27. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது.
பேர்கனில் உள்ள ஒர் தமிழ் அமைப்பு பேர்கன் நகர ஆவணக்காப்பகத்தை வெள்ளிக்கிழமை, 26 யூன் 2020, அன்று அங்கு சென்று பார்வையிட்டுள்ளதை பெரும் மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். அவர்கள் தமது ஆவணங்களை காப்பகப்படுத்துவதற்காக ஒர் முயற்சிக்கு முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது.
அங்கு சென்ற அமைப்பின் பிரதிநிதியை ஒரு ஆவணக்காப்பாளர் வரவேற்றுக் கொண்டார். அந்த ஆவணக்காப்பாளர் ஆவணக்காப்பகத்திற்குள் ஒரு சுற்றுப்பயணத்தையும், ஆவணக்காப்பக பணி தொடர்பாக தகவல் மற்றும் கலந்துரையாடலையும் வழங்கினார்.
அந்த தமிழ் அமைப்பு பேர்கன் நகர ஆவணக்காப்பகத்தில் தமது சில ஆவணப் பொருட்களை மிக விரைவில் பாதுகாத்து பொது அணுக்கத்திற்கு வழங்க முடிவு செய்யும் என்று நம்புகிறோம்.
ஆவணக்காப்பகப் பொருட்களைப் பாதுகாக்க அந்த அமைப்பு முடிவு செய்தவுடன் ஆவணத்தின் விபரங்களைத் தருகின்றோன்.
பல தமிழர்கள் எண்ணிம அணுக்கத்தில் கவனம் செலுத்துவதை நாம் அறிவோம். ஏனென்றால் அதனூடாக உலகளாவிய தமிழர்கள் ஆவணக்காப்பகப் பொருட்களை இணைய வழியில் அணுகலாம் என்பதற்காக. நாம் எண்ணிமமயமாக்கப்பட்ட ஆவணப் பொருட்கள் அல்லது எண்ணிம முறையில் உருவாக்கப்பட்ட ஆவணப் பொருட்களைப் பேணிப் பாதுகாப்பதற்கான ஓர் தீர்வைக் காண உரையாடலில் இருக்கின்றோம்.
நோர்வேக்கு புலம்பெயர்ந்த முதலாம் தலைமுறை தமிழர்கள் தமது நேரத்தை ஒதுக்கி, நோர்வேயில் உள்ள ஒரு ஆவணக்காப்பக நிறுவனத்தைப் பார்வையிட ஓர் வாய்ப்பை அளித்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றிகள்.
தமிழர்களின் வரலாற்று மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தை (historical and cultural heritage) நீங்களே வைத்திருக்கிறீர்கள். அவை எதிர்கால தலைமுறையினருக்கு அவசியமான மற்றும் மதிப்புமிக்க சொத்துக்கள். இந்த ஆவணப் பொருட்கள் நோர்வேயிய ஆவணப் பாரம்பரியத்தினும் (documentation heritage) ஒர் பங்கு வகிக்கின்றதை மறந்துவிடாதீர்கள்.
மீண்டும் எமது முதலாம் தலைமுறை புலம்பெயர் தமிழருக்கு நன்றிகள்.
பேர்கன் நகர ஆவணக்காப்பகம்:
https://www.bergen.kommune.no/omkommunen/avdelinger/bergen-byarkiv
புதுப்பிப்பு│Update: 24.11.2021