கூட்டு நினைவகம்
ஒரு சுவடிகள் காப்பகம் (archive), நூலகம் அல்லது அருங்காட்சியகம் பல்வேறு வகையான சுவடிகள் (ஆவணங்கள்) மற்றும் கலைப்பொருட்களை கையகப்படுத்தலாம் – சமகால பதிவுகள், வரலாற்று சுவடிகளாக மாறும் – அவையே சுவடிகள் (archives). அவை தகவல் (information) அல்லது ஆதாரங்களின் (evidence) முதன்மை மூலங்களாக இருக்கலாம். இந்த நிறுவனங்களில் உள்ள சுவடிகள் ஜனநாயகமயமாக்கலுக்கு பங்களிக்கின்றன. அதோடு தனிநபர்கள், குழுக்கள், அமைப்புகள் மற்றும் தேசியத்திற்கான தகவல் உரிமையை வலுப்படுத்துகின்றன. இது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகும் – “தகவல் அணுகல்” (Access to information) மற்றும் “தகவல் சுதந்திரம்” (Freedom of information) – இவை “கருத்து சுதந்திரத்தில்” (Freedom of expression) உள்ள கூறுகள். இது தகவல் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பண்பாட்டு வரலாற்றைப் பேணிப் பாதுகாக்கும் உரிமை மற்றும் மறக்கப்படுவதற்கான உரிமை ஆகிய பரந்துபட்ட விடயங்களைப் பொருள்படும். ஒரு சுவடிகள் காப்பகம், நூலகம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவற்றில் உள்ள சுவடிகள், தகவல் மற்றும் ஆதாரங்களிற்கான முதன்மை மூலமாக உள்ளன. அவை மக்களின் அன்றாட வாழ்க்கையில் தனிப்பட்ட ரீதியான, உணர்வு ரீதியான மற்றும் ஆன்மீக ரீதியான உடைமை மற்றும் பந்தம் ஆகிய ஒரு பங்கைக் கொண்டிருக்கும். அதுவே ஒரு கூட்டு நினைவகமாகும்.

வரலாற்று ரீதியாக, ஈழத் தமிழர்கள் சமகால ஆவணங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் இரண்டையும் இழந்த சோகமான நினைவுகளைக் கொண்டுள்ளனர். 31 மே-01 யூன் 1981 அன்று, இலங்கை அரசின் அனுசரணையில் யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு, ஈழநாடு பத்திரிகையின் அலுவலகம் அழிக்கப்பட்டது. யாழ் பொது நூலகத்தில் 97,000 தனித்துவமான நூல்கள் மற்றும் சுவடிகள் இருந்தன. யாழ் பொது நூலகம் தனித்துவமான சுவடிகளைப் பேணிப் பாதுகாத்து, தெற்காசியாவில் இருந்த பிரசித்தி பெற்ற நூலகங்களில் ஒன்றாக இருந்தது.
யாழ் நூலகம் எரிக்கப்பட்டமை ஒரு பண்பாட்டு இன அழிப்பு (Cultural genocide) ஆகும். இது சமகால ஆவணங்கள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் கூட்டு நினைவகத்தின் இழப்பிற்கான ஒரு அடையாள நிகழ்வாகப் பார்ப்பதோடு, தமிழ் மக்களிற்கான தகவல் அணுக்கம் மற்றும் தகவல் சுதந்திர மறுப்பிற்கான அடையாளமாகவும் பார்க்கலாம்.
புதுப்பிப்பு│Update: