அறிக்கை: மெய்நிகர் ஆவணக்காப்பு நாட்கள் 2021 – நாள் 2

ஆங்கில அறிக்கை: அபிராமி சந்திரகுமார்

முன்னுரை:

தமிழீழ விடுதலைப் போரிலும் ஏனைய அழிவுகளிலும் உயிர் இழந்த அனைவருக்காகவும், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பால் கொல்லப்பட்ட மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தி மெய்நிகர் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த இரு நாள் நிகழ்விற்கு தமிழ் இளையோர் அமைப்பு (TYO) நோர்வே கிளையினர் Zoom தொழில்நுட்ப உதவியை வழங்கினார்கள். புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பின் உறுப்பினரான சிவன்யா நகுலேஸ்வரன் 13. யூன் 2021 அன்று நடைபெற்ற நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பு: வரவேற்புரை

பங்கேற்ற அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கம். இனிய சர்வதேச ஆவணக்காப்புத் தின நல்வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்காக தமிழ் வரலாற்றையும் பண்பாட்டையும் பாதுகாக்க பங்களிப்பு செய்கிறீர்கள். உங்கள் எதிர்கால முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

நோர்வே வாழ் தமிழர்களின் வரலாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தேடலின் பயணத்தில் 2020ம் ஆண்டு DsporA Tamil Archive (புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பு) உருவாக்கப்பட்டது.

அவணப்படுத்தல் என்பது தமிழ் மக்களிடையே ஒரு புதிய சிந்தனை அல்ல. பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இருப்பினும், படையெடுப்பு, போர், இடப்பெயர்வு மற்றும் புலம்பெயர்வினால் ஏற்பட்ட அழிவு ஆவணங்களின் முக்கியத்துவத்தை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள ஈழத்தில் வாழும் ஆவணக்காப்பாளர்களும் அழைக்கப்பட்டனர். ஆனால் சமூக சூழ்நிலை காரணமாக அவர்களால் பங்கேற்க முடியவில்லை. ஆயினும்கூட, பங்கேற்க முடியாதவர்கள் உட்பட ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பலன் அளிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த நிகழ்வைத் தொடர்கிறோம்.

நேற்றைய சந்திப்பில், ஈழத்தில் உள்ள மரபுரிமை நிறுவனங்கள் (heritage institutions) சந்திக்கக் கூடிய சவால்கள் விவாதிக்கப்பட்டன. இரண்டு முக்கிய சிக்கல்கள் இனம் காணப்பட்டது. ஒன்று தமிழ் கதைகளை ஆவணப்படுத்துவதில் சிக்கல்களும் எதிர்ப்புகளும். இரண்டாவதாக, எதிர்கால வரலாற்றுக் குறிப்புகளுக்காக ஆவணங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய புரிதல் இல்லாமை.

நளாயினி இந்திரன்: பதிப்புரிமை மற்றும் மூல விமர்சனம்

நான் ஒரு நூலகர் மற்றும் எந்த வகையிலும் ஒரு நிபுணர் அல்ல. என்றாலும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த விடயத்தில் எனக்கு இருக்கும் அறிவை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்த அளவில், நாங்கள் ஆவணப்படுத்தலுக்கான ஆராய்ச்சி (research) செய்வதில் மிகவும் திறமையானவர்களாக ஆகிவிட்டோம். ஆனால் நாம் சில குழிகளில் விழ முனைகிறோம். குறிப்பாக தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் நம் விரல் நுனியில் கிடைக்கும் பரந்த அளவிலான தகவல்கள்.

பதிப்புரிமை
நாம் அறிந்திருக்க வேண்டியது என்னவென்றால், பல்வேறு வகையான அறிவுசார் சொத்துக்களை எவ்வாறு கையாள்வது என்பதே. அதாவது இயற்பியல் அல்லாத தனித்துவமான எண்ணங்கள் (intangible unique thoughts).

நான்கு மிக முக்கியமான வகைகள் பின்வருமாறு: 1) “patent” காப்புரிமை. இது ஒரு கண்டுபிடிப்பின் மீதான உரிமை. 2) தொழில்துறை வடிவமைப்பு உரிமைகள் (industrial design rights). அதாவது காட்சி தோற்றத்தின் மீதான உரிமை. 3) வர்த்தக முத்திரை (trademark), இது பலரால் விநியோகிக்கப்படும் ஒரு தயாரிப்பின் ஒரு வர்த்தகரின் தனித்துவமான வடிவமைப்பு மீதான உரிமை. இறுதியாக 4) பதிப்புரிமை (copyright), இது படைப்பாளருக்கு, அவர்களின் தயாரிப்புக்கான முழு உரிமையை அளிக்கிறது.

பல்வேறு வகையான ஊடகங்களுக்கு வெவ்வேறு பதிப்புரிமை விதிகள் உள்ளன.

பதிப்புரிமை என்றால் என்ன, அது எதைப் பாதுகாக்கிறது மற்றும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதில் கவனமாக இருக்க வேண்டிய விதிகள் உள்ளன. ஒரே வகையான ஊடகங்களுக்கு, இந்த விதிகள் நாட்டிற்கு நாடு மாறுபடும். பல நாடுகளில் படைப்பாளரின் மரணத்திலிருந்து அல்லது படைப்பை உருவாக்கிய கால்த்திலிருந்து 70 ஆண்டுகளுக்கு பதிப்புரிமை உள்ளது.

பதிப்புரிமை என்பது நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய ஒன்றல்ல. அது தானாகவே ஊடகங்கள் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும். படைப்பாளியின் பெயருடன் வேலை இருந்தால், அது பதிப்புரிமை மூலம் பாதுகாக்கப்படும். ஒரு படைப்பைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதனை உருவாக்கியவர் யார் என்பதைக் கண்டறிவதும், பதிப்புரிமைச் சட்டங்களை அறிந்து கொள்வதும் மிகவும் முக்கியம்.

இன்று உள்ள சவால் என்னவென்றால் பதிப்புரிமையை மீறாமல் ஊடகங்களின் எண்ணிம நகல்களை எவ்வாறு எண்ணிமத் தளங்களில் சேர்ப்பது என்பதுதான்.

மூல விமர்சனம்
இப்போது பள்ளிகளில் நீங்கள் கண்டறிந்த தகவலை மதிப்பீடு செய்வது ஒரு அடிப்படை திறனாக கற்பிக்கப்படுகிறது. எண்ணிம மயமாக்கப்பட்ட உலகில் வளராத நாம் இது குறித்து நம்மைப் பயிற்றுவிக்க வேண்டும். எந்தவொரு தகவலையும் கண்டறிந்தவுடன், அதன் நம்பகத்தன்மையை மதிப்பீடு செய்ய இது ஒரு முக்கியமான படியாகும்.

நாம் ஒரு மூலத்தைப் பயன்படுத்த வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க நாம் பயன்படுத்தக்கூடிய கருவிகள்:

நாணயம் (Currency): இது எவ்வளவு காலத்திற்கு முன்பு வெளியிடப்பட்டது அல்லது புதுப்பிக்கப்பட்டது. பயன்படுத்தப்பட்ட ஆதாரங்களின் வயதையும் சரிபார்க்க நினைவில் கொள்ளுங்கள். உள்ளடக்கம் இப்போதும் பொருத்தமானதா அல்லது ஏதேனும் தகவல் காலாவதியாகியுள்ளதா?

சம்பந்தம் (Relevance): உங்கள் ஆராய்ச்சிக்கு பங்களிக்கும் அளவுக்கு ஆதாரம் போதுமானதாக உள்ளதா. தகவல் மிகவும் பரந்த அளவில் (broad) அல்லது அதிக கவனம் (focused) செலுத்துகிறதா? படைப்பின் படைப்பாளர்களிடையே பக்கச்சார்பானவர்களை கவனத்தில் கொள்க. குறிப்பாக உள்ளடக்கத்தில் ஒரு விடயம் குறித்து பல முன்னோக்குகள் அல்லது பிரதிபலிப்பு அணுகுமுறை இல்லாவிட்டால் கவனத்தில் கொள்க.

அதிகாரம் (Authority): ஆசிரியரின் நம்பகத்தன்மை மற்றும் ஒரு தலைப்பைப் பற்றி எழுத அவர்கள் எவ்வளவு தகுதி பெற்றவர்கள்.

துல்லியம் (Accuracy): குறிப்பிடப்பட்ட தகவல்களில் எவ்வளவு சரியாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அதோடு தர்க்கரீதியான பிழைகள் அற்றதாக உள்ளது. பல ஆதாரங்கள் ஒத்த தகவல்களைக் கொண்டுள்ளனவா, மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்கள் நம்பகமானவையாக உள்ளதா?

நோக்கம் (Purpose): இந்தத் தகவலை வெளியிடுவதற்குப் பின்னால் ஆசிரியருக்கு ஏதேனும் தனிப்பட்ட நலன்கள் உள்ளதா அல்லது ஒரு விடயத்தைப் பற்றிய தகவலை மேலும் கிடைக்கச் செய்வதற்காக மட்டுமா. அவர்கள் மொழியைப் கையாழும் விதத்தில் குறைவான தரமாக (less formal) இருந்தால், அல்லது அவர்களின் அறிக்கைகள் வாதங்களால் (arguments) ஆதரிக்கப்படாவிட்டால், ஒருவர் அதிக சந்தேகத்துடன் இருக்க வேண்டும்.

நம்மில் பலர் இந்த கருவிகளை திறம்பட பயன்படுத்துகிறோம். அதோடு பயனுள்ள ஆய்வுகள் செய்கிறோம். இது நம் அனைவருக்கும் பயனளிக்கும்.

சிறீகதிர்காமநாதன் வீரவாகு: புலம்பெயர் தமிழ் குடும்ப வரலாற்றை ஆவணப்படுத்தல்

நான் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக டென்மார்க்கில் உள்ள ஒரு பொது மருத்துவமனைகளில் உளவியலாளராக பணியாற்றி வருகிறேன்.

எனது பணியில் மூலக்கவனம் (focus) போர் காரணமாக புலம்பெயர்ந்த  அகதிகள் அனுபவிக்கும் அதிர்ச்சியில் (trauma experienced) உள்ளது. எனது வேலையின் ஊடாக, இலங்கைப் போரில் பல அகதிகளுடன் உரையாடியுள்ளேன். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த முதல் பகுதியினர் இளைஞர்கள் ஆவர். ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் சிலரேனும் தப்பிப் பிழைத்து தமது குடும்ப பாரம்பரியத்தைத் தொடருவார்கள் என்ற நம்பிக்கையில், பெரும்பாலோர் தனியாக புலம்பெயர் நாட்டிற்கு அனுப்பப்பட்டார்கள்.

இன்று வாழும் இளைஞர்களுக்கு அவர்களின் வேர்களைப் பற்றி அறிவுறுத்துவது மூத்த தலைமுறையினராகிய எமது கடமையாகும்.

சில நாடுகளில் குடும்ப விருட்சம் (family trees) அல்லது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவுகளின் தகவல்கள் பதியப்படும் பாரம்பரியம் உள்ளது. இதன் முக்கியத்துவத்தை நமது மக்கள் உணர்ந்து கொள்வது முக்கியம். பல தலைமுறைகள் கொண்ட புலம்பெயர் மக்கள் வாழும் சில நாடுகளில் அறிவு மற்றும் கற்றல் நிறுவனங்களை உருவாக்கி உள்ளனர். அங்கு இந்த புலம்பெயர் மக்கள் வந்து தமது நாடு மற்றும் பண்பாட்டைப் பற்றி கற்றுக்கொள்ளும் கல்விநெறிகள் உள்ளன.

புலம்பெயர் மக்களுக்கு அவர்களின் பூர்வீக பண்பாட்டைப் பற்றிய கல்வி கற்பிக்காததன் அபாயம் என்னவென்றால், ஒன்றில் அவர்கள் தமது வேர்களை முழுமையாக மறந்துவிடுவார்கள். அல்லது அவர்கள் ஒன்று அல்லது மற்றொன்றை அடையாளம் காணமுடியாத திண்டாட்ட நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவர்கள் தமது சொந்த பண்பாட்டைப் பற்றி முழுமையான புரிதல் கொள்ளும்போது மட்டுமே, அவர்கள் இன்னொருவருடன் இணக்கமாக வாழ வழிவகுக்கும்.

இக்காலத்தில் புலம்பெயர்ந்தோரின் வம்சாவளியினர் பெரும்பாலும் தமது வேர்கள் மற்றும் தோற்றத்தை ஆய்வு செய்ய பரம்பரை ஆய்வாளருக்கு (genealogist) பணம் செலுத்துகிறார்கள். எனவே எங்கள் குடும்ப வரலாற்றைப் பதிவு செய்தால், அது நம் சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எங்களுக்காக ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கக் காரணியா இருந்த எமது சிக்கலான (complex) போராட்டங்கள் மற்றும் பயணத்தின் விவரங்களைச் சொல்ல நாங்கள் ஒரு அரச பதிவுகளை மட்டுமே நம்பியிருக்க முடியாது.

சிவருசி. சசிக்குமார் தர்மலிங்கம்: ஒரு இயற்பியல் தமிழ் ஆவணக்காப்பகத்தின் பயணம்

இந்த பரந்த உலகில் ஒரு மக்கள் தங்களை இழக்காமல் இருக்க, காப்பகப்படுத்தல் மிக முக்கியம். நான் 13 வயது சிறுவனாக சுவிட்சர்லாந்திற்கு வந்து இங்கு என்னை நிலைநிறுத்திக் கொண்டேம்.

தலாய் லாமாவுடனான (The Dalai Llama) ஒரு சந்திப்பில், அவரது இன மக்களைப் போலவே தமிழர்களும் இலக்கின்றி இந்த உலகெங்கும் தஞ்சம் தேடி அலைவதாக நான் அவரிடம் கூறினேன். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான அவர் என்னிடம் கேட்டார்: ஆனால் தமிழர்கள் ஆங்கிலேயரால் தெயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக அனுப்பப்படுவதற்கு முன்பு இலங்கைக்கு அவர்கள் வரவில்லையே? நாங்கள் அந்த நாட்டின் பூர்வீக மக்கள். சிங்களவர்கள் போன்ற பிற குழுக்களுக்கு முன்பு நாங்கள் அங்கு இருந்தோம் என்று கூறி அவரை திருத்தினேன். தலாய் லாமா போன்ற புகழ்பெற்ற இராஜதந்திரி எமது முன்னோர்கள் பற்றி மிகக் குறைவாகவே அறிந்திருந்தார் என்பது எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

இப்போது சுவிஸில் உள்ள எமது கோவிலில் 3 மில்லியன் தமிழ் ஆவணங்கள் மற்றும் கலைப்பொருட்கள் உள்ளன. தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் 30-ஆண்டுகால் பதிவுகளும் இங்கு உள்ளன.

இனக்குழுக்களுக்காக சுதந்திர நாடுகளை உருவாக்கும் பல முயற்சிகள் நடந்து வருகின்றன. உதாரணமாக இஸ்ரேலில் உள்ள யூதர்களை எடுத்துக் கொள்ளலாம். இதற்கிடையில், நாங்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளோம். எங்கள் இனம் மெதுவாக மறைந்து வருகிறது.

எனவே நாம் மறைந்து போகாதபடி ஆவணங்களை பாதுகாப்பது மிகவும் முக்கியம். நாம் சுவிட்சர்லாந்தில் உள்ளோம் என்றாலும் எங்களுக்கு ஒரே ஒரு கவலை இருக்கிறது. நிதி திடநிலைத்தன்மை இல்லாததால் இந்த வேலையைச் செய்வது கடினமாக உள்ளது.

நாம் யார்? நாங்கள் ஏன் இங்கு வந்தோம்? இவை நாம் தொடர்ந்து கேட்க வேண்டிய கேள்விகள்.

கேள்வி நேரம்

என். செல்வராஜா:
சுவிசில் மேற்கொள்ளும் காப்பக முயற்சிக்கு என்னிடம் ஒரு கேள்வி உள்ளது. 3 மில்லியன் ஆவணங்கள் ஒரு தீவிரமான எண்ணிக்கை. இவ்வளவு தமிழ் கலைப்பொருட்கள் மற்றும் பதிவுகளைக் கண்டால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். இதையெல்லாம் சேமித்து (store) வைக்கும் வளம் (capacity) உங்களுக்கு எப்படி உள்ளது? உங்களிடம் இந்த எண்ணிக்கை ஆவணங்கள் இருப்பதை நாங்கள் சரிபார்க்க ஏதாவது வழி இருக்கிறதா? அப்படியானால், இந்த செய்தி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு ஒளிபரப்பப்பட வேண்டும்.

கோவில் பூசை காரணமாக இணையவழிக் கூட்டத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்ததால் சுவிட்சர்லாந்தில் உள்ளவர்கள் இதற்கு பதில் அளிக்க முடியவில்லை.

நான் டென்மார்க்கில் வசிக்கும் கதிர்காமநாதனிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். டென்மார்க்கில் வாழ்ந்த ஒரு நபருடன் எனக்கு தொடர்பு இருந்தது. அவர் அங்கு தமிழர்கள் தொடர்பான மரபியல் பணிகளை செய்து வந்தார். இது போன்ற பல திட்டங்கள் உள்ளன. உதாரணமாக மலேசியாவில் 125 ஆண்டுகால வரலாறு பற்றிய ஒரு வெளியீடு உள்ளது. அவர்கள் முதலில் அரசாங்க ஊழியர்களாக இருந்தார்கள். எனவே அவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது எளிதாக இருந்தது.

கதிர்காமநாதன்:
பல தமிழ் அகதிகள் தமது புலம்பெயர் பயண வழியில் தொலைந்துவிட்டார்கள் அல்லது இடைநடுவில் சிக்கியுள்ளனர். எனவே அவர்கள் பற்றிய தகவல்களைக் கண்டுபிடிப்பதில் உள்ள கடினத்தை நாம் என்ன செய்ய வேண்டும்?

என். செல்வராஜா:
நீங்கள் பரம்பரை ஆய்வு (genealogy) மூலமோ, மற்றவர்களைக் கேட்பதன் மூலமோ அல்லது மக்களை ஒன்றிணைக்கும் அத்தகைய வலைப்பின்னல் (network) உருவாக்குவதன் மூலமோ காணாமல் போன மக்களை கண்டறியலாம் என்று நினைக்கிறேன்.

கல்லறை சுற்றுலா (graveyard tourism) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியாவிற்கு காலனித்துவவாதிகளாக சென்ற ஐரோப்பிய மக்களின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அவர்கள் ஐரோப்பாவில் இருந்து இந்தியா செல்கிறார்கள். ஐரோப்பியர்கள் மற்றும் குறிப்பாக கிறிஸ்தவர்கள் குடும்ப விருட்சத்தை (family trees) பேணுவதில் நன்கு பயிற்சி பெற்ற பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதாக  நான் நினைக்கின்றேன். அவர்கள் தமது குடும்பத்தின் பல தலைமுறைகளின் வரலாற்றை அறிந்திருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை, எங்கள் பூட்டன் பூட்டியைத் தவிர பின்னோக்கி எவரைப் பற்றிக் கேட்டாலும் நாம் தடுமாறத் தொடங்குகிறோம்.

அநாமதேய கேள்வி:
உளவியலாளர் கதிர்காமநாதனிடம் ஒரு கேள்வி. நீங்கள் சொன்னது போல், எங்கள் குடும்ப வரலாறு பெரும்பாலும் வாய்வழியாக கடத்தப்படுகிறது. அதோடு அதை ஆவணப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதுபோன்ற பதிவுகளை உருவாக்க நாங்கள் முதல் தலைமுறை புலம்பெயர்ந்தோரை ஈடுபடுத்த உங்களிடம் ஏதேனும் வழிமுறைகள் உள்ளதா?

கதிர்காமநாதன்:
இந்த யோசனை எனக்கு முதலில் வந்ததற்குக் காரணம் நாங்கள் எனது வேலைத்தளத்தில் குடும்ப விருட்சங்களை (family trees) சமாளிக்கும் பொறிமுறையாக (coping mechanism) பயன்படுத்தியுள்ளோம். பல அகதிகள் தங்கள் குடும்பம், பண்பாடு மற்றும் மக்களிடமிருந்து துண்டிக்கப்படுவதை உணர்கிறார்கள். அவர்கள் தங்களுடைய உணர்வை இழந்து மனச்சோர்வில் விழுகிறார்கள். எனவே, அவர்கள் தங்கள் குடும்ப வரலாற்றை ஆராய்ச்சி செய்யத் தொடங்கி, உறவினர்களைத் தொடர்பு கொள்ளும்போது, அவர்கள் இந்த மன அழுத்தத்திலிருந்து தானாகவே குணமடைகிறார்கள்.

பகீரதி:
இதை இங்கு கேட்க புத்துணர்வு அளிக்கின்றது. ஆனால் ஏதாவது தவறு நடக்குமோ என்ற பயத்தில் இதுபோன்ற குடும்ப ஆராய்ச்சியைத் தொடங்க பலர் பயப்படுகிறார்கள்.

கதிர்காமநாதன்:
இது அதி பதட்ட நிலை (anxiety). ஏனென்றால் மக்கள் தமக்குத் தெரியாத மற்றும் மோசமான முடிவுக்கு பயப்படுகிறார்கள். இணையத்தில் இதுபோன்ற ஆய்வுகள் தவறாக நடந்ததை அவர்கள் பார்த்திருக்கலாம். அதனால் அவர்களுடைய உள் குடும்ப வட்டத்தில் இதனை ஆரம்பிக்க நான் அவர்களுக்கு அறிவுறுத்துகிறேன். ஏனென்றால் அது எதையும் விட சிறந்ததாக இருக்கும். அவர்கள் தமக்கு பாதுகாப்பாக உணரும் போது, இதனை வெளி வட்டத்திற்கு விரிவடைய செய்யலாம்.

அதோடு நாம் எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஆவணங்களை பாதுகாக்க வேண்டும். அதனூடாக அவர்களுக்கு ஒரு அடித்தளம் அமையும். ஒரு உதாரணம், பாலஸ்தீன அகதிகள் எவ்வாறு தமது சொந்த நாட்டிலிருந்த தமது வீட்டுத் திறவுகோலை கவனமாகப் பாதுகாத்தார்கள். அவர்கள் எப்படி வெளியேற்றப்பட்டு தப்பி ஓட நேர்ந்தது என்ற கதைகளைப் பாதுகாத்தார்கள். இந்தக் கதையும் அதன் பொருளும் சேர்த்து தலைமுறைகளாகக் கடத்தப்படுகிறது.

பகீரதி:
நான் நளாயினியிடம் பதிப்புரிமை பற்றி கேட்கிறேன். எண்ணிம வளங்கள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. இதில் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள் உள்ளன. இதில் உள்ள முக்கியமான எதிர்மறை விளைவுகளைப் பற்றி நீங்கள் பகிர்ந்து கொள்ள முடியுமா?

நளாயினி:
ஆய்வைத் தொகுப்பதற்கான ஆர்வத்தில் நாம் முழுமையாக பதிப்புரிமையை அடிக்கடி மறந்து விடுகிறோம். இது மிகவும் கவலைக்குரிய விடயம். ஏனெனில் படைப்பாளி இதனால் அவர்களின் உரிமையை இழக்க நேரிடும். அதோடு அவர்களின் பணியின் மூலம் பணம் ஈட்டும் வழிமுறைகளும் இழக்கப்படும். ஒரு வேலையை எண்ணிம முறையில் பாதுகாத்து பரவலாக விநியோகிப்பதன் மூலம் நாம் இயற்பியல் (physical) நகல்களின் எண்ணிக்கையையும் குறைக்கிறோம்.

பகீரதி:
போர் மற்றும் இனவழிப்புக் காரணமாக உரிமையாளர்கள் இல்லாத பல ஆவணங்கள் மற்றும் படைப்புகள் உள்ளன. இவற்றில் பல இப்போது திறந்த உரிமையின் கீழ் உள்ளன. இந்த வளங்களை நாம் எவ்வாறு சரியாகப் பயன்படுத்தலாம்?

நளாயினி:
இலங்கையில் அனைத்து ஊடகங்களும் தேசிய காப்பகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இயற்கையாகவே இது போரின் போது முழுமையாக பின்பற்றப்படவில்லை. இந்த ஊடகங்கள் மீது யாரும் உரிமை கோராவிடினும், அவை அதிகாரபூர்வமாக பொதுக்களத்தில் (public domain) ஒரு பகுதியாக மாறுவதற்கு ஒரு காலம் உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் இதற்கான தனிப்பட்ட சட்டங்கள் உள்ளன. நாங்கள் அதை ஒரு எண்ணிம வளமாக வெளியிட்டால், இந்த ஆய்வுக்கு (research) நாம் பின்னர் வரவேட்டி இருக்கும். இந்த குறிப்பிட்ட சவாலுக்கு என்னிடம் துல்லியமான பதில் இல்லை.

என். செல்வராஜா:
நான் ஒரு பதிலை முன்மொழியலாமா? உருவாக்கியவர் எந்த வகையிலும் எதிர்மறையாக பாதிக்கப்படுவாரா என்று பரிசீலிக்கும்படி கேட்கும் ஒரு சட்டம் உள்ளது. இதை நாம் முடிவு செய்ய முடியாது ஆனால் இலங்கையின் தேசிய காப்பகங்களுக்கான இணையதளத்தில், ஒவ்வொரு படைப்பின் பதிப்புரிமை குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு படைப்பை பொதுக்களத்தில் விடுவதற்கு முன்னர், அதை முதலில் சர்வதேசக்களத்தில் விடலாம் என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். இத்தகைய ஏற்பாடுகள் காரணமாக, நாம் ஒவ்வொரு படைப்பையும் தனித்துவத்துடன் ஆய்வு செய்ய வேண்டும். பதிப்புரிமை மீறாமல் படைப்புகளைப் பயன்படுத்த ஒரு வழி இருக்க வேண்டும். அது இல்லையென்றால், நாங்கள் ஒருபோதும் எந்த ஊடகத்தையும் பயன்படுத்தவோ அல்லது நாமே வேலை செய்யவோ முடியாது.

அநாமதேய கேள்வி:
ஒரு குடும்ப விருட்சம் உருவாக்குவதில், தனிநபர் தகவல் பாதுகாப்பு (privacy, data protection) மீறலை ஒருவர் எவ்வாறு தவிர்க்க முடியும்.

கதிர்காமநாதன்:
ஒரு நபரைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் (facts) நீங்கள் சேர்க்கத் தேவையில்லை. ஆனால் அவர்கள் பிறந்த ஆண்டு என்பது பொதுவாக பகிரக்கூடிய ஒரு தகவல். மேலும் பகிரப்படும் தகவலுக்கு, அவர்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

சிவன்யா:
இந்த தகவல்களை நீங்கள் எவ்வாறு சரிபார்ப்பீர்கள்? ஒரு நபர் கூறிய தகவல் சரியானதா என்பதை அறிவது ஒரு சவால்.

கதிர்காமநாதன்:
எங்களால் தனித்தனியாக எல்லாவற்றையும் சரிபார்க்க முடியாது ஆனால் அத்தகைய திட்டத்தில் தங்களைப் பற்றியும் தங்களுக்குத் தெரிந்தவர்களைப் பற்றியும் வெளியிடப்பட்ட தகவல்களைச் சரிபார்ப்பது அனைவரின் கடமையாகும்.

நளாயினி:
இங்கிலாந்தில் சமூகம் மற்றும் பாரம்பரிய காப்பகங்கள் (community and heritage archives) என்று ஒன்றை நிறுவ வேண்டிய அவசியம் உள்ளது. அந்தக் காப்பகத்திற்கு எமது சமூகம் அணுகலாம் மற்றும் அதில் ஆவணங்கள் சேர்க்கலாம்.

கதிர்காமநாதன்:
அரசாங்கங்கள் அத்தகைய காப்பகங்களை நிறுவ முடியும் ஆனால் ஸ்காண்டிநேவிய நாடுகளில் (Scandinavian countries), ஒருவரைப் பற்றிய தகவல்களை அணுகுவதற்கு நாம் அந்த நபரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

என். செல்வராஜா:
இன்று வாழும் மக்கள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது எப்போதுமே ஒரு முக்கியமான விடயமாக இருக்கும். இக்காலத்தில் அத்தகைய தரவுத்தளத்தை உருவாக்குவதற்கான கனிந்த நேரம் என்று நினைக்கிறேன். எங்கள் பிள்ளைகள் வெவ்வேறு இனங்களில் திருமணம் செய்து கொள்கிறார்கள். இது தவிர்க்க முடியாத ஒன்று. எனவே எதிர்காலத்தில், இதுபோன்ற குடும்ப வம்சாவளியை அறிந்து கொள்ளும் வேலை ஒரு சவாலாக இருக்கும்.

சரண்யா:
கனடாவில் எங்களிடம் பொது காப்பகங்கள் உள்ளன. அங்கு நாம் பெயர்களையும் முகவரிகளையும் காணலாம். ஆனால் இதற்கு எங்கள் தனிப்பட்ட ஒப்புதல் பெறப்படவில்லை.

நளாயினி:
இங்கிலாந்தில் எங்களிடம் ஒரு பரம்பரைத் தரவுத்தளம் உள்ளது என்ற தகவலை உங்களுடன் பகிர விரிம்புகிறேன். அதில் எமது தகவலை தனிப்பட்டதாக (private) மாற்றலாம். அதன்வழி அரசாங்கம் மட்டும் எமது தகவலை அணுகலாம். இந்த வழிமுறையில் மற்றவர்கள் எமது தகவலைக் கண்டறிய முடியாது. இதன் மூலம் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அதே சமயம் எதிர்காலத் தலைமுறையினருக்கு எம்மைப் பற்றிய தகவலை கிடைக்கச் செய்யலாம்.

சரண்யா:
ஆமாம், எங்கள் தரவுத்தளம் தானாகவே புதுப்பிக்கப்படும். அதனால் அது தேடப்படும் பெயரைக் கொண்ட நபர்களை கனடா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் காட்டும்.

நளாயினி:
இந்த நோக்கத்திற்காக இது எங்கள் தரவுத்தளங்களை தேசிய நிறுவனங்களுடன் இணைப்பது முக்கியம் என்பதை காட்டுகிறது.

அநாமதேய:
பெயர்களுடன் ஒரு குடும்ப விருட்சத்தை (family tree) உருவாக்குவது ஒரு விடயம். ஆனால் இப்போது இலங்கைக்கு வெளியே வாழும் தமிழர்களின் கதைகள் மற்றும் வரலாற்றை நாம் எவ்வாறு ஆவணப்படுத்த முடியும். நோர்வேயில் தனிநபர் தகவல் பாதுகாப்பு (privacy policy) என்பது ஒரு நபர் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கும் அதை வெளியிடுவதற்கும் நாங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். எனவே, இது நபரின் ஒப்புதலைப் பெறுவதை விட சிக்கலானது அல்ல. எனவே, அவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அஞ்சினால், உதாரணமாக, அவர்கள் இறக்கும் வரை அந்த தகவலை தனிப்பட்டதாக (private) வைத்திருக்க அனுமதிக்கலாம்.

கதிர்காமநாதன்:
மேலும் அதை பாதுகாக்க இதுபோன்ற தகவல்களை தேசிய வம்சாவளி மற்றும் பாரம்பரிய காப்பகங்களில் பதிவு செய்ய முடியும்.

என். செல்வராஜா:
நான் உங்களுக்கு சைமன் காசிச்சிட்டியின் (Simon Casie Chitty) தமிழ் புளூடார்ச்சைக் (The Tamil Plutarch) காட்ட விரும்புகிறேன். அவர் 1860 இல் காலமானார். அவர் அக்காலத்தில் வாழ்ந்த தமிழ் கவிஞர்களைப் பற்றி சிறிய பந்திகளை எழுதினார்.

இதில் தவறாக நடக்கக்கூடிய விடயங்களைப் பற்றி நாம் ஏன் அதிகம் கவலைப்பட வேண்டும் என்று எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. பதிவு செய்ய ஒப்புதல் கொடுக்க விரும்பாதவர்களை நாம் ஏன் தவிர்க்க முடியாது. மாறாக பதிவு செய்ய ஒப்புதல் தருவோரில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் கவனம் செலுத்த வேண்டியது என்னவென்றால், ஒரு குடும்ப விருட்சத்தில் பெயர் மற்றும் பிறந்த ஆண்டு போன்ற பொதுவான தகவல்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

கதிர்காமநாதன்:
உங்கள் அனைவருடனும் புலம்பெயர் தமிழ் குடும்ப வரலாற்றை ஆவணப்படுத்தல் பற்றிய யோசனையை பகிர்ந்து கொள்ள முடிந்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.


இதில் கருத்துகளை பகிர்ந்த, பங்கேற்ற மற்றும் கேள்விகளைக் கேட்ட அனைவருக்கும் நன்றி.

புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பு: நன்றியுரை

இன்று கலந்து கொண்ட வளவாளர்களுக்கும், தொழில்நுட்ப உதவி வழங்கிய தமிழ் இளையோர் அமைப்பு நோர்வே கிளையினருக்கும், இன்நிகழ்விற்கு வளம் சேர்த்தவர்களுக்கும், எம்முடன் இணைந்து பல நல்ல கருத்துகளையும் கேள்விகளையும் எழுப்பிய அனைவருக்கும் நன்றி.

புதுப்பிப்பு│Update: 24.12.2021

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: