புலம்பெயர் தமிழர்
தமிழகத்தையும் ஈழத்தையும் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் பல ஆயிரம் வருடங்களாக பல்வேறு நோக்குடன் புலம்பெயர்ந்து வந்துள்ளனர். அதில் வணிகம் ஒரு முக்கிய நோக்காக இருந்தது. இதற்கு சான்று சங்ககால வணிகப் போக்குவரத்துகள். காலனித்துவக் காலத்தில் தமிழர்கள் வணிகம், வேலைவாய்ப்பு, கல்வி, அரசியல் என்று பல நோக்கங்களுக்கு புலம்பெயர்ந்தனர். இதில் «இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள், கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறிய அளவிலும், கடந்த மூன்று தசாப்தங்களாகப் பாரிய அளவிலும், உலகில் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.» (Gunasingam, 2014, ப.6). இருபதாம் நூற்றாண்டின் புலம்பெயர்வுகளில் ஈழத்தமிழரின் புலம்பெயர்வு «Tamil Diaspora» (புலம்பெயர்ந்த தமிழர்) என்ற பதத்தை சர்வதேச மட்டத்தில் ஒரு பரிச்சியமான பதமாக்கியது. «Diaspora» (புலம்பெயர்வு) எனும் சொல் «diaspeirein» அல்லது «diasporic» எனும் கிரேக்க வேர்ச் சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டது. இது «சிதறல்» என்று பொருள்படும். இச்சொல் முதல்முதலாக யூதர்கள் தமது தாய்நாட்டைவிட்டு வெளியேறியபோது பயன்படுத்தப்பட்டது. இச்சொல்லின் ஆரம்பப் பயன்பாடும் பொருளும் «பபிலோனியன் அடிமைத்தனத்திற்கு அல்லது சிறை அடைப்பிற்குப் பின்னர் சிதறடிக்கப்பட்ட யூதர்கள்» (Gunasingam, 2014, ப.7) என்று இருந்தபோதும், தற்காலத்தில் பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு நோக்குடன் தமது தாய்நாட்டை விட்டு வெளியேறிவர்களையும் உள்ளடக்குகின்றது.
புலம்பெயர் தமிழ் உட்கட்டுமானம்
புலம்பெயர் தமிழ் உட்கட்டுமானம் (Tamil Diaspora infrastructure) பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளால் கட்டப்பட்ட ஓர் கட்டமைப்பு. இந்த உட்கட்டுமானத்தின் அத்திவாரத்தை புலம்பெயர் தமிழ் சமூகமும் ஈழத்தில் வீறு கொண்டு எழுந்த ஆத்ம பலமும் உருவாக்கியது. இவ்விரண்டும் இதற்கான உரமாக, பலமாக, வளமாக அமைந்தன. இருப்பினும் ஒவ்வொரு நாட்டுச் சூழலும் பண்பாடும் அன்நாட்டு வாழ் தமிழ் சமூகத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்தி வந்துள்ளது. இந்த புலம்பெயர் உட்கட்டுமானம் 1948ம் ஆண்டு முதல் ஈழத்தில் நடைபெறும் தமிழர்கள் மீதான இனப்படுகொலையும்; அதை எதிர்த்து தாயக வாழ், புலம்பெயர் வாழ் தமிழர்கள் மேற்கொண்டு வரும் விடுதலைப் போராட்டமும் நமக்கு அளித்த விலைமதிப்பற்ற ஓர் சொத்தாகும்.
நிர்வாகத் தலைமைத்துவப் பண்பாடு
ஒரு புலம்பெயர் தமிழ் சமூகமாக (Diaspora Tamil society) புலம்பெயர் தமிழரைப் (Tamil Diaspora) பாதுகாத்துக் கடத்த இந்த உட்கட்டுமானத்தை பராமரித்து மேம்படுத்துவது அனைத்து தமிழ் அமைப்புகளின் பாரிய கடமையாகும். இக்கடமை எதிர்காலத் தலைமுறைகளுக்காக தற்காலத்தில் என்றுமில்லாத முக்கியத்துவம் பெறுகின்றது. ஒரு பலமான புலம்பெயர் தமிழ் உட்கட்டுமானமே தாயக வாழ் மக்களுக்கும் பலமாகவும் வளமாகவும் இருக்கும். புலம்பெயர் உட்கட்டுமானத்தைப் பேணிப் பாதுகாத்து மேம்படுத்த தமிழ் அமைப்புகளில் «நிர்வாக மேலாண்மை ஆவணங்கள்» (management documents) நடைமுறைப்படுத்துவது அவசியமாகின்றது. அவை ஒரு அமைப்பிற்குள்ளும் பிற அமைப்புகளிற்கிடையிலும் நிர்வாகத் தலைமைத்துவப் பண்பாட்டைப் பரிணமிக்க வழியமைக்கும். மேலும் நிர்வாகக் கட்டுப்பாட்டு ஒழுங்கை உருவாக்கும். அதன்மூலமே புலம்பெயர் தமிழ் சமூகத்தின் நம்பிக்கையை மீள வென்றெடுக்க முடியும். அதுவே புலம்பெயர் தமிழ் சமூகத்தை ஒரு ஆளுகைமிக்க சக்தியாக ஒன்றிணைத்து வைத்திருக்க வலுச்சேர்க்கும். இல்லையேயின் புலம்பெயர் தமிழ் சமூகம் காலப்போக்கில் உதிரிகளாக பரிணாமம் பெறும் அபாயம் உள்ளது.
புலம்பெயர் தமிழ் சமூகமும் தமிழீழமும்
ஒவ்வொரு புலம்பெயர் நாடுகளில் உள்ள பெரும்பாண்மையான அமைப்புகள் தமிழீழ இராணுவப் பலத்தில் இருந்த குணாம்சங்களைப் பார்த்து, அதனை முன்மாதிரியாகக் கொண்டு வளர்ந்தது ஒரு வரலாறு. இருப்பினும் ஒரு தமிழர் நிர்வாகம் என்ற அடிப்படையில் தமிழீழ இராணுவ நிர்வாக உதாரணம் ஒன்று இங்கு தரப்படுகின்றது. இது ஒரு சிவில் நிர்வாகத்திற்கும் பொருந்தும் என்பதனால் இங்கு தரப்படுகின்றது. ஒரு மூத்த உறுப்பினரின் வாய்மொழித் தகவலின் அடிப்படையில் தமிழீழ இராணுவ கட்டமைப்பில் «சண்டை அறிக்கை» எழுதும் நடைமுறை இருந்துள்ளது. ஆரம்பத்தில் «தோல்விச் சண்டை அறிக்கை» எழுதப்பட்டது. பின்னாட்களில் வெற்றிச் சண்டைகளையும் அறிக்கைகளாக எழுதும் நடைமுறை கொண்டுவரப்பட்டது என்று கூறினார். இதனை ஆய்வு செய்வதற்கான ஆய்வு மையமும் நிறுவப்பட்டதாகக் கூறினார்.
போர்க்களத்தில் நிழந்த தோழ்விச் சண்டையை பரிசீலனை செய்து, அதன் சரி பிழைகளை இனம் கண்டு, புதிய உத்திகளை கண்டறியும் நிர்வாகத் தேவையைப் பூர்த்தி செய்யவே இவ்வாறான அறிக்கைகள் எழுதும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டிருக்கும். இவ்வாறான நிர்வாக மேலாண்மை ஆவணங்கள் கட்டுக் கோப்பு, ஒழுங்கு, முறைப்பாடு கையாள்கை, பரிசீலனை, வளர்ச்சி, மேம்பாடு, சமநிலை பேணுதல், நம்பகத்தன்மை பேணுதல் என்று பலவற்றை நிலை நாட்டும் கருவிகள் ஆகும். இவை பிற்காலத்தில் எமக்கான வரலாற்று ஆவணங்களாகின்றன. இவ்வாறான நிர்வாக நடைமுறைகளை, பண்பாட்டையே நாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராணுவ அத்தியாத்திலிருந்து கற்றுக் கொள்ளலாம். அதை எவ்வாறு சிவில் கட்டுமானத்தில் பயன்படுத்தி சமூகத்தை மேம்படுத்தலாம் என்று பார்ப்பது அவசியமாகின்றது. அதற்கு ஆவணங்கள் பதியப்பட வேண்டும்!
தமிழ் அமைப்புகளுக்கிடையேயான ஒத்துழைப்பு/ கூட்டுறவு (cooperation)
மேற்கத்தேய கல்வி முறையில் ஒத்துழைப்பு/ கூட்டுறவு (cooperation) போன்ற சமூகத் திறன்களை தமது நாளாந்த நடைமுறை கல்வியில் (practical education) மாணவர்களுக்கு பயிற்றப்பட்டு பழக்கத்திற்கு கொண்டுவரப்படுகிறது. தமிழ் சிறுவர்கள் பெரியவரான பின்னர் ஒரு மேற்கத்தேய வேலைத் தளத்திலோ அல்லது வேறு மேற்கத்தேய தளங்களிலோ திறம்பட செயல்படுகின்றனர். ஆனால் அதே தமிழ் பெரியவர்கள் தமிழ் தளங்களில் சிரமப்படுகின்றனர். இது ஏன்?
இந்த பாரிய வேறுபாடும் இரட்டை தரநிலை (double Standard) சூழலும் புலம்பெயர் சூழலில் வளரும் தமிழ் சிறுவர், இளையோருக்கு ஒரு பாரிய உளவியல் முரண்பாட்டை உருவாக்குகின்றது. இதனால் பலர் இந்த தமிழ் கட்டமைப்புகளை விட்டு விலகிச் செல்லும் சூழலும் காணப்படுகின்றது.

உதாரணமாக, தமிழ் பள்ளிகள், விளையாட்டுக் கழகங்கள், கலை/ பண்பாட்டு மையங்கள் போன்ற அமைப்புகளில் சமூகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை (social skill development) இணைத்துக் கொள்ளலாம். அதன்மூலம் தமிழையும் ஒத்துழைப்பு/ கூட்டுறவு (cooperation) போன்ற சமூகத் திறன்களையும் வளர்த்தெடுக்கலாம். இந்த சமூகத் திறன்கள் பின்னர் இளையோர் மற்றும் பெரியோருக்கான அமைப்புகளிலும் பின்பற்றப்பட வேண்டும். பல்பேறு அமைப்புகளிற்கிடையே உள்ள தொடர்ச்சியும் கூட்டுறவும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பண்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

வரைபடம்: சர்வதேசப் புலம்பெயர் தமிழ் உட்கட்டுமானம், ஒரு நாட்டில் உள்ள புலம்பெயர் தமிழ் உட்கட்டுமானம்
நிர்வாக மேலாண்மை ஆவணங்கள்
உதாரணத்திற்கு நோர்வேயின் ஆவணச் சட்டத்தின் அடிப்படையில், தனியார் அமைப்புகளில் ஆவணங்கள் உருவாக்குவதும், பேணிப் பாதுகாப்பதும் கட்டாய வலியுறுத்தல் அல்ல. இந்த சட்ட ரீதியான நிலை சிறுபாண்மை சமூகங்களின் வரலாற்றுப் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாக்க பாரிய சவாலை ஏற்படுத்துகின்றது. இதில் தமிழரும் உள்ளடங்கும். ஈழத்தமிழரின் ஆவணங்கள் தாயகத்தில் பலத்த அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகுகின்றன. மறுபுறம், புலத்தில் ஆவணங்கள் உருவாக்கி, பேணிப் பாதுகாத்தலுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட நடைமுறைகள் தமிழ் அமைப்புகளில் இல்லை. இதனால் தமிழரின் வரலாற்றுப் பண்பாட்டு மரபுரிமை (historical cultural heritage) அறிந்தோ, அறியாமலோ அழிக்கப்பட்டு வருகின்றது.
பரிவர்த்தனை ஆவணங்கள் (transaction documents)
முதல் ஒரு அமைப்பின் “நோக்கம், இலக்கு, செயல்பாடுகள், நடவடிக்கைகள்” இனம் காணப்பட்டு வரையறுக்கப்பட வேண்டும்.

ஒரு அமைப்பிற்குள் அல்லது வேறு அமைப்புகளிற்கிடையே நிகழும் பரிவர்த்தனைகளின் (transaction) ஆவணங்கள் ஒரு நிர்வாகத்தை கட்டுக் கோப்புடன் வைத்திருக்கும். அதுவே யாராருக்கு என்ன அதிகாரம், பொறுப்பு, கடமை உள்ளது என்பதை வரையறுக்கும். இதனால் அனைவரும் தமது தோள்களில் சுமக்கும் பொறுப்புகள் ஆவணங்களில் பரவலாக்கப்படும் (decentralise). ஆவணங்கள் ஜனனாயகத்தையும் உரிமைகளையும் பாதுகாத்து மேம்படுத்தும். ஆனால் நடைமுறை மீறல்கள் நிகழும் பட்சத்தில் விளைவுகளும் (consequence) வரையறுக்கப்படல் வேண்டும். அந்த விளைவுகள் பின்பற்றப்படும் பொழுது மட்டுமே ஒரு நிர்வாகக் கட்டமைப்பின் மீது நம்பிக்கை உருவாகும். இல்லையேயின் இரட்டை தரநிலை நிலவும் (double standard). அதாவது எழுத்தில் ஒரு விதமும் நடைமுறையில் இன்னொரு விதமும் இருக்கும். இதனால் நம்பிக்கையின்மையும் பாதுகாப்பின்மையும் தொடரும்.
குறுகிய கால இலக்கு/ நீண்ட கால இலக்கு
ஆனால் ஒரு அமைப்பின் நோக்கத்தையும் இலக்கையும் அடைய அந்த அமைப்பு சவால்களை எதிர்நோக்கலாம். அதற்கு “தேவை, சவால், நடவடிக்கை” மூலம் தீர்வுகள் காணலாம்.
- தேவை (need)
- தமிழ் சமூகத்தில் நிலவும் தேவை என்ன?
- சவால் (challenge)
- தமிழ் சமூகத்தில் நிலவும் தேவைகளை நோக்கி வேலை செய்வதில் உள்ள சவால்(கள்) என்ன?
- நடவடிக்கை (measures)
- தேவையை பூர்த்தி செய்து இலக்கை அடைய எதிர்கொள்ளும் சவால்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை(கள்) எடுக்கலாம்?
துல்லியம், நம்பகத்தன்மை, மக்கள் பலம்
செயல்பாடுகளிலும் தகவல் தொடர்பாடல்களிலும் துல்லியம் பேணப்படுவதன் மூலமே நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்ப முடியும். நம்பகத்தன்மையே தொலைநோக்குக் கட்டுமானத்தை பலமாக வைத்திருக்கும். அதனைப் பேண நிர்வாக மேலாண்மை ஆவணங்கள் கைகொடுக்கும்.

முக்கிய நிர்வாக மேலாண்மை ஆவணங்காள்
ஒரு அமைப்பின் யாப்பு
அதன் உள்ளடக்கம்:
- ஒரு அமைப்பின் வரலாற்றுப் பின்னணி (background)
- ஒரு அமைப்பின் நோக்கம் (purpose)
- ஒரு அமைப்பின் மதிப்புகள் (values)
- என்ன விதமான நிர்வாகம்? (நிர்வாக உறுப்பினர் எண்ணிக்கை, எவ்வாறு நிர்வாக மாற்ற நடைமுறை நிகழும் போன்ற தகவல்கள்)
- நிர்வாக் குழுவின் உரிமைகள் மற்றும் கடமைகள்
ஒரு அமைப்பின் செயல்பாடுகள், நடவடிக்கைகளை (functions and activities) இனம் கண்டு வரையறுத்தல்
- ஒரு அமைப்பின் இலக்கு என்ன?
- குறுகிய கால இலக்கு
- நீண்ட கால இலக்கு
(குறிப்பு: அமைப்பின் யாப்பில் உள்ள நோக்கத்தை அடையக் கூடிய இலக்கு இனம் காணப்பட்டு வரையறுத்தல்)
- ஒரு அமைப்பின் செயல்பாடுகள் (functions) என்ன?
- இதில் எந்த செயல்பாடு(கள்) பிற அமைப்புகளுடன் இணைந்து சேயல்படுகின்றது?
(குறிப்பு: ஒரு அமைப்பின் குறுகிய கால இலக்கு, நீண்ட கால இலக்கை செயல்படுத்தும் செயல்பாடுகளை (functions) இனம் கண்டு வரையறுத்தல்)
- ஒரு அமைப்பின் நடவடிக்கைகள் (activities) என்ன?
- இதில் எந்த நடவடிக்கை(கள்) பிற அமைப்புகளுடன் இணைந்து சேயல்படுகின்றது?
(குறிப்பு: ஒரு அமைப்பின் செயல்பாடுகளில் (functions) இருக்கும் நடவடிக்கைகளை (activities) இனம் கண்டு வரையறுத்தல்)
- எந்த பரிவர்த்தனை என்ன விதமான ஆவணங்களை (documents) உருவாக்குகின்றது?
(குறிப்பு: இந்த ஆவணங்கள் எவ்வாறு ஒரு அமைப்பின் நிர்வாக ஒழுங்கிற்காகவும், எதிர்காலத்திற்கான வரலாற்று ஆவணங்களாகவும் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன?)
சந்திப்பு சார்ந்த ஆவணங்கள்
- சந்திப்பு நிகழ்ச்சி நிரல் (meeting agenda)
குறிப்பு: சந்திப்பு என்னவற்றைப் பற்றி நடைபெறும் என்பதனை முற்கூட்டியே வரையறுத்தல். வரையறுத்த விடயங்கள் பற்றி தயார் செய்தல்.
- சந்திப்பு அறிக்கை (meeting minutes)
குறிப்பு: வரையறுத்த விடயங்கள் பற்றி கதைத்தல். அதனால் கூட்டத்தின் நோக்கம் சிதறடிக்கப்படாமல் கட்டுக் கோப்பாக இருக்கும். சந்திப்பில் என்ன விடயங்கள் கதைக்கப்பட்டவை, என்ன முடிவுகள் எட்டப்பட்டவை, ஏனைய விடயங்கள் அறிக்கையில் பதியப்படும். பிற்காலத்தில் எழக்கூடிய சிக்கல்களுக்கு இந்த ஆவணங்கள் ஆதார மூலமாக அமையும். இதனால் அமைப்பு உறுப்பினர்களிற்கிடையிலும், சமூகத்திலும் நம்பகத்தன்மை, அமைதி, சமநிலை பேணப்படும்.
முறைப்பாடு சார்ந்த ஆவணங்கள்
முறைப்பாடுகளை கைப்பற்றுதல் (capture) அதி முக்கியமானது. அதுவே நிர்வாகத்திலும் மக்கள் மத்தியிலும் அமைதியையும் சம நிலையையும் பேண உதவும். இல்லையேயின் முறைப்பாடுகள், மனக்குமுறல்கள் அதிருப்திகள், அநீதிகள் ஒரு கட்டுக் கோப்பின்றி சமூகத்தில் பரவும்.
- ஒரு அமைப்பில் இருக்கும் உறுப்பினர்கள் எவ்வாறு முறைப்பாடுகளை தெரிவிக்கலாம்?
- மக்கள் எவ்வாறு ஒரு அமைப்பிடம் தமது முறைப்பாடுகளை தெரிவிக்கலாம்?
- முறைப்பாடுகளை கையாளும் நடைமுறைகள் என்ன?
- முறைப்பாடுகளை கையாண்ட அறிக்கை
இந்த நடைமுறை தாயகத்தில் தலைமை இருந்த பொழுது பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளில் நிர்வாக நடைமுறையாக இருந்தது. ஆனால் அதன் முக்கியத்துவமும், பயன்பாடும் போதிய அளவு புலத்தில் அறியப்படாததன் காரணமாக மே 2009ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த நிர்வாக நடைமுறை தளர்வடைந்து செயலற்ற நிலையில் உள்ளதைக் காணலாம்.
மேற்கோள்
Gemini, S. (2019). Structures of Tamil Eelam: A Handbook. Switzerland: Puradsi Media.
Gunasingam, M. (2014). புலம்பெயர் ஈழத் தமிழர்கள் ஓர் உலகளாவிய ஆய்வு. Sydney: M.V. Publication.
Shepherd, E., & Yeo, G. (2003). Managing records : a handbook of principles and practice. London: Facet.
Velauthapillai, A. (2020). Tamil and Eezham Tamil. Oslo: TamilNet.
சேதுராமலிங்கம், ச. (2020). பிரபாகரன் சட்டகம். Germany: உலகத்தமிழர் உரிமைக்குரல் மற்றும் நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப் பள்ளி.
புதுப்பிப்பு│Update: