சிவராஜா கணபதிப்பிள்ளை நினைவு மலர் – ஒரு உறவுப் பால ஆளுமை

அமரர் சிவராஜா கணபதிப்பிள்ளை அவர்களின் நினைவு நிகழ்வும் நூல் வெளியீடும் 16.02.2022 அன்று மாலை 6 மணிக்கு ஒசுலோ ச உட்சிக்டென் கரிஹவுகன் மண்டபத்தில் (Utsikten Selskapslokale Karihaugen) நடைபெற்றது. இந்நிகழ்வை அவரது குடும்பத்தினரும், தமிழ் அமைப்புகளும், நோர்வே வாழ் தமிழர்களும் இணைந்து ஒழுங்கு செய்து நினைவு கூர்ந்தனர்.

நினைவு நிகழ்வில் “கணபதிப்பிள்ளை சிவராஜா: வாழ்வும் தடமும் 1944-2020” என்ற நினைவு மலர் (நினைவுத் தொகுப்பு நூல்) வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வை வசீகரன் கிரியேஷன் தமிழ் (Vaseeharan Creation Tamil) ஒலி/ஒளிப் பதிவு செய்தார்கள். அதோடு ரமேஷ் சிவராஜா அவர்கள் புகைப்படப் பதிவையும் செய்தார்.

Vlog #05 Tamil | Late Kanapathippillai Sivarajah | Memorial Anthology Book | 16.02.2022 | Part 1 (Vaseeharan Creations தமிழ்)
Vlog #06 Tamil | Late Kanapathippillai Sivarajah | Memorial Anthology Book | 16.02.2022 | Part 2 (Vaseeharan Creations தமிழ்)

சிவராஜா கணபதிப்பிள்ளை

1972 ஆம் ஆண்டு, சிவராஜா கணபதிப்பிள்ளை ஈழத்தின் வட மாகாணமான யாழ்ப்பாணத்திலுள்ள தும்பளை கிராமத்திலிருந்து வட நோர்வேயில் உள்ள ஹாமர்ஃபெஸ்டுக்கு (Hammerfest) தொழில் வாய்ப்புத் தேடிப் புலம்பெயர்ந்தார். நோர்வேயின் வடதுருப வலயத்தில் குடியேறிய முதல் தமிழர்களில் இவரும் ஒருவர் ஆவர். அவர் ஹேமர்ஃபெஸ்டில் உள்ள ஃபைண்டஸ் (Findus) மீன் தொழிற்சாலையில் பணிபுரிந்த காலத்தில், துறொம்சோ (Tromsø) பல்கலைக்கழகத்தில் மீன்வளத்துறைக் கல்வியை மேற்கொள்வதற்கான பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றார். ஃபைண்டஸ் மீன் தொழிற்சாலையில் ஒரு தொழிலாளியாக இருந்த காலம் தொடக்கம், இலங்கையில் தான் கொண்ட சமூக-அரசியல் ஈடுபாடு காரணமாக நோர்வேயிலும் அப்பணிகளை ஆரம்பித்தார். அவரது முப்பரிமாண சமூக-அரசியல் பணிகளின் தடங்களை பின்வரும் களங்களில் காணலாம்: சமூக-அரசியல் பங்கேற்பு மற்றும் ஜனநாயக பிரதிநிதித்துவம் ஊடாக நோர்வே பெரும் சமூகத்துடன் ஒருங்கிணைதல், நோர்வே தமிழ் சமூகத்தின் நலனை மேம்படுத்தல், தாயகத்தை நோக்கிய அபிவிருத்தி நடவடிக்கைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். அன்று வெளியிடப்பட்ட நினைவு மலர் அவரைத் தனிப்பட்ட மற்றும் சமூக-அரசியல் அரங்குகளில் ஒரு போராட்ட ஆன்மாவாகப் பிரதிபலித்திருந்தது.

தனது மகளைப் பிரசுவித்ததையொட்டி சுகயீனமுற்ற மனைவியின் இறப்பு, அதனைத் தொடர்ந்து தனது மகளைத் தத்துக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்ட சிவராஜா அவர்களின் வாழ்க்கைப் பதிவுகள் இந்த நினைவு மலரின் உருக்கமான பதிவுகளாக அமைந்துள்ளன. அவரது மகள்  மற்றும் குடும்பத்தினரின் நினைவுப் பதிவுகள் எதிர்காலத்திற்கு வேறு யாராலும் கடத்த முடியாத கதைகளைச் சொல்கின்றன. அந்த நினைவுகள் அமரர் சிவராஜா கணபதிப்பிள்ளையின் மறைமுகமான பக்கங்களைப் பிரதிபலித்ததுடன், அவருடைய வாழ்வில் சொல்லப்படாத பகுதிகளையும் பதிவு செய்கின்றன. இவ்வாறான நினைவுப் பதிவுகளே மனித வாழ்வில் இயல்பாக இருக்கும் துயரமும் வலியும் போராட்டத்தையும் கண்முன் காட்சிப்படுத்தும். அவை வளர்ந்து வரும் சமூகத்திற்கு எதார்த்த வாழ்க்கையை அறிமுகப்படுத்தும். சவால்களை எதிர் கொள்வதற்கான வழிகாட்டியாக அமையும். கடந்த கால வாழ்க்கை வரலாறுகள் எமக்கு முன்மாதிரியாக இருந்து அனுபவப் பாடங்களாக அமையும்.

சமூக-அரசியல் அரங்குகளில் அவர் நோர்வேயில் உள்ள பல தமிழர்களுக்கு ஒரு உத்வேகமாகவும், முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் இருந்ததை இந்த நினைவு மலர்  பிரதிபலிக்கிறது. அதே போல் தாயகம் வாழ் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திலும் வளர்ச்சியிலும் பல தூண்களில் ஒருவராகத் திகழ்ந்ததையும் பதிவு செய்கின்றது. குறிப்பாக, நோர்வேயின் பிரதான சமூகத்தில் தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை உருவாக்கிய அதே நேரம் பூர்வீகப் பாரம்பரியத்தை பாதுகாக்கும் ஒரு ஒருங்கிணைந்த வாழ்விற்கான எடுத்துக்காட்டாக விளங்கினார் என்பதையும் எதிர்காலச் சந்ததியினருக்கு கடத்துகின்றது. அதோடு அவர் நோர்வே மற்றும் தாயகத்தில் கடல் வள மேம்பாட்டு நிபுணராகத் தடம் பதித்ததையும் தொகுத்து வழங்குகின்றது. அதோடு அரசியல்-இராணுவ அமைப்பாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு கடல் வள மேம்பாட்டு நிபுணராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்குக் கொடுக்கப்பட்ட இப்பொறுப்பு, தமிழீழத்தின் கடல் வள மேம்பாடு குறித்து அவர்களின் தொலை நோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறது.

நீண்டகால நோயினால் அவதிப்பட்டு வந்த அவர் 06.12.2020 அன்று பின்லாந்தில் காலமானார். நன்கு அறியப்பட்ட, அன்பான மற்றும் நட்பு மிகுந்த சமூக-அரசியல் ஆளுமை அமைதியாக உலகை விட்டுப் பிரிந்தது. ஆனால் 16.02.2021 வரை அவரது மரணம் அறியப்படாமல் போனது ஒரு கவலைக்குரிய விடயம் ஆகும். நினைவு மலரின் அடிப்படையில், அவரது மரணம் தமிழ் அல்லது நோர்வேயிய ஊடகங்கள் அல்லது சமூகத்தால் நினைவுகூரப்படாமல் போனதும் கவலைக்குரிய விடயம் ஆகும். ஆனால், அவரது குடும்பத்தினரும், தமிழ் அமைப்புகளும் மற்றும் நோர்வே வாழ் தமிழர்களும் இணைந்து அவரை நினைவுகூர்ந்ததும், நினைவு மலர் வெளியிட்டதும் அமரர் சிவராஜா கணபதிப்பிள்ளையின் ஆன்மாவிற்கும், நோர்வே மற்றும் உலகின் பிற பகுதிகளில் வாழும் தமிழருக்கும், தாயகம் வாழ் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் விடயமாகும்.

நினைவேந்தல் நிகழ்வில் ஒரு தனித்துவமான தோற்றம் காணப்பட்டது. இந்நிகழ்வு மறைந்த சிவராஜா கணபதிப்பிள்ளையை தமிழ்ச் சமூகத்திற்குள் “ஒரு உறவுப் பால ஆளுமையாக” பிரதிபலித்திருந்தது. சமூக-அரசியல் நிலைப்பாடு குறித்த வேறுபாடுகளிற்கு அப்பால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களின் முழுமைத்துவத்தில் அந்த தனித்துவத்தைக் காணக்கூடியவாறு இருந்தது. ஒரு “உறவுப் பால ஆளுமை” என்ற முதல் தோற்றத்தை நிகழ்ச்சி நிரல் அடங்கிய நிகழ்வு விளம்பரம்/ அழைப்பிதழ் அளித்தது. எனவே, அப்பிரசுரமும் நோர்வே வாழ் தமிழரின் வரலாற்றைக் கூறும் சுவடிகளில் ஒன்றாக அமையும்.

கமலராணி சேதர் (சிவராஜா கணபதிப்பிள்ளையின் சகோதரி) தமிழ் பாரம்பரிய மங்கள விளக்கை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

தனி நபர்களின் வாழ்க்கை வரலாறு சமூகத்தின் சுவடிகள்

நல்ல நாட்களின் பதிவுகள் மகிழ்ச்சியையும், கெட்ட நாட்களின் பதிவுகள் அனுபவத்தையும், மோசமான நாட்களின் பதிவுகள் படிப்பினைகளையும், சிறந்த நாட்களின் பதிவுகள் நினைவுகளையும் தருகின்றன. உணர்வுகள் மற்றும் அனுபவங்கள் நிறைந்த நாட்கள் நம் வாழ்க்கைப் பதிவுகளை உருவாக்குகின்றன. அதுவே எமது வரலாறாகிறது. ஒரு நபர் மற்ற நபர்களுடன் மேற்கொள்ளும் உறவும் தொடர்பாடலும் ஒரு சமூகத்தின் கதைகளை உருவாக்குகின்றன. ஒரு மக்கள் குழுவின் கதைகள் ஒரு தேசத்தின் வரலாற்றை உருவாக்குகின்றது. அது ஒரு சமூகம் மற்றும் ஒரு தேசத்தின் குணங்கள், பண்புகள், அணுகுமுறைகள் மற்றும் இயல்புகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன. நோர்வே வாழ் தமிழர்களின் வரலாற்றை சித்தரிக்கும் பல குரல்களில் அமரர் சிவராஜா கணபதிப்பிள்ளையின் வரலாறும் ஒன்றாகின்றது. அதோடு அது நோர்வேயின் வரலாற்றிலும் ஒரு பகுதியாகின்றது.

இவ்வாறு, தனிநபர்களிற்கிடையே உள்ள உறவுகள் மற்றும் தொடர்பாடலின் பதிவுகள் “சமூகச் சுவடிகளை” (“social documentation”) உருவாக்குகின்றன.

பரம்பரை வரலாறு – நினைவு மலரும் நினைவேந்தல் நிகழ்வின் பதிவுகளின் முக்கியத்துவம்

நினைவு மலரும், நினைவேந்தல் நிகழ்வின் பதிவுகளும் ஒருவரின் வாழ்க்கையின் இறுதிச் சுவடிகளாக அமையலாம். அமரர் சிவராஜா கணபதிப்பிள்ளை போன்று புலம்பெயர் தமிழ் சமூகத்தில் நன்கு அறியப்பட்ட சமூக அரசியல் ஆளுமைகளிற்கு மட்டும் நினைவு மலர் பிரசுரங்களை உருவாக்குவதோடு நின்று விடாது, தமிழ் சமூகத்தில் அனைவருக்கும் செய்யப்பட வேண்டும். அது சமூகத்தில் ஒருவரது ஈடுபாட்டின் அளவுகோளிற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். இது முக்கியமாக சமூகத்தில் குறைந்த பிரதிநிதித்துவம் அல்லது பிரதிநிதித்துவம் இல்லாத புலம்பெயர் சமூகங்களுக்கு அவசியமானது. இது புலம்பெயர் தமிழர்களின் குடும்ப மற்றும் பரம்பரை வரலாற்றைப் (genealogy) பேணுவதற்கும் இன்றியமையாதது. எனவே நினைவு மலர் மற்றும் நினைவேந்தல் நிகழ்வின் பதிவுகள் போன்ற புலம்பெயர் தமிழர்களின் “சமூகச் சுவடிகளை” உருவாக்குவதற்கு குடும்பங்கள், தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் சமூகம் ஆகிய மூன்று பங்காளர்களும் இணைந்து ஆவணப்படுத்தல் மற்றும் காப்பகப்படுத்தல் போன்ற செயற்பாடுகளைச் செயற்படுத்த வேண்டும்.

பெண்களின் சுவடிகள்

பெண் தனிநபர்களின் சமூக தொடர்பாடல் மற்றும் உறவுகளை அவர்களின் சமூக ஈடுபாடு, பொறுப்பு அல்லது பாத்திரம் ஆகியவற்றின் அளவை பொருட்படுத்தாமல் சமமாக ஆவணப்படுத்துவது அவசியம். எனவே, “சமூகச் சுவடிகள்” பாலினப் பிரதிநிதித்துவத்தையும் எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியாக இருந்து வழிகாட்டும். டிசம்பர் 2004 ஆம் ஆண்டு ஈழத்தில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த பிலோமினம்மா ஜோர்ஜின் நினைவு மலர் நோர்வேயில் வாழ்ந்த தமிழ் பெண் ஒருவரின் அரிய சுவடிக்கான ஒரு உதாரணம்.

மறைந்த சிவராஜா கணபதிப்பிள்ளையின் நினைவு மலரின் பேணிப் பாதுகாப்பு

இருமொழியில் வெளியான மறைந்த சிவராஜா கணபதிப்பிள்ளை அவர்களின் நினைவு மலரின் இயற்பியல் நகல் இரண்டு நோர்வேயில் நீண்டகாலப் பேணிப் பாதுகாப்பு மற்றும் பொதுப் பயன்பாட்டிற்காக நோர்வேயின் தேசிய நூலகத்திற்கு 28. பெப்ரவரி 2022 அன்று அனுப்பப்பட்டது. நினைவு மலரின் மூன்று பிரதிகள் மற்றும் துண்டுப் பிரசுரத்தின் நகல் நோர்வேயில் Mo i Rana எனும் இடத்திற்கு அனுப்பப்பட்டது. 19. மார்ச் 2022 அன்று, நினைவு மலரின் எண்ணிமக் கோப்பு எண்ணிமப் பேணிப் பாதுகாப்பிற்காக பதிவேற்றப்பட்டது. மேலும், நிகழ்ச்சிப் பட்டியலுடன் கூடிய நிகழ்ச்சி அழைப்பிதழும் நீண்டகாலப் பேணிப் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டது.

இத்தகைய உள்ளூர் சுவடிகள் நோர்வேயின் காப்பகக் களஞ்சியங்களில் பாதுகாப்பதுடன், தமிழ் சமூகத்திலும் பாதுகாக்க, காட்சிப்படுத்த, அணுக்கம் கொடுக்க, பயன்படுத்த, விநியோகிக்க தமிழ் பொதுத் தளங்களை உருவாக்குவது அவசியம். அதை செயல்படுத்த புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் தமிழ் சமூகத்தை ஊக்குவிக்கின்றது. தமிழ் சமூகத்தின் உள்ளூர் வரலாற்றைக் கூறும் வெளியீடுகள் மற்றும் ஆவணங்களை அணுகுவதற்கும்  பயன்படுத்துவதற்கும் உள்ளூரில் பழக்கமான தளங்களாக தமிழ் தளங்கள் செயற்படும். இத்தகைய தளங்கள் நூல்களை இரவல் வாங்குவதற்கும் படிப்பதற்கும் மட்டுமான தளமாகப் பார்க்காமல். அவை அடையாளச் சின்னங்களாக பார்ப்பது அவசியம். ஏனெனில் தமிழ் சமூகத்தில் உருவாகும் நினைவுச்சின்னங்கள் நிகழ்கால மற்றும் எதிர்கால சந்ததியினரின் அடையாள உருவாக்கத்திற்கு பங்களிக்கும்.

புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்களாகிய நாம் நோர்வே வாழ் தமிழ் சமூகத்தை கடந்த காலத்திலிருந்தும் நிகழ்காலத்திலிருந்தும் நோர்வேயில் வெளியிடப்பட்ட நினைவு மலர்களைப் பற்றி அறியப்படுத்தி உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.




புதுப்பிப்பு│Update:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: