22. செப்டம்பர் 2020 அன்று, ஈழத்தில் வசிக்கும் ஒரு தமிழரிடமிருந்து DsporA Tamil Archive ஒரு கோரிக்கையைப் பெற்றுக் கொண்டது. “நிலவன்” (புனைபெயர்) என்ற நபர், இந்த புகைப்படத்தை எங்களுக்கு அனுப்பி, இந்த ஆவணத்தை எவ்வாறு படித்து அறிந்து கொள்ள முடியும் என்று கேட்டுக் கொண்டார்.

படம்: நிலவன், தனிநபர் சுவடிகள் சேகரம்.
இது 1897 ஆம் ஆண்டு காணி உரிமை நிலப் பத்திரத்தின் ஒரு எண்ணிமப் படம் (digital photo) ஆகும். “நிலவனின்” தாத்தா அவருக்குக் கூறிய தகவலின் அடிப்படையில் “நிலவன்” இந்த நிலத்திற்கான பரம்பரையில் நான்காவது தலைமுறை ஆகும். இப்போது அவர் தங்களது பரம்பரை நிலத்திற்கான உரிமை பறிமுதல் செய்யப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்கின்றார், என்று “நிலவன்” DsporA Tamil Archive இற்கு Messenger அழைப்பில் கூறினார்.
இந்த ஆவணம் 123 ஆண்டுகளாக, பல தலைமுறைகளால் பேணிப் பாதுகாக்கப்படாமல் ஒரு குழாயில் சுருளாக இருந்தது. இலங்கையில் கிடைக்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் முயற்சித்தபின், “நிலவன்” தமது குடும்பத்தின் உரிமைகளைப் பாதுகாக்க போராடி வருகின்றார். அந்த முயற்சிகள் கைகூடாமல் இப்பொழுது புலம்பெயர் நாடுகளில் ஆவணங்களைப் பேணிப் பாதுகாத்தல் குறித்த நிபுணத்துவத்தை நாடுகின்றார். இதைத் தவிர, இதன்மூலம் ஏனைய தமிழ்த் தலைமுறைகளின் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பது இவ்வாறான ஆவணப் பத்திரங்களே என்ற விழிப்புணர்வை கொண்டு வர “நிலவன்” தனது கதையை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றார்.
பேணிப் பாதுகாத்தல் என்பது சமகால மற்றும் எதிர்கால சந்ததியினர் ஒரு ஆவணத்தை படிக்கக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய, அணுகக்கூடிய மற்றும் பயன்படுத்தக்கூடியதாக வைத்திருப்பது ஆகும். பேணிப் பாதுகாத்தல் என்பது ஒரு காகித ஆவணம் போன்ற ஒரு அனலாக் (analogue) ஆவணத்தை மனிதனால் உருவாக்கக்கூடிய அல்லது இயற்கை அழிவுகளிலிருந்து பாதுகாத்தல் ஆகும். பேணிப் பாதுகாத்தல் என்பது தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒரு ஆவணத்தை மற்றொரு ஊடகத்திற்கு மாற்றுவதாகும். உதாரணமாக, எண்ணிமக் கோப்பு (digital format) வடிவத்திற்கு VHS காணொளி நாடாவை மாற்றுவது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப படித்துப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு பொருளாகப் பேணிப் பாதுகாக்கும் முறைமையை எண்ணிமமயமாக்கல் (digitalisation) என்று அழைக்கப்படுகிறது.
இக்கோரிக்கை தொடர்பாக DsporA Tamil Archive பல்வேறு நோர்வேயிய ஆவண வளங்களிலிருந்து தகவல்களை சேகரித்தது. இந்த ஆவணம் ரோமன் அல்லாத எழுத்துக்களைக் கொண்டிருப்பதால் சவாலாக உள்ளது. எனினும் உயர் தெளிவுத்திறனில் ஆவணத்தை மின் வருடி (scan), ஆவணத்தின் எண்ணிமப்படத்தை (digital photo) தெளிவுபடுத்தி, அதனை படித்துப் புரிந்து கொள்ளக் கூடியவாறு உருவாக்குமாறு அலோசனை வழங்கப்பட்டது. அல்லது ஒரு காகிதத்தை மீட்டமைக்க ஒரு காகித conservator ஐ அணுக அலோசனை வழங்கப்பட்டது. இதோடு, உலகில் ஏனைய பாகங்களில் தமிழ் மொழியைக் கையாளக்கூடிய ஆவண நிறுவனங்கல் அல்லது நிபுணத்துவம் கொண்டவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை DsporA Tamil Archive வரவேற்கின்றது.
புதுப்பிப்பு│Update: