முள்ளிவாய்க்கால் – பரிணாம வளர்ச்சியின் சின்னம்
– வண்ணத்துப்பூச்சிகளைப் போலவே
முள்ளிவாய்க்கால் வன்னிப் பிரதேசத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது ஈழத்தின் (இலங்கை) வடகிழக்கில் உள்ள நந்திக்கடலுக்கு அருகே அமைந்துள்ளது. இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இலங்கையில் நடந்த போரின் இறுதிக் கட்டமே மே 2009 ஆகும். இறுதிக் கட்டப் போரில், முள்ளிவாய்க்காலில் உள்ள ஒரு நிலப்பகுதியை இலங்கை அரசாங்கம் “No Fire Zone” (பாதுகாப்பு வலயம்) என்று அறிவித்தது. ஆனால் விரைவில் சர்வதேச ஊடகங்களும் மனிதாபிமான அமைப்புகளும் முள்ளிவாய்க்காலில் இருந்த தமிழ் மக்களைக் கைவிட்ட நிலையில், பீரங்கி எறிகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களால் சூழப்பட்ட “No Fire Zone” (பாதுகாப்பு வலயம்) இல் தமிழர்கள் சிக்கிக் கொண்டனர். முள்ளிவாய்க்காலில் அறிவிக்கப்பட்ட “No Fire Zone” இல் தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்தது. 2009 மே மாதத்திற்குப் பின்னர் முள்ளிவாய்க்கால் எனும் கிராமப் பெயர் தமிழ் இனப்படுகொலைக்கான அடையாளப் பெயராக மாறிவிட்டது. இந்த நிகழ்வு முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை, தமிழ் இனப்படுகொலை அல்லது முள்ளிவாய்க்கால் என்றும் அழைக்கப்படுகிறது. சர்வதேச சமூகமும் ஊடகங்களும் முள்ளிவாய்க்கால் நிகழ்வை «massacre» (படுகொலை) மற்றும் «slaughter» (படுகொலை) என்று வர்ணிக்கின்றன.

வரலாற்றின் அடிப்படையில், தமிழர்கள் படுகொலை (massacre) மற்றும் இனப்படுகொலை/இன அழிப்பு (genocide) ஆகிய இரண்டையும் ஒரு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் (structural genocide) ஒரு பகுதியாக அனுபவிக்கின்றார்கள். இது «ethnic genocide» (இன அழிப்பு) மற்றும் «cultural genocide» (பண்பாட்டு இன அழிப்பு) ஆகியவற்றை உள்ளடக்கும். 1931 ஆம் ஆண்டு முதல் (இலங்கை மாநில கவுன்சில் நிறுவப்பட்டது; The State Council of Ceylon was established) தமிழர்களின் இறையாண்மைக்கான போராட்ட வரலாற்றிலிருந்து படுகொலை மற்றும் இனப்படுகொலை நிகழ்வுகளை வேறுபடுத்துவது அவசியம். முள்ளிவாய்க்கால் என்பது பல தசாப்த காலமாக நீடிக்கும் தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் உச்சக்கட்ட நிகழ்வாகும். எனினும், முள்ளிவாய்க்கால் என்பது கடந்தகால மற்றும் நிகழ்கால ஒடுக்குமுறை, பாகுபாடு, உரிமை மறுப்பு, படுகொலை, இனவழிப்பு மற்றும் இனப்படுகொலைக்கான அடையாளச் சொல்லாகவும் பார்க்கலாம்.
தமிழ் மக்கள் எதிர்கொண்ட அதிர்ச்சியான அனுபவங்களை (trauma) அளவுக்கு மிஞ்சிப் பெரிதுபடுத்தவோ அல்லது குறைத்து மதிப்பீடு செய்வதைத் தவிர்க்கவோ சரியான சொற்களைப் பயன்படுத்துவது இன்றியமையாதது. தமிழரின் போராட்ட வரலாற்றில் நடந்தேறிய நிகழ்வுகள் குறித்து உலகம் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் நீங்களும் நாங்களும் மட்டுமே எங்கள் கதையைச் சொல்ல முடியும்.
ஒரு பெயர்ப்பட்டியல் வலைப்பதிவுப் (catablog) பக்கம் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலைக்குச் சமர்ப்பணம்.
முள்ளிவாய்க்கால் பெயர்ப்பட்டியல் வலைப்பதிவுப் பக்கத்திற்கான தொகுத்தல் பணி 21. பெப்ரவரி 2022 அன்று ஆரம்பிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் பெயர்ப்பட்டியல் வலைப்பதிவுப் பக்கத்தின் முதன்மை தொகுப்பாளர்: மதுஷியா பிரபாகரன்.உயிர் இழந்தவர்களை நினைவு கூர்ந்து, உயிர் பிழைத்தவர்களுக்கு ஆறுதல் கூறுவோம்.
முள்ளிவாய்க்கால் மாதம் 01.-18. மே
முள்ளிவாய்க்கால் வாரம் 12.-18. மே
புதுப்பிப்பு│Update: 29.05.2022