“Diaspora” எனும் இயல்நிகழ்ச்சி (phenomenon)

DsporA முதல் DiasporA வரை: பாகம் 2

“Diaspeirein” (வினைச்சொல்) என்ற கிரேக்க சொல்லிலிருந்து வந்த சொல்லே “Diaspora” (பெயர்ச்சொல்) என்ற சொல் ஆகும். அது “disperse” (சிதறல்) என்று பொருள்படும். இந்த சொல் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியான “dia” என்பது “over, through or across” (மேல், ஊடாக, குறுக்காக) என்று பொறுள்படும். இரண்டாவது பகுதி, “speirein” என்பது “scatter or sow the seeds” (சிதறடித்தல் அல்லது விதைகளை விதைத்தல்) என்று பொருள் படும். சில அறிஞர்களின் (Pierre, 2021)  கூற்றுப்படி, யூத, கிரேக்க மற்றும் ஆர்மேனிய புலம்பெயர்ந்தோரை “classic” (செந்தரம்) வாய்ந்த மக்கள் சிதறல்கள் என்று கருதப்படுகின்றது.

Oxford References[1] இந்தச் சொலின் மூலக் கருப்பொருளை பின்வருமாறு விளக்குகின்றது: “ஒரு மையத்திலிருந்து (அல்லது தாயகம்) பல பகுதிகளுக்கு மக்கள்தொகை சிதறடிக்கப்படுவதைக் குறிக்கும். அது பெரும்பாலும் சுய விருப்பமின்றிய மக்கள்தொகையை சிதறடிப்பதைக் குறிக்கும். அதோடு சிதறலின் வரலாறுகள் மற்றும் அதனால் உருவான விளைவுகளின் அடிப்படையில் சமூகங்களையும் அடையாளங்களையும் உருவாக்குவதையும் குறிக்கிறது. (தமிழாகம்). இதன் அடிப்படையில் “diaspora» என்பது ஒரு பூர்வீக நாடு அல்லது தேசத்திலிருந்து வந்த அல்லது அதன் மூதாதையர்கள் அதிலிருந்து வந்த ஒரு இனக்குழுவைக் குறிக்கும். அவர்களுக்கு பொதுவான தாய்மொழி, கலை, பண்பாடு, வரலாறு மற்றும் நாகரிகம் இருக்கும். இந்த புலம்பெயர் மக்கள் உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் சிதறடிக்கப்பட்ட பின்னரும் தமது பூர்வீகப் பாரம்பரியத்தை தொடர்ந்து பயன்படுத்தி பேணிப் பாதுகாப்பார்கள்.

‘Diaspora’ என்ற சொல்லின் முதல் பயன்பாடு “Septuagint” எனும் நூலில் காணப்படுகிறது. இது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஹெப்ரிக் பைபிளின் (Hebraic Bible) கிரேக்க மொழிபெயர்ப்பு ஆகும் (Dufoix, 2015). அக்காலத்தில் இந்த சொல்லை “தெய்வீக தண்டனை – உலகம் முழுவதும் பரவுதல் – கடவுளின் கட்டளைகளை மதிக்காவிட்டால் யூதர்களுக்கு ஏற்படும்” (தமிழாக்கம்) என்ற கருத்தில் பயன்படுத்தினர் (Dufoix, 2015)[2]. அந்த நேரத்தில் சிதறல் மனித விருப்பம் அற்ற தெய்வீக சார்ந்ததாக இருந்தது. பின்னர், யூதர்களின் சிதறடிப்பு அவர்களின் பாவங்களுக்கான சாபம் என்ற மற்றொரு அர்த்தம் உருவானது. எனவே, யூதர்களின் வரலாற்றில், யூத மக்களின் புலம்பெயர்வும் புலம்பெயர் அனுபவங்களின் கருத்துருவாக்கமும் அவர்களின் ஆயிரக்கணக்கான ஆண்டு கால இருப்பில் காலத்துக்கு காலம் வெவ்வேறு தனித்துவமான அர்த்தங்களைக் கொண்டு வந்துள்ளது (Ages, 1973, p. 3).

  • கி.மு. 6 ஆம் நூற்றாண்டு: பாபிலோனியம் சிறைப்பிடிக்கப்பட்ட காலத்தில் யூதர்கள்
  • கிறித்துவத்தின் எழுச்சிக்கு சற்று முன்பு: எகிப்தில் அலெக்ஸாண்ட்ரியாவில் வாழ்ந்த செழிப்பான யூத சமூகம்.
  • 1 ஆம் நூற்றாண்டு: பாலஸ்தீனத்தின் ரோமானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான கருக்கலைப்பு கிளர்ச்சியின் விளைவாக யூதர்களின் நிலை.
  • கி.பி 70: ஜெருசலேமில் கோவில் அழிக்கப்பட்டதால் பாலஸ்தீனத்தின் யூத மக்கள் பெருமளவில் வெளியேறினர்.

இங்கு இறுதியாகக் குறிப்பிடப்பட்ட யூதர்களின் புலம்பெயர் அனுபவம் ஒரு சிதறடிக்கப்பட்ட யூத சமூகத்தை உருவாக்க வழிவகுத்தது. இந்த அனுபவமே இறுதியில் உலகம் முழுவதும் சிதறியது.

“யூத மக்களின் பண்புகள்” மற்றும் “யூதர்களின் சிதறலின் பண்புகள்” என்ற இரு விடங்களை வேறுபடுத்துவது முக்கியம். இவ்விரண்டு விடங்களும் பல்வேறு சூழலில் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக சொற்பிறப்பியல் சூழலில் அல்லது ஒரு புலம்பெயர் சமூகத்தின் அடையாளப் பண்புகள் குறித்து இருக்கலாம்.

அனைத்து புலம்பெயர் சமூகங்களும் சில பொதுவான குணாதிசயங்களைக் கொண்டிருக்கலாம். என்றாலும், ஒவ்வொரு புலம்பெயர் சமூகமும் தனித்துவமான அடையாளங்களுடன் வேறுபட்டு இருக்கும். அவர்களுடைய சிதறலின் வரலாறு (dispersal history), பெறுமதிகள், நீதிநெறிகள் (ethics), பூர்வீகம் (origin), அவர்களின் வீழ்ச்சி (fall), எழுச்சி (uprising) மற்றும் செழிப்பின் (flourishing) வரலாறு வேறுபட்டு இருக்கும்.

புலம்பெயர் சமூகத்தின் பண்புகள்

Safran (1991) இன் கூற்றுப்படி, ஒரு மக்கள் குழுவினரை புலம்பெயர் மக்களாக அடையாளம் காண்பதற்கான முக்கிய பண்புகள் “1) அவர்கள் அல்லது அவர்களின் மூதாதையர்கள் ஒரு குறிப்பிட்ட பூர்வீக மையத்திலிருந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட புற அல்லது வெளிநாட்டுப் பகுதிகளுக்கு சிதறடிக்கப்பட்டிருப்பார்கள்; 2) அவர்கள் தங்களது பூர்வீக தாயகத்தைப் பற்றிய ஒரு கூட்டு நினைவகம், பார்வை அல்லது கற்பனை தேசத்தை தக்கவைத்துக்கொள்வார்கள் – அதன் புவியல் இருப்பிடம், வரலாறு மற்றும் சாதனைகள் ஆறியவற்றை தக்கவைத்துக்கொள்வார்கள்; 3) அவர்கள் தங்களது வதிவிட சமுதாயத்தால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை – மற்றும் ஒருவேளை ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்கள் என்று நம்புவார்கள், எனவே ஓரளவு அந்நியப்படுத்தப்பட்டு அதிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்வார்கள்; 4) அவர்கள் தமது மூதாதையருடைய தாயகத்தை தமது உண்மையான, சிறந்த இடமாகக் கருதுவார்கள். அல்லது அந்த இடத்தின் நிலவரம் பொருத்தமானதாக வரும்போது, அவர்கள் தமது சந்ததியினர் இறுதியில் திரும்பும் (அல்லது திரும்ப வேண்டிய)  இடமாகவும் கருதுவார்கள்; 5) அவர்கள் கூட்டாக, தமது பூர்வீக தாயகத்தின் பராமரிப்பு அல்லது மறுசீரமைப்பு மற்றும் அதன் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்காக உறுதியாக ஈடுபட வேண்டும் என்று நம்புவார்கள்; அதோடு 6) அவர்கள் அந்த தாயகத்துடன் தனிப்பட்ட முறையில் அல்லது விகாரமாக ஏதோ ஒரு வழியில் பங்களிப்பார்கள், மேலும் அவர்களின் இன உணர்வு மற்றும் ஒற்றுமை இத்தகைய உறவுப்பாலத்திற்கு முக்கியமானதாக வரையறுக்கப்படுகிறது. (தமிழாகம்)[3].

«புலம்பெயர் மக்கள்» (diaspora) எனும் சொல்லின் பயன்பாடும் பொருளும்

இன்று, «diaspora” என்ற சொல்லின் பயன்பாடு பல்வேறு உலகளாவிய நகர்தல்கள் மற்றும் சமூக உருவாக்க நடைமுறைகளை உள்ளடக்குகிறது. அறிஞர்களின் கூற்றுப்படி (Amarasingam, 2015), 1980களில் இந்த சொல்லின் வரையறை “வெளிநாட்டவர், வெளியேற்றப்பட்டவர்கள், அரசியல் அகதிகள், வேற்றுகிரகவாசிகள், புலம்பெயர்ந்தோர் மற்றும் இன சிறுபான்மையினர் tout court என்று பல வகை உருவகப் பெயர்களாக நீட்டிக்கப்பட்டது (தமிழாக்கம்) (Safran, 1991)[4]. இது பொருளாதாரம், கல்வி அல்லது வேலைவாய்ப்பு காரணங்களாக தாய்நாட்டை விட்டு வெளியேறியவர்களை குறிக்கிறது. எவ்வாறாயினும், புவியியல் இடப்பெயர்வு மற்றும் diasporic செயல்முறைகளில் வேறுபாடு என்னவென்றால், “… diasporic செயல்முறைகள் கண்டிப்பான அர்த்தத்தில், அதாவது பல்வேறு இடங்களுக்கு இடையில் இடம்பெயர்ந்த மக்கள்தொகைகள் தமது பூர்வீக தாயகத்துடன் தொடர்ச்சியான உறவினூடாக ஒரு குழு உணர்வை பராமரிப்பதை வரையறுக்கிறது (Safran 1991)».

மேலும், 1990கள் தொடக்கம் இன்று வரை, தாயகம் (homeland) மற்றும் இனம் (ethnicity) போன்ற சொற்கள் சமூக ரீதியாக கட்டமைக்கப்பட்ட கருத்துகளாக புரிந்து கொள்ள ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அவை விவாதத்திற்குரிய சக்தி வாய்ந்தவையாகவும் உள்ளன (Amarasingam, 2015). இதனால், இந்த சொல்லின் பொருளும் பயன்பாடும் காலப்போக்கில் மாற்றம் பெற்று வந்துள்ளது. அதனால் diaspora என்பது உண்மையில் எதைக் குறிக்கிறது என்பதைக் கண்டறிய கடினமாகிவிட்டது. இந்தப் பதம்  சிக்கலான போதிலும், Brubaker (Amarasingam, 2015) ‘ diaspora’ இன் முக்கிய பண்புகளைக் பின்வருமாறுக் குறிப்பிடுகிறார். அதாவது 1) சிதறல் (dispersion), 2) தாயக நோக்குநிலை (homeland orientation) மற்றும் 3) எல்லைப் பராமரிப்பு (boundary maintenance).

«சிதறல்» என்பது ஒரு மையத்திலிருந்து உலகம் முழுவதும் சிதறடிக்கப்படுவதாகும்.

இரண்டாவதாக, “தாயக நோக்குநிலை”. இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை புலம்பெயர்ந்தோரின் “தாயக நோக்குநிலை” பற்றிய புரிதல் Safran (1991) இன் மூல வரையறையிலிருந்து வேறுபடுகின்றது (Amarasingam, 2015). Safran இன் வரையறை முதல் தலைமுறை புலம்பெயர்ந்தோருக்கு பொருத்தமாக இருக்கும். புலம்பெயர்ந்தோரின் சந்ததியினரின் கருத்து பின்வருமாறு உள்ளது: “ஒரு சமூகம் ஒரு உண்மையான அல்லது கற்பனை செய்யப்பட்ட தாயகத்திற்கு தொடர்ச்சியான நோக்குநிலையைக் (orientation) கொண்டிருக்கும். அதனை அவர்கள் பேணிப் பாதுகாக்க (preserve) மற்றும் பாதுகாக்க (protect) நம்புவார்கள். அந்த நம்பிக்கையில் ஒரு கூட்டுறவு ஒற்றுமை (solidarity) இருக்கும்.»[5]. புலம்பெயர் சமூகங்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினரின் இந்த புரிதல் Safran (1991) இன் வரையறையை மறுவரையறை செய்கிறது. அதாவது «இறுதியில் திரும்பும் (அல்லது திரும்ப வேண்டிய)  இடம்» என்பதிலிருந்து உண்மையான அல்லது கற்பனை செய்யப்பட்ட தாயகத்தைப் பேணிப் பாதுகாக்க (preserve) மற்றும் பாதுகாக்க (protect)» விரும்புவதாக மாறியுள்ளது. எனவே, மூல வரையறை ஒரு «diaspora” என்பதற்கான முக்கிய பண்பாக இருக்காது.

மூன்றாவதாக, “எல்லை பராமரிப்பு” என்பது “அவர்களின் பூர்வீகத் தாயகத்தின் பராமரிப்பு அல்லது மறுசீரமைப்பும், அதன் பாதுகாப்பு மற்றும் செழிப்பு”[6] ஆகும். ஒரு புலம்பெயர் சமூகத்தில் தனிநபர்களாகவோ அல்லது கூட்டாகவோ அந்த தாயகத்துடன் தொடர்புபட்டு பங்களிப்பர், “மற்றும் அவர்களின் இன உணர்வு (ethnocommunal consciousness) மற்றும் ஒற்றுமை ஆகியவை அத்தகைய தொடர்பின் இருப்பால் முக்கியமாக வரையறுக்கப்படுகின்றன”[7] Safran (1991).

நவீன நாட்களில், உலகமயமாக்கல் (globalisation) மற்றும் நாடுகடந்த தன்மை (transnationalism) ஆகியவை புலம்பெயர்ந்தோரின் பண்புகளில் அடங்குகின்றன. எனவே, பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் உள்ள புலம்பெயர் சமூகத்தின் ஒன்றுக்கொன்று தொடர்புபட்ட உறவுகள் (interrelationship) அவர்களை “ஒற்றை ‘நாடுகடந்த சமூகமாக’ («single ‘transnational community’») உருவாக்குகிறது (Amarasingam, 2015; Oxford Reference, n.a.).

“தாயக நோக்குநிலை” («homeland orientation») மற்றும் “எல்லைப் பராமரிப்பு” («boundary maintenance») ஆகியவற்றில் புலம்பெயர் சமூகச் செயல்பாடுகளில் உள்ள ஒற்றுமையான நடவடிக்கைகள் அவர்களின் சிதறலின் வரலாற்றைப் (history of their dispersion) பேணுவதற்கான வழிமுறையாகும். இந்தக் கூறுகள் சிதறடிக்கப்பட்ட ஒரு மக்கள் குழுவை ஒரு தனித்துவமான ‘புலம்பெயர் சமூகமாக’ செயல்படுத்துகிறது. அதோடு அவர்களின் தனித்துவமான புலம்பெயர் அடையாளத்தை பாதுகாக்க அவர்களை வழிநடத்துகிறது.

அடுத்த பாகம்: புலம்பெயர் தமிழர் (Tamil Diaspora)

மேற்கோள்கள்

[1] “mass, often involuntary, dispersal of a population from a centre (or homeland) to multiple areas, and the creation of communities and identities based on the histories and consequences of dispersal.”

[2] “divine punishment – the dispersal throughout the world – that would befall the Jews if they did not respect the commandments of God”

[3] 1) they or their ancestors have been dispersed from a specific original ‘centre’ to two or more ‘peripheral,’ or foreign, regions; 2) they retain a collective memory, vision, or myth about their original homeland – its physical location, history, and achievements; 3) they believe that they are not – and perhaps cannot be – fully accepted by their host society and therefore feel partly alienated and insulated from it; 4) they regard their ancestral homeland as their true, ideal home and as the place to which they or their descendants would (or should) eventually return – when conditions are appropriate; 5) they believe that they should, collectively, be committed to the maintenance or restoration of their original homeland and to its safety and prosperity; and 6) they contribute to relate, personally or vicariously, to that homeland in one way or another, and their ethnocommunal consciousness and solidarity are importantly defined by the existence of such a relationship. Safran, W. (1991). Diasporas in Modern Societies: Myths of Homeland and Return. Diaspora, 1(1). https://www.academia.edu/5029348/Diasporas_in_Modern_Societies_Myths_of_Homeland_and_Return

[4] “‘as metaphoric designations for several categories of people – expatriates, expellees, political refugees, alien residents, immigrants, and ethnic and racial minorities tout court” ibid.

[5] «a community’s continued orientation to a real or imagined homeland that they hope to preserve and protect and with which they have a sense of solidarity» Amarasingam, A. (2015). Pain, Pride, and Politics. University of Georigia Press.

[6] “maintenance or restoration of their original homeland and to its safety and prosperity».

[7] «and their ethnocommunal consciousness and solidarity are importantly defined by the existence of such a relationship»

உசாத்துணை


புதுப்பிப்பு│Update: 02.11.2021

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: