«உண்மையான மற்றும் நம்பகத்தன்மையான ஆவணங்கள் பலத்த அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி அழிக்கப்படும் நிலையும் காணப்படுகின்றது» என்று 11 நவம்பர் 2020 அன்று dspora.no ல் வெளியிடப்பட்ட «தமிழ் அமைப்புகள்: எவ்வாறு புலத்தில் ஆவணங்களை பாதுகாப்பாகப் பேணிப் பாதுகாக்கலாம்?» என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டது.
தமிழ் ஆவணங்கள் தமிழ் பண்டைய வரலாறு, தமிழ் மொழி, கலை, இசை, பண்பாடு, அரசியல் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டம் போன்றவற்றை பிரதிபலிக்கும் ஆவணங்களாக இருக்கும். பல்வேறு வகையான தமிழ் ஆவணங்கள் ஒரே விதமான அச்சுறுத்தல்களுக்குள்ளாகி அழிக்கப்படுவது என்பது அர்த்தம் அல்ல. ஒருபுறம், போதிய அளவு புரிதல் இல்லாமை, அறியாமை அல்லது அலச்சியத்தால் தமிழ் ஆவணங்கள் அச்சுறுத்தப்பட்டு அழிக்கப்படுகின்றன. மறு புறம், திட்டமிட்ட தமிழ் பண்பாட்டு இனவழிப்பிற்கு (cultural genocide) உள்ளாகி அழிக்கப்படுகின்றன.

ஒரு செயல்பாட்டின் விளைவாக ஒரு ஆவணம் உருவாக்கப்படுகிறது. அது அந்த குறிப்பிட்ட செயலுக்கான சான்றாக அமைகின்றது. ஒரு செயல்பாட்டை ஒரு தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் மேற்கொள்ளலாம். தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் ஈழம்1, தமிழகம் மற்றும் புலம்பெயர் உலகத் தமிழர் (Tamil diaspora)2 ஆகியவற்றைத் தளமாகக் கொண்டிருக்கும். ஒரு அமைப்பின் உள்ளக ஆவணகத்தில் உள்ள ஆவணங்கள் சமூகத்துடனான தொடர்பாடலின் விளைவாக உருவாக்கப்படுகின்றன. தனிநபர் ஆவணங்கள் சமூகத்துடனான தொடர்பாடலின் விளைவாக உருவாக்கப்படலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். இந்த ஆவணங்களின் தோற்றம் தோற்றுவிக்கும் ஒரு அமைப்பு அல்லது ஒரு நபராக இருக்கும். இந்த நிறுவன மற்றும் தனிநபர் ஆவணங்களில் பல்வேறு ஊடகங்களைத் தழுவிய ஆவணங்கள் இருக்கும். அவை எழுத்துரு, ஒலி, ஒளி அல்லது பிற ஊடக வடிவங்களில் இருக்கலாம். அவை அனலாக் (analogue) அல்லது எண்ணிம (digital) ஊடகத்தில் இருக்கலாம். இந்த ஆவணங்கள் ஒரு அமைப்பு அல்லது ஒரு நபரின் செயல்பாடுகளிற்கான சான்றுகள். இந்த அமைப்புகளும் தனிநபர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டம் சார்ந்த “தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்களும்” உருவாக்கியுள்ளனர். தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்களும் தமிழ் மற்றும் ஈழத் தமிழரின் வரலாற்றுப் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் ஒரு பகுதியாகப் பின்னிப்பிணைந்துள்ளன.
«கடந்த காலத்தை சரிபார்ப்பவர் (control) எதிர்காலத்தை நிர்வகிக்கின்றார். நிகழ்காலத்தை நிர்வகிப்பவர் கடந்த காலத்தை சரிபார்க்கின்றார் (control).»
ஜோர்ஜ் ஓர்வெல் (George Orwell)3.
பல தமிழ் அமைப்புகளின் சமூக ஊடக வங்கிகள் மற்றும் இணையத்தளங்கள் பல முறைகள் தாக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. ஏனெனில், அவை தமிழ் வரலாற்றுப் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியான தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றைப் பற்றி பேசுவதாலும், பரப்புவதாலும், கடத்துவதாலும் இந்த நிலைக்கு உள்ளாக்கப்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்து தமிழ் அமைப்புகள் தமிழர்கள் மற்றும் சர்வதேச சமூகத்திடமிருந்து சவால்கள், கேள்விகள் மற்றும் கருத்துக்களை எதிர்கொள்ளக்கூடும். அவர்கள் நீதி கோருவதற்காகக் கேள்விகளை எழுப்பக்கூடும். அல்லது அவர்கள் தெளிவு மற்றும் பகுப்பாய்விற்காக (reflection) கேள்விகளை எழுப்பக்கூடும். அல்லது அவர்கள் தமிழர்களிடையே பிளவுகள் மற்றும் மோதல்களை உருவாக்கி ஈழத் தமிழர்களின் அரசியல் விவகாரம் மற்றும் தமிழ் தேசிய அபிலாசையை சிதறடித்து அழிப்பதற்காகக் கேள்விகளை எழுப்பக்கூடும்.
ஒரு ஆவணக் களஞ்சியக் கண்ணோட்டத்தில், ஒரு தேசியம் தனது சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் பக்கங்களையும் பிரதிபலிக்கும் ஆவணங்களைப் பேணிப் பாதுகாத்து அணுக்கத்திற்குக் கிடைக்கச் செய்யும் பொழுது மட்டுமே பலமடைகின்றது. ஒரு சமூகம் தனது கடந்த காலத்தை ஆராய்வதன் மூலம் எதிர்காலத்தைத் திட்டமிடும் நுண்ணறிவைப் பெறுகின்றது. தனது நிகழ்காலத்தை ஆராய்வதன் மூலம் கடந்த காலத்தைப் பேணிப் பாதுகாக்கும் அடிப்படையைப் பெறுகின்றது.
“தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள்” பற்றிய இந்த தொடர் கட்டுரையில் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்களாக இருக்கக்கூடிய பல வகையான ஆவணங்களைப் பார்க்கவிருக்கின்றது. இந்த ஆவணங்களுக்கு எந்த முக்கியத்துவம் உள்ளன? அவை எவ்வாறு அச்சுறுத்தப்பட்டு, அழிவிற்கு உள்ளாக்கப்படுகின்றன? தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்களைச் சேகரிக்கவும், பேணிப் பாதுகாக்கவும், அணுக்கத்திற்கு விடுவதற்குமான பொறுப்பும் கடமையும் யாரிடம் உள்ளது? தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்களில் சிலவற்றை பரவலாக்கத்திற்காகவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாக மீள் வெளியீடு அல்லது மறு பதிப்பு செய்யவதற்கான பொறுப்பு அல்லது அதிகாரம் (copyright) யாரிடம் உள்ளது?
தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் எவ்வாறு அச்சுறுத்தப்பட்டு அழிக்கப்படுகின்றன?
தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் அழிவுகளுக்கும் உள்ளாகுகின்றன. இந்த ஆவணங்களில் ஒரு பகுதி தமிழர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஏனைய ஆவணங்கள் சட்டரீதியிலான தடைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. பிற ஆவணங்கள் தொழில்நுட்பத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இன் நிலையில் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் தமிழ் மற்றும் ஈழத் தமிழரின் வரலாற்றுப் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் ஒரு பகுதியாகப் பின்னிப்பிணைந்து உள்ளன.
தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்களுக்கான கட்டுப்பாடுகள் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
- ஒரு நாட்டில் அல்லது பிற நாடுகளில் உள்ள சட்ட ரீதியிலான தடைகளால் எமது வரலாற்றை நாமே ஆவணப்படுத்த முன்வராமல் எம்மை நாமே கட்டுப்படுத்துதல்.
- ஒரு குறிப்பிட்ட அரசியல் கொள்கைக்கு மாறான பிற ஆவணங்களை கட்டுப்படுத்துதல்.
- ஒரு குறிப்பிட்ட அரசியல் கொள்கையில் உள்ள சரி பிழைகளை விமர்சிக்கும் அல்லது சுட்டிக்காட்டும் பிற ஆவணங்களை கட்டுப்படுத்துதல்.
- ஒரு குறிப்பிட்ட அரசியல் கொள்கை செயல்பாட்டில் நிகழ்ந்த நடவடிக்கைகளை அந்த தலைமை தம்மைத் தாமே மீள் பரிசீலனை செய்து வெளியிட்ட ஆவணங்களை அக்கொள்கையைப் பின்பற்றுபவர்கள் அல்லது பிறர் கட்டுப்படுத்துதல்.
- ஒரு அரசியல் கொள்கையில் பணியாற்றியவர்கள் பிற்காலத்தில் மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டமையால் அல்லது விமர்சனங்களையும் சுட்டிக்காட்டல்களையும் வெளிப்படுத்தியமையால் அவர்கள் சார்ந்த ஆவணங்களை கட்டுப்படுத்துதல்.
- ஒரு அமைப்பு வெளிட்ட ஆவணங்களில் உள்ள அதன் இலச்சினையை மறைத்து மீள்ப் பாவனை அல்லது மீள் வெளியீடு செய்பவர்கள் தமது இலச்சினையைப் பொறித்து வெளியிடுதல். அவர்கள் மூல இலச்சினையை மறைத்தோ அல்லது மூல இலச்சினையுடன் தமது சொந்த இலச்சினையையும் இணைத்தோ வெளியிடுதல். இதனால் ஆவணத்தின் தோற்றம், நோக்கம் மற்றும் சூழல் சிதறடிக்கப்பட்டுக் கட்டுப்படுத்தப்படுதல்.
- ஊடகங்கள், சமூக ஊடக வங்கிகள் மற்றும் இணையத்தளங்கள் தாக்கப்பட்டு முடக்கப்படுதல்.
- ஏனைய
«இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.»
மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் 4
வரலாறு எப்போதும் நமக்கு வழிகாட்டும்! ஆனால் அந்த வரலாறு நமக்கு வழிகாட்ட, அது முழுமையானதாக இருக்க வேண்டும்! அதனால்தான் தமிழ் சமூகத்தில் உள்ள அனைத்துத் தமிழ் அமைப்புகளையும் வரலாற்றுப் பண்பாட்டு ஆவணங்களைப் பேணிப் பாதுகாக்கவும், பொது அணுக்கத்திற்கு விடுவதற்குமான திட்டத்தை உருவாக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். எவ்வாறு தமிழர் ஆவணங்களை புலத்தில் பாதுகாப்பாகப் பேணிப் பாதுகாக்கலாம் என்ற உங்கள் கருத்துகளை, சிந்தனைகளை, ஆலோசனைகளை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பின்குறிப்பு மற்றும் மேற்கோள்கள்
1 «ஈழம்» முழுத் தீவான, இப்போதைய, இலங்கையின் (ஸ்ரீலங்கா) பூர்வீகப் பெயர்.
IBC Tamil TV. (16.06.2020). ஈழம் இலங்கையின் பூர்வீகப் பெயர்?. Retreived from https://fb.watch/1NrGM76p4L/
TamilNet. (2008). Eezham Thamizh and Tamil Eelam: Understanding the terminologies of identity. Retrieved from https://www.tamilnet.com/art.html?catid=99&artid=27012
2 «Diaspora» என்ற சொல் கிரேக்க சொல்லான «diaspeirein» எனும் சொல்லிருந்து உருவானது. அது கலைத்தல் அல்லது சிதறல் என்று பொருள் படும். ஒரு டியாஸ்போரா (diaspora – புலம்பெயர்வு) என்பது ஒரு பூர்வீக நாட்டிலிருந்து அல்லது தேசியத்திலிருந்து வந்த ஒரு இன மக்களைக் குறிக்கின்றது. அல்லது அவர்களது மூதாதையர்கள் அங்கிருந்து வந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஒரு பொதுவான பூர்வீக மொழி, கலை, பண்பாடு, வரலாறு, நாகரீகம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் இப்போது உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்பவராக இருப்பார்கள். உலகளாவிய தமிழர் புலம்பெயர்வு பல ஆயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்திருந்தாலும், 1980 களில் ஈழத்தில் வெடித்த ஆயுதப் போராட்டம் காரணமாக ஈழத்திலிருந்து உலகளவில் புலம்பெயர்ந்த தமிழர்களால் «தமிழ் டியாஸ்போரா» (Tamil Diaspora) என்ற பதம் உருவானது. ஆனால் இந்தப் பதம் பரந்துபட்ட அளவில் தமிழகம் மற்றும் ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களை உள்ளடக்கும்.
புலம்பெயர்ந்தோரின் (diaspora) பிற எடுத்துக்காட்டுகள் யூதப் புலம்பெயர்வு (Jews diaspora) மற்றும் ஆப்பிரிக்கப் புலம்பெயர்வு (African diaspora).
(Oxford dictionaries, Online Etymology Dictionary)
Aadhan Tamil. (16.11.2020). 2000 ஆண்டுகளாக உலகை சுற்றும் தமிழர்கள் | ஒரிசா பாலு, தமிழர் ஆய்வாளர் | தூரப்பார்வை EP11|Aadhan Tamil. Retreived from https://youtu.be/wjcTfNG2JmI
3 «Den som kontrollerer fortiden styrer fremtiden. Den som styrer nåtiden, kontrollerer fortiden.» (Norwegian). “1984” (2017) எனும் நோர்வேயிய நூலிலிருந்து தமிழாக்கம்.
George Orwell. (2017). 1984. Oslo: Gyldendal.
அதன் ஆங்கிலம்: «Who controls the past controls the future. Who controls the present controls the past»
George Orwell. (n.a). 1984: Part 1, Chapter 3. Retrieved from http://george-orwell.org/1984/2.html
4 பேராசிரியர் Peter Schalk (பீட்டர் ஷால்க்) அவர்கள் ஆல்வாப்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்களுடன் இணைந்து ஒரு மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொண்டார். அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் 1995 மற்றும் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தலைவரின் சிந்தனைகள் எனும் தமிழ் மொழியில் வெளியான மூலப் பதிப்பை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டார். இப்பணியில் யேர்மன், ஆங்கிலம், ஸ்வீடிஷ் மற்றும் சிங்கள மொழிகளிலான மொழிபெயர்ப்புகளும் உள்ளடங்கும்.
Schalk, P. (2007a). talaivarin cintanaikai. Retrieved from http://uu.diva-portal.org/smash/get/diva2:173420/FULLTEXT04.pdf
Schalk, P. (2007b). Tamil Source in English Translation: Reflections of the Leader. Retrieved from http://uu.diva-portal.org/smash/get/diva2:173420/FULLTEXT06.pdf
Schalk, P. (2007c). Uppsala University Publications. Retrieved from http://uu.diva-portal.org/smash/record.jsf?amp;dswid=contents&pid=diva2%3A173420&dswid=5816
புதுப்பிப்பு│Update: 20.08.2022