யூலை 2021ம் ஆண்டு, கனடாவின் வடகிழக்கு ஸ்காபரோவில் தமிழ் சமூக மையத்தைக் (Tamil Community Centre -TCC)ற்கொள் கட்டி எழுப்ப கனேடிய அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது. இந்த நிதி உதவி சமூக மையத்தின் கட்டடப் பணியை தொடங்குவதற்குத் தேவையான $26.3 மில்லியனில் 73% ஆகும். 2016ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கனடாவில் மிகப்பெரிய புலம்பெயர் தமிழ் சமூகம் உள்ள நாடு கனடாவாகும். இது இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் வசிக்கும் நாடாகும். அதோடு, மிகப்பெரிய எண்ணிக்கையிலான புலம்பெயர் ஈழத் தமிழர்கள் வாழும் நாடும் இதுவாகும்.

வடகிழக்கு ஸ்கார்பரோவிலும் தென்கிழக்கு மார்க்கத்திலும் வசிக்கும் மக்களின் மக்கட்தொகைசார் தேவைகள் பற்றி நடாத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில், அவர்களின் தேவைகள் வேறுபட்டவையாக உள்ளது. அந்தத் தேவைகளில், சுவடிகள் காப்பகம், நூலகம் மற்றும் அருங்காட்சியகம் (Archive, Library and Museum – ALM) அதிக எண்ணிக்கை மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. ALM என்பது வரலாற்று மற்றும் பண்பாட்டுப் பாரம்பரிய நிறுவனங்களாகும். அவை ஒரு தேசத்தின் பண்பாடு மற்றும் வரலாற்றை சேகரித்தல் (collect), பாதுகாத்தல் (secure), பேணிப் பாதுகாத்தல் (preserve), தகவல் தெரிவித்தல் (inform) மற்றும் பரவலாக்கம் (disseminate) செய்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டிருக்கும். அவை ஆராய்ச்சி (research), சான்றுகள் (evidence), அறிவு (knowledge) மற்றும் தகவல்களுக்குத் (information) தேவையான முதன்மை (primary source) மற்றும் இரண்டாம் நிலை ஆதாரங்களுக்கு (secondary source) அடைக்கலம் தரும் நினைவக நிறுவனங்களாகும். எனினும் தமிழ் சமூக மையக் கட்டடமே ஒரு அடையாளச் சின்னமாக உருவெடுக்கும். இது தமிழர்களின் பாரிய கனவுகளில் ஒன்றாகும். குறிப்பாக இன, பண்பாட்டு இனவழிப்பின் (ethnical and cultural genocide) வரலாற்றை தமது அடையாளத்தின் ஒரு அங்கமாகப் பெற்ற ஈழத் தமிழர்களின் ஒரு கனவாகும். தமிழ் சமூக மையமானது தமிழ் கனடியர்களுக்கு மட்டுமன்றி, உலகளாவிய புலம்பெயர் தமிழர்களின் அடையாளச் சின்னமாகவும் உருவாகலாம். மறுபுறம், TCC இன் நிரலாக்கத்தின் முன்னுரிமைகளை செயல்படுத்த ALM ஒரு நிபந்தனையற்ற சந்திப்பு இடமாக அமையும். அவை மன ஆரோக்கியம், பெண்களிற்கான சேவைகள், LGBTQ சமூகத்தை உள்வாங்குதல் மற்றும் இயல் அணுக்க (physical accessibility) தரநிலைகளை மேம்படுத்துவதற்கான தளங்களாக அமையும்.

TCC இல் அமையவிருக்கும் ALM ஒரு சிறந்த சமூக அரங்காக அமையும். கனடா வாழ் தமிழ் சமூகத்தின் உள் மற்றும் வெளிப் புற செயல்பாடுகளிற்கான சந்திப்பு இடமாகவும் அமையலாம். வெளிப்புற செயல்பாடுகளில், இது உறவுப் பாலங்களை உருவாக்கலாம். தமிழ் சமூகத்தில் சொல்லப்படாத கதைகள் (untold stories) மற்றும் எதிர்க் கதைகளை (counter narratives) அறிந்து கொள்வதற்கும் வெளிப்படுத்துவதற்குமான தளத்தை உருவாக்கலாம். இது பிரதான சமூகத்துடனான உரையாடல்களை உருவாக்கலாம். உள்ளக செயல்பாடுகளில், இது தமிழ் சமூகத்தில் உள்ள ஒதுக்கப்பட்ட குழுக்களைச் சந்திக்க வைக்கும் ஒரு திறந்த, சுதந்திரமான இடத்தை உருவாக்கலாம்.
உலகளாவிய வடிவமைப்பின் (universal design) கண்ணோட்டத்தில் தமிழ் சமூகத்தின் மக்கள்தொகைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இத்திட்டம், தமிழ் கனடியர்களின் பல்வேறு விதமான மக்களுக்கு உள்வாங்குதல், சகிப்புத்தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றுக்கான நம்பிக்கையை உருவாக்கும்.
இத்தகைய கனவை நனவாக்கும் தமிழ் கனடியர்களை புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் அன்புடன் வாழ்த்தி ஊக்குவிக்கிறது. TCC இல் வரவிருக்கும் ALM பிரிவின் கொள்கை எங்களுக்கு இன்னும் தெரியாவிட்டாலும், இந்த அற்புதமான தருணத்தில், ALM பிரிவிடம் பரிசீலனைக்காக ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறோம்.
“தாயக நோக்குநிலை” (“homeland orientation”) மற்றும் “எல்லைப் பராமரிப்பு” (boundary maintenance”) ஆகியவற்றைக் கொண்டிருப்பது ஒரு புலம்பெயர் சமூகத்தின் (diasporic community) முக்கிய பண்புகளாகும். இது ஒரு உண்மையான அல்லது கற்பனையான தாயகத்தை ஒற்றுமையுடன் பாதுகாக்கவும் பேணிப் பாதுகாக்கவும் ஒரு தொடர்ச்சியான நம்பிக்கையின் நோக்குநிலையாகும். இது பூர்வீகத் தாயகம் மற்றும் அதன் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கான தொடர்ச்சியான பராமரிப்பு அல்லது மறுசீரமைப்பு செயல்பாடுகளைக் கொண்டிருக்கும். மறுபுறம், புலம்பெயர்ந்த நாட்டில் புலம்பெயர் வாழ்வின் வரலாற்றையும் பண்பாட்டையும் பதிவு செய்து ஆவணப்படுத்துவது இன்றியமையாதது. அதன் மூலம் புலம்பெயர் தமிழரின் அடையாளத்தைப் (Tamil diasporic identity) பாதுகாத்து, பேணிப் பாதுகாக்கலாம். கனேடிய தமிழ் புலம்பெயர்ந்தோரின் வரலாற்றையும் பண்பாட்டையும் பங்கேற்புக் காப்பக முறைகள் (participatory archival methods) மூலம் ஆவணப்படுத்தவும் பாதுகாக்கவும் TCC இல் வரவிருக்கும் ALM முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில், படையெடுப்பு, போர், இடம்பெயர்வு போன்ற காரணங்களால் தமிழர்களின் வரலாற்றை புனரமைத்து ஆவணப்படுத்த வேண்டிய ஒரு பாரிய சமூகத் தேவை உள்ளது. இது மேலதிக இழப்பைத் தடுத்து எதிர்கால சந்ததியினருக்கு அறிவையும் பாரம்பரியத்தையும் கடத்துவதற்கான விலைமதிப்பற்ற சொத்தாகும்.
உதாத்துணை
Amarasingam, A. (2015). Pain, Pride, and Politics. University of Georgia Press.
Tamil Community Centre. (2021). Demographic Needs. Tamil Community Centre. https://www.tamilcentre.ca/en/about/demographic-needs
Safran, W. (1991). Diasporas in Modern Societies: Myths of Homeland and Return. Diaspora, 1(1). https://www.academia.edu/5029348/Diasporas_in_Modern_Societies_Myths_of_Homeland_and_Return
Tamil Guardian. (2021). Canadian government grants $26.3 million for Tamil Community Centre in Toronto. Tamil Guardian. https://www.tamilguardian.com/content/tamil-community-centre-and-hub-tamil-canadian-heritage-and-histories-open-toronto
புதுப்பிப்பு│Update: 03.12.2021