புகழ்பெற்ற தென்னிந்திய பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (எஸ்.பி.பி) கோவிட்-19 தொற்றினால் வெள்ளிக்கிழமை, 25. செப்டம்பர் 2020 அன்று 74 வயதில் காலமானார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் உட்பட 16 மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பல்வேறு பாடல் வகைகளில் (genres) பாடியுள்ளார். அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பதிவுசெய்ததற்காக அவர் கின்னஸ் உலக சாதனை படைத்தவர் ஆவார்.
இந்தியா பல மொழிகள் மற்றும் இனங்களைக் கொண்ட நாடாகும். இது சுமார் 120 மொழிகளையும் பல பேச்சுவழக்குகளையும் கொண்ட நாடு. எஸ்.பி.பியின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தில், இசை அவரது தாய்மொழியாக மாறியது. இது பல தடைகளைத் தகர்த்து பிராந்திய, மதம், மொழி மற்றும் இனத்திற்கு அப்பாற்பட்ட பாலங்களையும் உருவாக்க உதவியுள்ளது. அதில் ஈழப் பாடல்களில் எஸ்.பி.பியும் உள்ளடங்கும். யாழ்ப்பாணத்தில் (வடக்கு இலங்கை) அவரது முதல் இசை நிகழ்ச்சி 2016 இல் நிகழ்ந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலாப நோக்கற்ற தமிழ் செய்தி நிறுவனமான TamilNet.com, தமிழ்நாட்டைத் (இந்தியா) தளமாகக் கொண்ட ஓவியர் புகழேந்தியின் ஒலி வடிவிலான நினைவுக் குறிப்புப் பதிவு ஒன்றை செய்துள்ளது. இது எஸ்.பி.பி இன் ஈழப் பாடல்களை நினைவுபடுத்தும் ஒரு பதிவாகும். இதில் ஓவியர் புகழேந்தி தமிழீழ நடைமுறை அரசு (de facto state) தன்னிடம் அளித்த வேலைத்திட்டத்தைப் பற்றி கூறுகிறார். இது தமிழீழப் பாடலாசிரியர்கள் மற்றும் தமிழகத் திரையுலகப் பாடலாசிரியர்கள் மற்றும் எஸ்.பி.பி உட்பட பின்னணிப் பாடகர்களுடன் இணைந்து தமிழ் விடுதலைப் போராட்டப் பாடல் வகையில் (genre) ஈழப் பாடல்களைத் தயாரிக்கும் ஒரு வேலைத்திட்டமாக இருந்தது. புகழேந்தி 2007 இல் மூன்று குறுவட்டுகளை (CD) தயாரிக்கும் பொறுப்பைப் பெற்றுக் கொண்டார். அவர் கவிஞர் புலமைபித்தன் மூலம் எஸ்.பி.பியுடன் தொடர்பு கொண்டார். இந்த கூட்டு முயற்சி வேலைத்திட்டம் (collaburation) தமிழ்நாட்டின் திறமைகள் மற்றும் ஆளுமைகளுக்கு பணிவான ஈடுபாடு மற்றும் மரியாதை காட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெளிப்பாடாகும். மறுபுறம், இது எஸ்.பி.பியின் தாழ்மையான பண்பையும், மற்றும் வரலாற்றுப் புரிதல், ஈடுபாடு, அக்கறை மற்றும் தமிழீழ நடைமுறை அரசு மீது கொண்டிருந்த மரியாதையையும் காட்டுகிறது.
இந்த ஒலி நினைவுக் குறிப்புப் பதிவு, தமிழ்நாட்டிலுள்ள ஜெயா தொலைக்காட்சியில் எஸ்.பி.பி. தலைமை தாங்கிய சிறுவர் இசை நிகழ்ச்சியான “என்னோடு பாட்டுப் பாடுங்கள்” பற்றியும் கூறுகிறது. இந்த நிகழ்ச்சிகளின் பதிவு தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு வழிகாட்டியாகப் பயன்படுத்தப்பட்டது. மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைப் பொருட்படுத்தாது, தமிழீழ நடைமுறை அரசு எவ்வாறு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்காக செயல்பட்டது என்பதற்கான மற்றுமோர் எடுத்துக்காட்டு.
இந்த ஒலிக் கோப்பு 25. செப்டெம்பர் 2020 அன்று TamiNet இணையதளத்தில் வெளியான “South Asia mourns SPB’s demise” என்ற செய்திக் கட்டுரையில் ஒலிப் பதிவாக வெளியிடப்பட்டுள்ளது. இது TamilNet அமைப்பின் செயல்பாட்டு நடவடிக்கைகளில் உருவான எழுத்துரு மற்றும் ஒலி வடிவப் பதிவுகளாகும். இது 2007 ஆம் ஆண்டு தமிழீழத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வான இசைக் கூட்டுமுயற்சியின் மீள் நினைவுப் பதிவு ஆகும். இப்பதிவு TamilNet எனும் அமைப்பின் வரலாற்று ஆவணப் பொருளாக எதிர்காலத்தில் இருக்கும். இந்த கூட்டுமுயற்சி நடவடிக்கையை நினைவு கூர்ந்து மீளக் கூறுவதற்கு 2007 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நிகழ்ந்த அச்செயற்பாட்டில் உருவான அசல் வரலாற்றுச் சான்றுகள் அடிப்படையானவை.

எஸ்.பி.பியின் ஈழப் பாடல்கள்:
தலைப்பு: “உலக மனிதம் தலைகள் நிமிரும்”
குறுவட்டு (CD): எங்களின் கடல்
பாடலாசிரியர்: கு. வீரா
இசையமைப்பாளர்: தெய்வேந்திரன்
ஆண்டு: 2007
பாடல் தயாரிப்பு இடம்: தமிழ் நாடு, இந்தியா
தலைப்பு: “அனுராத புறத்திற்கு நடக்கிறோம்” (walking to Anurathapuram)
திரைப்படம்: எல்லாளன் (எல்லலன் என்பது ஒரு தமிழீழ திரைப்படம் ஆகும். இது போர் திரைப்பட வகையைச் (war film genre) செர்ந்தது. பண்டைய காலத்தில் அனுராதபுர இராச்சியத்தை ஆண்ட தமிழ் மன்னரின் பெயர் எல்லாளன் ஆகும்.)
பாடலாசிரியர்:
இசையமைப்பாளர்: தெய்வேந்திரன்
ஆண்டு: 2007
பாடல் தயாரிப்பு இடம்: தமிழ் நாடு, இந்தியா
திரைப்படத் தயாரிப்பு இடம்: தமிழீழம்
எல்லாளன் திரைப்படத்தைப் பார்க்க
தலைப்பு: “வானத்தில் ஏறிய”
திரைப்படம்: எல்லாளன்
பாடலாசிரியர்: புதுவை இரத்தினதுரை
இசையமைப்பாளர்: தெய்வேந்திரன்
ஆண்டு: 2007
பாடல் தயாரிப்பு இடம்: தமிழ் நாடு, இந்தியா
தலைப்பு: “தாயக மண்ணே”
திரைப்படம்: எல்லாளன்
பாடலாசிரியர்:
இசையமைப்பாளர்: தெய்வேந்திரன்
ஆண்டு: 2007
பாடல் தயாரிப்பு இடம்: தமிழ் நாடு, இந்தியா
தலைப்பு:
குறுவட்டு (CD): களத்தில் கேட்கும் கானங்கள்
பாடலாசிரியர்:
இசையமைப்பாளர்: தெய்வேந்திரன்
ஆண்டு: 2007
பாடல் தயாரிப்பு இடம்: தமிழ் நாடு, இந்தியா
வேண்டுகோள்
ஈழத் தயாரிப்புகள் என்பது ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் சார்ந்த தயாரிப்புகளை மட்டும் குறிக்க வேண்டும் என்பது அர்த்தம் அல்ல. ஈழத்தைத் தளமாக அல்லது புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களைத் தளமாகக் கொண்ட எழுத்துரு, ஒலி/ஒளி மற்றும் திரைத் தயாரிப்புகளை (text production, audiovisual production and screen production) தமிழ் இனத்தின் ஈழத் தயாரிப்புகள் என்று வகைப்படுத்தலாம். இந்தக் கட்டுரை ஈழத்தயாரிப்புகளில் ஒலி வடிவப் பாடல் (audio songs), இசைக் காணொளி (music video), குறும்படம், முழு நீளத் திரைப்படம், தொலைக்காட்சித்தொடர், நிகழ்சிகள், ஏனைய பொழுதுபோக்கு ஊடகத் தயாரிப்புகளை மையப்படுத்தி எழுதுகின்றது. இந்த ஈழத்தயாரிப்புகளை பின்னர் அதன் ஊடக வாரியாக வகைப்படுத்தலாம். உதாரணமாக ஈழப்பாடல்கள் (ஒலி, ஒளி விடிவு – audio songs/ music video). அதனை வீரம், காதல் என்று பல்வேறு விதமாக பிரிக்கலாம். இவ்வாறான பிரிவுகளை “genre” என்று ஆங்கிலத்தில் அழைப்பர்.
ஒலி மற்றும் ஒளி வடிவிலான ஈழப்பாடல்கள் இணையத்தில் பல இணையத் தளங்களிலும் மற்றும் சமூக ஊடகங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. DsporA Tamil Archive இக்கட்டுரைக்காக SPB பாடிய ஈழப்பாடல்களை இணையத்தில் தேடியபோது கிடைத்தது. ஆனால் அவை தனது தோற்றம், நோக்கம் மற்றும் சூழலைக் கூறும் தகவல்கள் இல்லாமல் பொது அணுக்கத்திற்கு கிடைக்கின்றன. இதனால் நாம் தமிழ் இசை, திரை மற்றும் பிற ஊடக தளங்களிடம் ஈழத் தயாரிப்புகளை சேகரித்து, வகைப்படுத்தி, குறியிட்டு, பேணிப் பாதுகாத்து மற்றும் பொது அணுக்கத்திற்கு விடுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
எடுத்துக்காட்டாக, பின்வரும் தகவல்களுடன் ஈழப் பாடல்களை வகைப்படுத்தி பட்டியலிடலாம்:
பாடல் வகை / ஊடகம் (genre/ media)
பாடல் தலைப்பு
பாடலாசிரியர்
பாடகர்கள்
இசை அமைப்பாளர்
எந்த குறுவட்டு (CD) / திரைப்படத்தில் வெளியிடப்பட்டது
குறுவட்டு / திரைப்படத்தின் பெயர்
தயாரிப்பு ஆண்டு
தயாரிப்பு இடம்
இந்த தயாரிப்பு தோன்றிய சூழல்
வெளியிடப்பட்ட குறுவட்டு / DVD இன் முன் அட்டை மற்றும் பின் அட்டையின் எண்ணிமப் படம்
இயற்புரு (original physical document) மூலப்பிரதியை எண்ணிமப்படுத்துவதுடன் (digitalise) அந்த மூலப் பிரதியைப் பேணிப்பாதுகாத்தல் இன்றியமையாதது. சமூக ஊடங்களில் இத்தயாரிப்புகளை பொது அணுக்கத்திற்கு விடுவது பரவலாக்குதல் அன்றி பேணிப்பாதுகாத்தல் அல்ல.
இதன் நோக்கம் ஈழத்தயாரிப்புகளின் (அனைத்து வாகைகள்-various genres) தோற்றம், நோக்கம் மற்றும் சூழலைப் பேணிப் பாதுகாத்து, வகைப்படுத்தி, பட்டியலிட்டு, பொது அணுக்கத்திற்கு விடுவதே ஆகும். அதாவது தமிழ் மொழி, கலை, பண்பாடு, வரலாற்றுப் பாரம்பரியத்தை தமிழ் மற்றும் ஏனைய இனத்தவரின் சமகால, எதிர்கால சந்ததியினருக்கு கொடுப்பதே அடிப்படை செயல்பாடு ஆகும். அதுவே ஆவணப்படுத்தல் ஆகும்!
பேணிப் பாதுகாத்தல்
இக்கட்டுரையில் IBC தமிழ், Tamil Guardian, TamilNet மற்றும் இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் வலைத்தளம் ஆகிய ஊடகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த எண்ணிம ஊடகங்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது. உதாரணமாக TamilNet இல் வெளியான SPB பற்றிய கட்டுரை மற்றும் ஒலிக் கோப்பு tamilnet.com இணையதளத்தில் தற்போது பொதுப் பாவனைக்கு உள்ளது. இப்பதிவு இரண்டு தமிழ் பிரதேசங்களிற்கு இடையே 2007 ஆம் ஆண்டு இருந்த இசைக் கூட்டுமுயற்சியின் வரலாற்றுப் பதிவையும் மற்றும் அது புலம்பெயர் வாழ் தமிழரில் உருவாக்கிய தாக்கத்தையும் பிரதிபலிக்கின்றது. உலகத் தமிழர்களிடையே இருக்கும் தொலைதூர உறவையும் தொடர்பையும் பிரதிபலிக்கும் பதிவுகளை உள்ளடக்கும் இந்த வலைத்தளத்திற்கான ஒரு பேணிப் பாதுகாத்தல் திட்டம் (preservation plan) உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது. ஒவ்வொரு நாடுகளைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழ் ஊடகங்கள் தமது வதிவிட நாட்டில் தங்களது ஊடத் தயாரிப்புகளைப் பேணிப்பாதுகாக்கும் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். பேணிப்பாதுகாத்தலின் நோக்கம் பொதுப் பாவனைக்கு விடுவது ஆகும். அதுவே வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தும்.
நோர்வேயில், நோர்வேயிய தேசிய நூலகத்தில் உள்ள Nettarkivet எனும் பிரிவு வலைத்தளங்களை எதிர்காலத்திற்காகப் பேணிப் பாதுகாக்கும் செயற்பாட்டைக் கொண்டுள்ளது.
வலைத்தளங்களைப் பேணிப் பாதுகாப்பது பற்றி மேலும் வாசிக்க: “நோர்வே தேசிய நூலகம்: ஒப்படைப்புக் கடமை (Pliktavlevering)” என்ற கட்டுரையில் “எண்ணிமப் பொருள்: வலைத்தளம்” எனும் பகுதியைப் பார்வையிடவும்.
புலம்பெயர் தமிழ் வலைத்தளங்கள்
Tamilnet.com ஒரு இலாப நோக்கற்ற செய்தி நிறுவனம் ஆகும். இது செப்டெம்பர் மாதம் 1995 இல் ஒரு மின்னஞ்சல் அஞ்சல் பட்டியலாகத் தொடங்கியது. பின்னர் யூன் 1997ம் ஆண்டு ஒரு வலைத்தளமாக உருவானது. இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் மூல வலைத்தளம் அமெரிக்காவில் 18ம் திகதி டிசம்பர் மாதம் 1996ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை புலம்பெயர் தமிழர்களின் வரலாற்றைத் தேடும் பணியில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இதற்கு முந்தைய முயற்சிகள் எதுவும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இலங்கை தமிழ்ச் சங்கத்தின் வலைத்தளத்தின் தற்போதைய ஆசிரியருடன் மேற்கொண்ட மின்னஞ்சல் தகவல்தொடர்பின் அடிப்படையில் இந்த வலைத்தளத்தின் ஆரம்ப நோக்கத்தை கூறினார்: “இந்த வலைத்தளம் நிறுவப்பட்ட நேரத்தில், இதுவே ஒரே ஒரு புலம்பெயர் வாழ் ஈழத் தமிழ் வலைத்தளமாக இருந்தது. எனவே இத்தளத்தின் மூல ஆசிரியர் வரலாற்றுப் பதிவுகளை பகிரங்கப்படுத்த வேண்டிய கடமையை உணர்ந்தார். இல்லையெனில் அவை கிடைக்காது. இதுவே வலைத்தளத்தின் மூலப் பதிப்பான Factbook இன் அடிப்படையாகும்.- https://www.sangam.org/Factbook.htm” (தமிழாக்கம்)
மறுபுறம், ஈழத்தில் உள்ள தமிழ் நிலவரங்களை சர்வதேச சமூகத்திற்குக் கொண்டு செல்வதற்காக ஆங்கில மொழியில் ஒரு செய்தி நிறுவனமாக tamilnet.com ஆரம்பிக்கப்பட்டது. ஏனெனில் இலங்கை அரசாங்கத்தால் அவை தடைசெய்யப்பட்டு, வடிகட்டப்பட்டு மற்றும் மறைக்கப்பட்டது, என்று TamilNet நிறுவுனர் கூறினார்.
பொறுப்புத் துறப்பு:
தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இதனால் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களில் வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளது.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை எழுதுவது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்கமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.
புதுப்பிப்பு│Update: 08.12.2020