13. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது.
அனைவருக்கும் வணக்கம்,
கடந்த ஓரிரு வருடங்களாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் ஆவணக்காப்பு பற்றிய ஒர் புதிய அதிர்வலை அல்லது ஒரு பொதுச் சிந்தனை காணப்படுகின்றது. அவர்கள் பல்வேறு வலைத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் தங்கள் கதைகளை உலகுக்கு சொல்ல வேண்டும் என்ற தூண்டுதலுக்கு உள்ளாக்கப்படுவதை காணக்கூடியதாக உள்ளது. அவர்கள் தங்கள் கதைகளை பாதுகாக்கவும் ஆவணப்படுத்தவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழி, வரலாறு, கலை, பண்பாடு சார்ந்த கடந்த கால மற்றும் சமகால காணொலிகள், புகைப்படங்கள், போன்ற ஆவணங்களை இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிடுகிறார்கள்.
“ஆனால் ஆவணம் என்றால் என்ன?” என்று ஒரு தோழி என்னிடம் கேட்டார். ′′ஆவணம்′′ என்ற சொல் கூட பலருக்கு தெரியாத ஒரு சொல்லாக இருக்கும் என்று என்னிடம் சுட்டிக் காட்டினார். ஆகவே, “ஆவணம்” என்றால் என்ன என்பதை ஒரு தொடராக விவரிக்க முயல்கின்றேன்.
“ஆவணம்” என்றால் என்ன? – பகுதி 1: சொற்கூறுகளைப் பற்றிய பொதுவான புரிதல் உருவாக்குதல்:
இந்த படத்தின் அடிப்படையில் எனது அடுத்தடுத்த இடுகைகள் அமையும்.
எந்த மொழியாக இருந்தாலும், சொற்களின் மொழிபெயர்ப்பு என்று வரும்போது, துல்லியமான மொழிபெயர்ப்பை உருவாக்குவது கடினம்.
புலம்பெயர் தமிழரின் வாழ்வியலில், அவர்கள் பல்வேறு நாடுகளில் சிதறி வாழ்கின்றனர். அவர்கள் வாழும் நாட்டின் மொழியின் அடிப்படையில் ஒரு மொழிபெயர்ப்பு பல்வேறு விதமாக புரிந்து கொள்ளப்படலாம். ஏனெனில் ஒரு சொல்லின் அர்த்தமும் விளக்கமும் அதன் பிரதேசம், பண்பாடு, வரலாறு மற்றும் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைகின்றது. எனவே, ஒரு பொதுவான புரிதலை உருவாக்க நான் “Archive” மற்றும் “Recording keeping” என்ற ஆங்கில சொற்களை எடுக்கின்றேன்.
சொற்கூறுகள் (Terms):
- “Record” என்றால் “பதிவு”, “ஏடு”
- “Record keeping” என்றால் “பதிவேடு செய்தல்”.
- “Record management” என்றால் “பதிவேட்டு முகாமை”.
- “Archive” என்றால் “ஆவணகம்”/ “ஆவணக்காப்பகம்”.
- “Document” என்றால் “ஆவணம்”.
- Documenting/ Archiving என்றால் “ஆவணப்படுத்தல்”.
தமிழரிடத்தில் சொற்கூறுகளின் பாவனை:
“பதிவு இருக்க வேண்டும்” அல்லது “பதிய வேண்டும்” என்று தமிழர் பேச்சு வளக்கில் கூறுவார்கள். «பதிவு» என்ற சொல்லை பரவலாகப் பயன்படுத்துவார்கள். அது “பதிவேடு செய்தல்” (record keeping) என்பதையே குறிக்கும். ஆனால், எவ்வாறு ஒரு பதிவு உருவாக்கப்பட வேண்டும் என்ற அறிவூட்டல் தேவையாக உள்ளது. அதோடு ஒரு “பதிவிற்கும்” “ஆவணத்திற்கும்” இடையில் உள்ள தொடர்பு பற்றிய அறிவூட்டலும் தேவையாக உள்ளது.
மறு பக்கம், “ஆவணப்படுத்த வேண்டும்” என்று கூறுவார்கள்.
′′ஆவணம்′′ என்றால் வேறு ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு வெளியிட்ட கடந்த கால வரலாற்றுப் படைப்புகள் என்பதையே பொதுவாக ஆவணம் என்று நினைக்கின்றார்கள். உதாரணத்திற்கு புத்தகங்கள், பத்திரிகைகள், புகைப்படங்கள், ஒளியும் ஒலியும் என்று கடந்த கால படைப்புகளையே ஆவணம் என்று கருதுகின்றனர். குறிப்பாக தமிழரின் உரிமைப் போராட்டப் பதிவுகளையே ஆவணம் என்று கருதுகின்றனர். இந்தப் பதிவுகளும் முக்கியமான “ஆவணங்கள்” என்பதை நான் இங்கு அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். ஆனால் “ஆவணம்” என்பது இன்னும் பல பக்கங்களைக் கொண்டவை.
தொடரும்….
அடுத்த பதிவு: ′′ஆவணம்′′ என்றால் என்ன”? – பகுதி 2: ஏன் தமிழரிடத்தில் «பதிவு» / «ஆவணம்» பற்றிய போதிய புரிதல் இல்லை?
தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றுப், பாரம்பரியத்தின் (cultural and historical heritage) ஒரு சிறிய பகுதியை உங்கள் வீட்டில் வைத்திருக்கின்றீர்கள் என்பதை என்றும் மறந்துவிடாதீர்கள். அதன் பொது அணுகலுக்கு (public access) வழியமையுங்கள்.
புதுப்பிப்பு│Update: 24.11.2021