற்றும் தமிழ் புலம்பெயர் அடையாளம் பற்றிய ஒரு பொதுவான புரிதலுக்கான வரைவை முன்னெடுக்க முடியும் என்ற சந்தேகம் பரவலாக உள்ளது.

வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்ட பல்வேறு குழுக்களைக் கொண்டிருப்பது ஒரு சமூகத்தின் இயல்பு. உதாரணமாக, “தமிழ் புத்தாண்டு எப்போது” என்பது தமிழ் சமூகத்தில் விவாதிக்கப்படும் கேள்விகளில் ஒரு எடுத்துக்காட்டு. மற்றொன்று “தமிமீழம்” மற்றும் “ஈழம்” என்ற சொற்பதங்களின் குழப்பம், தவறான புரிதல் மற்றும் பரிமாறப்பட்ட பயன்பாடு (exchanged use).

இத்தகைய கருப்பொருட்களுக்கு தர்க்க ரீதியான மற்றும் வரலாற்று ரீதியான சான்றுகள் இருந்தாலும், ஒருங்கிணைந்த தலைமை இல்லாதபோது ஒருமித்த முடிவுக்கு வருவது  சவாலான ஒரு விடயகாக இருக்கலாம். எனினும், புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு ஒரு தலைமை அல்லது மத்திய ஒருங்கிணைந்த அமைப்பு இல்லாத நிலை தமிழர்களின் எதிர்கால தலைமுறைகளுக்கும் தொடர வேண்டும் என்பது அவசியமில்லை. உதாரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐ.நா. உருவாக்கப்பட்டது. அதேபோல் பல்வேறு நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழ் சமூகங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்க ஒரு இணக்கத்திற்கு வருவது தனிநபர்களின் தன்மையில் தங்கியுள்ளது. இருப்பினும், இதற்கான முயற்சிகள் பல முறைகள் எடுக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இச்சவாலுக்கு புலம்பெயர் மண்ணில் உள்ள நிர்வாகப் பண்பாடு ஒரு காரணியாக இருக்கலாம். 1980களிற்கு முன்னர் புலம்பெயர் செயல்பாடுகளில் குழு நிர்வாகப் பண்பாடு இருந்து வந்தது. 1980களின் பிற்பகுதிகளிலிருந்து தமிழீழ நடைமுறை அரசு உருவாகத் தொடங்கிய காலத்தில், அங்கு குழுக்களின் குழு (team of teams) (சேதுராமலிங்கம், 2020) கட்டமைப்பு வடிவம் பெறத் தொடங்கிது. அதே சம காலத்தில் புலம்பெயர் மண்ணில் பொறுப்பாளர் நிர்வாகப் பண்பாடு ஒருவாக்கப்பட்டு காலப்போக்கில் அது ஒரு பொறுப்பாளர் மைய நிர்வாகப் பண்பாடாக வடிவம் பெற்றது. ஆனால் மே 2009 இற்கு பின்னர் மீண்டும் குழு நிர்வாகப் பண்பாடு மெல்ல மெல்ல புலம்பெயர் மண்ணில் வளர்ந்து வருகின்றது.

இச்சூழலில் தேசிய மட்டத்தில் ஒரு பொதுவான கொள்கையை வரைவதில் சிரமம் இருந்தாலும், புலம்பெயர் நாடுகளில் கல்வி, சுகாதாரம், பொழுதுபோக்கு போன்ற சமூக மட்டக் கட்டமைப்புகளில் குழுக்களின் குழு (team of teams) பண்பாடு வடிவம் பெற்று வருகின்றது. புலம்பெயர் தமிழ் சமூகம் இந்த மாதிரி வடிவங்களையும் உருவாக்கியுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த வடிவங்களை அரசியல் கட்டமைப்பிலும் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

ஒரு பொதுவான கொள்கை ஆவணத்தை வரைவதற்கான ஒரு செயல்முறைச் சிந்தனை

1987ம் ஆண்டு லெப்.கேணல் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதி நாட்களிலிருந்து சில வரிகள்:

“ஒன்றை பொதுவாக தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று உள்ள, இன்று எமக்கு ஏற்பட்டுள்ள இழி நிலையை, அடக்குமுறையை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள தவறினால் நாளை எமது வரலாறு மிக பரிதாபத்திற்குரியதாக இருக்கும். நாம் இன்று அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எமது அடிப்படை உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதை நீங்கள் ஒரு போதும் மறந்துவிடக் கூடாது.” – லெப். கேணல் திலீபன்[1]

புலம்பெயர் தமிழ் அடையாளம் மற்றும் தமிழ் தேசியம் பற்றிய பரப்பில் ஒரு அம்சத்தை நாம் உற்று நோக்க இந்த மேற்கோளை பகுத்தாய்வு செய்தால்:

  1. பல ஆண்டு காலமாக தாயகம் வாழ் தமிழர்களின் (புலம்பெயர் தமிழர்களுக்கு அல்ல) “இழி நிலை மற்றும் அடக்குமுறை நிலை” என்ன?
  2. தாயகம் வாழ் தமிழர்கள் ஏன் மீண்டும் மீண்டும் ஒடுக்கப்படுகிறார்கள் (புலம்பெயர் தமிழர்களுக்கு அல்ல)?
  3. தாயகம் வாழ் தமிழர்கள் முன்வைக்கும் அடிப்படை உரிமைகளுக்கான கோரிக்கைகள் என்ன (புலம்பெயர் தமிழர்களுக்கு அல்ல)?
  4. நமது வரலாறு எதிர்காலத்தில் பரிதாபத்திற்குரியதாக மாறாமல் இருக்க எப்படி தடுக்கலாம்? – இது திடீரென புலம்பெயர் தமிழ் சமூகம் மற்றும் தாயகம் வாழ் தமிழர்கள் இருவருக்கும் பொதுவானதாக வருகின்றது.

தமிழீழ நடைமுறை அரசின் வீழ்ச்சிக்கு முன்னும் பின்னும் புலம்பெயர் மண்ணில் பல தமிழ் அரசியல் அமைப்புகள் இருந்து வருகின்றன. தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் தமிழ் அடையாளம் குறித்து அவர்களுக்கு பொதுவான புரிதல் இருக்கும் வரை, புலம்பெயர் நாடுகளில் பல தமிழ் அரசியல் மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்புகள் இருப்பது ஒரு சிக்கல் அல்ல. அவர்களுக்கு ஒரு பொதுவான புரிதல் இருக்கும் வரை, பல பக்கங்களிலிருந்தும் ஒரே மற்றும் பொதுவான நோக்கத்தை முன்வைப்பதன் மூலம் அது ஒரு பலமாக இருக்குமே தவிர பலவீனமாகாது. எந்த ஒரு கிழங்கு வகை மலரைப் போலவே, காந்தளும் விழவிழ வளர்ந்து பூக்கும். அது உலகின் அனைத்து மூலைகளிலும் வளரும். எனவே, புலம்பெயர் தமிழ் நிர்வாகக் கட்டமைப்புகள் சமூக மாற்றங்களுக்கு நிகராக தமது நிர்வாகப் பண்பாட்டையும் கட்டமைப்பையும் மாற்றியமைக்க வேண்டும்.

இருப்பினும், பொதுவான புரிதல், அணுகுமுறை மற்றும் மனநிலையில் அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன. அதில் ஒரு வகையான அணுகுமுறையும் மனநிலையும்: “தமிழ் தேசியத்தை பாதுகாக்க (protect) அல்லது பேணிப் பாதுகாக்க (preserve) அவர்களால் முடியவில்லை, நாங்கள் அதை செய்கிறோம்.” மறுபுறம் «ஆம், அவர்களுக்கு வேறொரு முன்னோக்கு மற்றும் அணுகுமுறை உள்ளது. ஆம், அவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்தார்கள். ஆனால் நாம் தமிழ்த் தேசியத்தை பாதுகாக்க அல்லது பேணிப் பாதுகாக்க புதிய வழிமுறையில் முயற்சி செய்ய விரும்புகிறோம். எவ்வாறாயினும், நாங்கள் ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவிற்கு தயாராக உள்ளோம்.»

இறுதியில் தமிழ் தேசியத்தின் பாதுகாப்பும் பேணிப் பாதுகாப்பும் இவ்விரு அணுகுமுறை மற்றும் மனநிலைகளில் உள்ள சாராம்சம் ஆகின்றது. ஆனால் இதில் ஒன்று மட்டுமே ஒத்துழைப்பு, கூட்டுறவு மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்கின்றது. இதில் ஆபத்து என்னவென்றால், இளைய தலைமுறை தலைமை ஆதிக்கம் மற்றும் பிரிவினைப் பண்பாட்டைக் கொண்ட ஒரு தலைமையை தொடர்ந்து சந்தித்தால் தாம் அறியாமலேயே அதே அணுகுமுறையையும் மனநிலையையும் பற்றிக்கொள்ளும் சூழல் உருவாகும்.

குழுக்களின் குழுச் செயல்பாடு

புலம்பெயர் தமிழ் சமூகத்தில் உள்ள முதன்மை அரசியல் மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்புகளைக் கொண்டு ஒரு குழு ஒன்றை அமைக்கலாம். அது பல்வேறு நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அது ஒரு கொள்கை ஆவணத்தை வரைவதற்கு பொதுமக்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடமிருந்து யோசனை மற்றும் முன்னோக்குகளை சேகரிக்கலாம். சேகரித்த சமூகத் தரவுகளுடன் வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் இக்குழு தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் தமிழ் அடையாளத்திற்கான கொள்கை ஆவணத்தை வரையலாம். அந்த வரைவில் சமூகத்தில் உள்ள பன்முகத்தன்மைக்கு முகம் கொடுக்க பல்வேறு அம்சங்கள் மற்றும் முன்னோக்குகளை உள்ளடக்கலாம். ஆனால் அடுத்த 5-10 ஆண்டுகளுக்கு ஒரு பொதுவான கொள்கைக்கான ஆலோசனையை முன்வைக்க வேண்டும். இந்த வரையப்பட்ட கொள்கை ஆவணம் சமூகத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வட்டத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் மற்றும், புலம்பெயர் தமிழ்ப் பொது மக்களின் பார்வைக்கு விடலாம். அது அவர்கள் தமது கருத்துக்களை வழங்குவதற்கான வாய்ப்பைக் கொடுக்கும். இறுதி செய்யப்பட்ட கொள்கை ஆவணம் முதன்மை அரசியல் மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்புகளைக் கொண்ட குழுவால் பொதுவாகவும் கூட்டாகவும் ஏற்கொள்ளப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும். இந்த ஆவணம் ஒவ்வொரு 5-10 வருட கால எல்லைக்கு மறு பரிசீலனை செய்து புதுப்பிக்கப்பட வேண்டும்.

ஒரு ஒட்டுமொத்தக் கொள்கையை எழுத்து வடிவில் உருவாக்கும் செயல்முறை பல படிநிலைகளை கொண்ட ஒரு செயல்முறையாகும். அது சில ஆண்டுகள் நீடிக்கும் பணியாக அமையும். இந்த செயல்முறை முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டால் சிறந்தது. ஆனால், இது முதல் தலைமுறைத் தமிழர்களுக்கு ஒரு சவாலான மற்றும் உணர்ச்சிவசமான செயல்முறையாக இருந்தால், இளைய தலைமுறையினர் இந்த தொடர் ஓட்டத் தடியை (relay stick) பெற்றுக் கொள்ளும்போது திறந்த அணுகுமுறையையும் மனநிலையையும் கொண்டிருக்கத் தயாராக இருக்க வேண்டும்.

ஒரு கொள்கை ஆவணம் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு இன்றியமையாதது. இது தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் தமிழ் அடையாளத்தின் வரலாறு, ஒற்றுமை மற்றும் அடையாளத்தை பாதுகாக்கவும் பராமரிப்பதற்கான ஒரு அடிப்படை ஆவணம் ஆகும். இல்லையெனில், தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் தமிழ் அடையாளத்தின் கொள்கை தனிநபர்களின் தோள்களில் மட்டுமே தங்கியிருந்து வாய்வழியாகக் கடத்தப்படும் பாரம்பரியமாக இருப்பின் சிதைந்துவிடும். தமிழர்களின் முதல் மற்றும் இரண்டாம் தலைமுறையினர் ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவு மதிப்புகளை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் சென்றுக் கடத்த எழுதப்பட்ட கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையெனில் தற்போதைய இளம் தலைமுறை தலைமைக்கு வரலாறு மீள் நிகழும் (history will repeat).

வரைகலை: குழுக்களின் குழு, DTA 2021.

ஆவணக்காப்பு (Archive)

தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் தமிழ் அடையாளத்திற்கான ஒரு பொதுவான கொள்கை ஆவணம் சில பொதுவான எல்லைகளை அமைக்க அடிப்படையாக அமையும். இது ஒவ்வொரு புலம்பெயர் நாட்டில் உள்ள எந்தவொரு உள்ளூர் தமிழ் அமைப்பிற்கும் “தமிழ் தேசியம்” மற்றும் “புலம்பெயர் தமிழ் அடையாளம்” பற்றிய சில வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான ஆவணமாக இருக்கும். ஏனெனில், தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகள் நிர்வாகப் பதிவுகள் மற்றும் வெளியீடுகளை தயாரிக்கின்றன. அவை தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் தமிழ்  அடையாளத்தின் இருப்பு மற்றும் தொடர்ச்சியை ஆவணப்படுத்துகின்றன. ஒரு பொதுவான கொள்கை ஆவணமின்றி, புலம்பெயர் தமிழர்கள் சிறிய தீவுகளாக செயல்படுவதன் மூலம் சமூக ரீதியாக ஊனமுற்ற நிலைக்குத் தள்ளப்படுவர். இத்தகைய நிலை இந்த நாடுகடந்த சமூகத்தின் புலம்பெயர் தமிழர் என்ற அடையாளத்தில் உள்ள ஒற்றுமையை (solidarity) பாதிக்கும்.

ஒரு பொதுவான கொள்கை ஆவணம் அரசியல் அல்லது அரசியல் சார்பற்ற அல்லது எந்தவொரு தனிநபருக்கும் உதவியாக இருக்கும். அது “தமிழ் தேசியம்” மற்றும் “புலம்பெயர் தமிழ் அடையாளம்” ஆகியவற்றில் எல்லை மீறல் (violation) அல்லது அறியாமை (ignorance) நிலை பற்றி கவலையின்றி செயல்பட உதவும். அது சமூகத்தை வலுப்படுத்தி தமது எல்லைகளை அறிந்து சுதந்திரமாக செயல்பட தன்நம்பிக்கையை அளிக்கும்.

ஒரு பொதுவான புரிதல் பன்முகத்தன்மைக்கு (diversity) மதிப்பளித்து உறவுப் பாலங்களை கட்டியெழுப்பி பராமரிக்கும். இது சவால்களை நிர்வகிக்கவும் எதிர்கொள்ளவும் வளம் சேர்க்கும். இது தமிழ் தேசியம் மற்றும் புலம்பெயர் தமிழ் அடையாளத்தை பாதுகாப்பதற்கும் (protect) பேணிப் பாதுகாப்பதற்கும் (preserve) புதிய தீர்வுகள் மற்றும் செயல்பாடுகளுக்கான பாதையையும் வகுக்கும்.

வரைகலை: Nishansanjee (2020)

அடிக்குறிப்பு

  1. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
  2. புனர்வாழ்வு என்ற போர்வையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும்.
  3. இடைக்கால அரசு அமைக்கும் வரை இதுபோன்ற அனைத்து புனர்வாழ்வுகளும் நிறுத்தப்பட வேண்டும்.
  4. வடகிழக்கு மாகாணத்தில் புதிய காவல் நிலையங்கள் மற்றும் முகாம்களை திறப்பதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும்.
  5. இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறையினர் தமிழ் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் இருந்து வெளியேற வேண்டும் மற்றும் இலங்கை அரசாங்கம் கொடுத்த ஆயுதங்களை இந்திய இராணுவத்தின் மேற்பார்வையில் திரும்பப் பெற வேண்டும். (தமிழாகம்)

உசாத்துணை

புதுப்பிப்பு│Update: 04.10.2021

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: