
கனடாவில் உள்ள ஒரு தமிழ் அமைப்பான «Tamils in Canada» 27 ஓகஸ்ட் 2020 அன்று DsporA Tamil Archive வைத் தொடர்பு கொண்டது. கனடாவில் உள்ள ஆவணகத்தில் தங்கள் அமைப்பின் உள்ளக ஆவணகத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் நடைமுறைகளைக் கண்டறிய அவர்கள் முதல் முயற்சியை எடுத்துள்ளனர்.
அந்த குறிப்பிட்ட தமிழ் அமைப்பிற்கு உதவும் வண்ணம் Library and Archive Canada க்கு DsporA Tamil Archive மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது. அம்மின்னஞ்சலில் ஒரு அமைப்பின் உள்ளக ஆவணகத்தை (தனியார் ஆவணங்களில் ஒரு வகை) கனடாவில் பேணிப் பாதுகாத்தல், ஆவணங்களை எண்ணிமமயமாக்குதல் மற்றும் வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் பதிவுகளை ஆவணப்படுத்தல் பற்றிய தகவல்கள் மற்றும் நடைமுறைகளை கோரியுள்ளோம். அதற்கு ஒரு தானியங்கிப் பதிலைப் பெற்றுக் கொண்டோம். உலகளாவிய தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக, Library and Archive Canada அதன் பொது சேவை மையங்கள் மற்றும் ஆலோசனை அறைகள் (consultation rooms) மற்றும் அதன் பல சேவைகளை படிப்படியாக மீண்டும் பொது மக்களுக்காக தொடங்கியுள்ளது. எங்கள் கேள்விக்கு அவர்கள் விரைவில் பதிலளிப்பார்கள் என்றும், ஆனால் மிகவும் சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்க 4 மாதங்கள் ஆகலாம் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.
DsporA Tamil Archive குறிப்பிட்ட தமிழ் அமைப்புடன் தொலைத் தொடர்பு கொண்டுள்ளது. அவர்கள் இப்போது Library and Archive Canada ற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் குறித்து நேரடி தொடர்பு மேற்கொள்ளவுள்ளனர். இதனுடன் கனடாவில் தனியார் ஆவணங்களைப் பேணிப் பாதுகாத்தலில் உள்ள உரிமையைப் பற்றிய சட்டபூர்வ முறைகளைக் கேட்டறிவது பொருத்தமானதாக இருக்கும். நோர்வே ஆவணச் சட்டத்தின்படி, ஒரு தனியார் ஆவணம் (அரசாங்க அமைப்புகள்/ திணைக்களங்களால் உருவாக்கப்பட்ட ஆவணங்களைத் தவிர அனைத்து வகையான ஆவணங்கள்) இரண்டு வெவ்வேறு உரிமை முறைகளின் கீழ் ஒரு ஆவணகத்தில் பேணிப் பாதுகாக்கப்படலாம்.
- ஒப்படைத்தல் (handing over/ avlevering)
- வைப்பு (depositing/ deponering)
இதன் முக்கிய வேறுபாடு ஆவணங்களின் உரிமையில் உள்ளது.
“ஒப்படைத்தல்” ஒழுங்கு முறையில், ஆவணங்களின் உரிமை ஆவணகத்திடம் முழுமையாக வழங்கப்படுகிறது. அதாவது ஆவணப் பொருட்களில் பாதுகாக்க வேண்டியுள்ள இரகசிய அல்லது தனிப்பட்ட விபரங்களை (confidentiality and privacy policy/ taushetsplikt og personvern) கருத்தில் கொண்டு ஆவண அணுகலுக்கான மதிப்பீட்டு அதிகாரம் ஆவணகத்திடம் கொடுக்கப்படும். மறுபுறம், “வைப்பு” என்பது ஆவண உருவாக்குனரிடம் முழு உரிமையும் இருக்க, ஆவணங்கள் ஒரு ஆவணகத்தில் ஆவணப்படுத்தப்படும்.
(“ஆவணகத்தில் ஆவணப்படுத்த இரு ஒழுக்கு முறைவகள்” பற்றி மேலதிகமாக வாசிக்க)
உங்கள் குடியிருப்பு நாட்டில் உள்ள ஒரு ஆவணகத்தில் ஆவணப்படுத்துவதில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, அதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அனைத்து வகையான அடக்குமுறைகளைக் கண்ட தமிழர்களின் நீண்ட கால வரலாற்றில் தகவல் தெரிவிப்பு மற்றும் தகவல் பெறுதல் உரிமை நிராகரிப்பும் உள்ளடங்கும். 1981 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது தமிழ் இருப்புக்கான வரலாற்று ஆதாரங்களை முன்வைக்கும் திறனை அழிப்பதற்கான ஒரு பண்பாட்டு இனப்படுகொலைக்கான ஒரு எடுத்துக்காட்டாகும். இவ்வாறு தாயகத்திலும் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் இன்னும் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அவை அறிந்தோ அல்லது அறியாமலோ பண்பாட்டு மற்றும் வரலாற்று தகவல்கள் மற்றும் சான்றுகளை தடுத்து வைத்தல், மறைக்கப்படுதல், அழிக்கப்படுதல் போன்ற செயற்பாடுகளிற்குள்ளாகுகின்றன.
முழுமையான பேணிப் பாதுகாத்தல் என்பது எந்தவொரு இயற்கை, மனித அல்லது தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட அழிவுகளிலிருந்தும் பண்பாட்டு மற்றும் வரலாற்று ஆவணங்களை நன்கு கவனித்துப் பேணிப் பாதுகாத்தல் ஆகும். பேணிப் பாதுகாத்தலில் பொது அணுகலும் அடங்கும். இதுவே ஒருவரின் வாழ்க்கை முடிந்த பின்னரும் வரலாற்றை தொடர்ந்து வாழ வைக்க ஒரே வழி.
“ஆவணங்கள் இருப்பிற்கான சான்றுகள்.”
DsporA Tamil Archive
புதுப்பிப்பு│Update: 01.12.2020