«என்னை நினைவில் கொள்க»

இன்று DsporA தமிழ் ஆவணகத்தின் 1 வது ஆண்டு தினம். இன்நாளில் இந்த குழந்தையின் பிறப்பை நினைவு கூறுகிறோம்.

«எமது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை. அதுவே எதிர்காலத்தில் எமது வரலாறாகின்றது. இந்த வலைத்தளத்தின் கதை 23. ஏப்ரல் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” என்ற முகநூல் பக்கமாக ஆரம்பித்தது. நோர்வே வாழ் தமிழர்களின் செயற்பாட்டில் உருவான வெளியீடுகளை அறிந்து கொள்ளவும் சேகரிக்கவும் ஒரு தளமாக இது உருவாக்கப்பட்டது. அத்துடன் நோர்வே நாடளாவிய ரீதியில் இயங்கி வரும் தமிழ்க் கல்வி சேவைகள் குறித்த வரலாற்றுத் தகவல்களை சேகரிக்கவும் உருவாக்கப்பட்டது. ஆனால் விரைவில் ஆவணக்காப்பு விழிப்புணர்வை உருவாக்க வேண்டிய முதன்மை தேவையைக் கண்டறியப்பட்டது. அதன் விளைவாக “‘ஆவணம்’ என்றால் என்ன?” என்ற முகநூல் இடுகைத் தொடர் 13. யூன் 2020 அன்று ஆரம்பிக்கப்பட்டது. நோர்வே வாழ் தமிழ் ஆர்வலர் ஒருவரின் ஆலோசனையின் அடிப்படையில், “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” என்ற முகநூல் பக்கம் ஒரு வலைத்தளமாக பரிணமிக்க ஆரம்பித்தது. முதல் கட்டமாக, முகநூல் பக்கம் 07. யூலை 2020 அன்று “DsporA Tamil Archive” என்ற பெயர் மாற்றம் பெற்றது. பின்னர் 22. யூலை 2020 அன்று இந்த இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது.» (DsporA Tamil Archive, 2020)

நினைவுகூறல் உரிமை

“Coco” (2017).

நினைவுகூறல் (remembrance) அவசியத்தை ஒரு தனிநபராகவோ அல்லது சமூகமாகவோ உணரும்போது நினைவுகூறல் உரிமை மனித உரிமையாகிறது. நினைவு மறத்தல் (forget) உரிமைக்கும் இது பொருந்தும். ஏனெனில், நினைவுகூறல் அல்லது நினைவு மறத்தல் உரிமை நேர்மறை மற்றும் எதிர்மறை நினைவுகளைப் பற்றியதாக இருக்கலாம். அவை சமூகத்திற்கும் ஒரு தேசத்திற்கும் நேர்மறை மற்றும் எதிர்மறை முக்கியத்துவத்தை கொண்டிருக்கலாம். இந்த கட்டுரை நினைவுகூறல் உரிமையை மையப்படுத்துகிறது. “நினைவுகூறல் என்பது ஒரு நினைவகத்தை உயிருடன் வைத்திருப்பது அல்லது கடந்த காலத்தில் நிகழ்ந்த கொடூரங்களை அலச்சியப்படுத்த அனுமதிக்காது நம்மை வைத்திருப்பது ஆகும்.“[1] (தமிழாக்கம்) (Council of Europe, n.a.).

ஆவணகம், நூலகம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை நினைவக நிறுவனங்களாகவும் (memory institutions) உள்ளன. ஒரு தேசியத்தின் பண்பாடு பாரம்பரியத்தின் ஆவணங்களை சேகரித்தல், நிர்வகித்தல், பேணிப் பாதுகாத்தல், பரப்புதல், காட்சிப்படுத்தல் ஆகிய பணிகளைக் கொண்டுள்ளன. இந்தப் பணிகள் மூன்று நிறுவனங்களிலும் பகிரப்பட்டு ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டும் இருக்கும். இந்த நிறுவனங்கள் அரசு, தனியார் நிறுவனங்கள் அல்லது தளங்களாக இருக்கலாம். பொதுச் சமூகத்தின் அறிவுக் களஞ்சியத்தை பராமரிக்கும் நோக்கத்தைக் கொண்டதாக இருக்கலாம். வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை நினைவுகூறும் ஒரு தனிநபரின் அல்லது சமூகத்தின் உரிமைக்கு, நினைவக நிறுவனங்கள் வசதி படைக்கின்றன. உதாரணமாக, ஒரு நாகரீக வளர்ச்சியின் தோற்றம் பற்றிய தகவல்கள்; மன்னர்கள் மற்றும் இராட்சியங்களின் வரலாறு, பண்பாடு மற்றும் இலக்கியங்கள்; ஒரு பள்ளி மாணவர்களது குழுப் புகைப்படம்; காலமான பாட்டி அல்லது தாத்தாவின் நினைவுக் கையேடு; ஒரு நண்பர், காதலன் , மனைவி அல்லது கணவர் கையால் எழுதிய கடிதம்; ஒரு தேசியத்திற்காக போராடி வீழ்ந்த வீரர்களின் வீர வரலாற்றுச் சுவடுகள்; அல்லது ஒரு இனவழிப்பு பற்றிய அறிக்கை என்று பல வகையான ஆவணங்களாக இருக்கலாம். ஆவணங்கள் பல்வேறு வடிவங்களிலும் இருக்கலாம். அவை எழுத்துரு, ஒலி, ஒளி அல்லது பல்லூடத்தில் இருக்கலாம். அனலாக் (analogue) அல்லது எண்ணிம (digital) வடிவங்களில் இருக்கலாம். நினைவுகளைச் சுமந்த அனைத்து வகையான ஆவணங்களும் ஒரு தேசியம், இனம் மற்றும் அடையாளத்தை வடிவமைக்கும் பூர்வீக வரலாற்றுச் சான்றுகள் ஆகின்றன.

“அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.» (குறள் 421, Thirukkural 2003, pp. 468-469)

Wisdom is the ultimate and impregnable defense for protection against destruction; It is also the fortress of inner strength against enemy onslaughts (English translation of Kural 421, Thirukkural 2003, pp. 468-469)

சங்க காலத்தைச் சேர்ந்த தமிழ் கவிஞரும் தத்துவஞானியுமான திருவள்ளுவரின்[i] கூற்றுப்படி, அறிவுதான் இறுதி அரண். ஆனால், பெரும்பான்மையான தமிழ் அறிவு, குறிப்பாக புலம்பெயர் தமிழ் அறிவு மறைமுக அறிவாக (implicit knowledge) உள்ளது. நினைவு மற்றும் இருப்புக்கான ஆதாரங்களை பராமரிப்பதற்கு இது மிகவும் அச்சுறுத்தலானது. மறுபுறம், முறையான பேணிப் பாதுகாப்பும் (preservation) மீட்டெடுப்பு முறைகளும் (retrieval systems) இல்லாததால் ஆவணப்படுத்தப்பட்ட அறிவும்கூட படிப்படியாக தொலைந்து அல்லது மறந்து போகின்றது. இதனால், மறைமுகமான (implicit) மற்றும் வெளிப்படையான (explicit) அறிவை முறைமைப்படுத்திய ஆவணப்படுத்தல் (systematic documentation), பேணிப் பாதுகாத்தல் (preservation), மீட்டெடுப்பு (retrieval) மற்றும் பரப்புதல் (dissemination) ஆகியவற்றில் நனவுடன் முதலீடு செய்வது அவசியம் ஆகின்றது. மறு புறம், அறிவு ஒரு இறுதி அரண் என்பதால், நினைவக நிறுவனங்களும் நினைவகத் தளங்களும் இனவழிப்பு உத்திகளில் ஒரு இலக்காகின்றன. இருப்பினும், நினைவக நிறுவனங்கள், நினைவகத் தளங்களை அழித்த அனுபவங்களைக்கூட ஒரு சமூகம் தமக்கான “கற்றுக்கொண்ட பாடம்” என்ற அறிவாக மாற்றிச் செயல்பட வேண்டும்.

பேணிப் பாதுகாத்தல் திட்டம்: தமிழர் ஈழத்தின் பூர்வீகக் குடிகள்

சவாலான மற்றும் கொடூரமான நினைவுகளை நினைவுகூறும்போது «ஒரு பயங்கரமான கடந்தகால நிகழ்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகம் ஒட்டுமொத்தமாக தங்கள் வலியை அங்கீகரிக்கிறது என்ற உணர்வைக் கொடுக்கும். அந்த வலிக்கு வழிவகுத்த செயல்களை கண்டிக்கும். அதனுடன் அத்தகைய செயல்கள் எதிர்காலத்தில் மீள நிகழாது என்ற உறுதிப்பாட்டையும் அளிக்க உதவும். பாதிக்கப்பட்டவர்கள் தமது மனக்குமுறலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க உதவும். அவர்கள் கடந்த காலத்திலிருந்து முன்னேற உதவுவதற்கும் நினைவுகூறல் வழிவகுக்கும். ”[2] (தமிழாக்கம்) (Council of Europe, n.a.) அதோடு எதிர்காலத்திற்காக கடந்த காலத்தை உரமாக்கவும் நினைவுகூறல் வழிவகுக்கும்.

ஒரு சமூகம் எதிர் கொண்ட சவால்களும் கொடூரமான அனுபவங்களும் தமது இருப்பைப் பேணிப் பாதுகாக்கும் திட்டத்தை (preservation plan) உருவாக்குவதற்கான அடிப்படையை தரும். ஏனெனில் மானுட வளச்சிகள் அனைத்தும் அழிவிலிருந்தே பிறந்துள்ளன. தமிழரின் பூர்வீக வரலாறு, வளர்ச்சி, படையெடுப்பு, காலனித்துவம், நிழல் அரசாங்கம், இனவழிப்பு என்று பல்லாயிரம் வருடங்களான அனுபவங்களும் நினைவுகளும் தமிழரிடத்தில் உள்ளன. அந்த அனுபவங்களும் நினைவுகளும் சுமந்த ஆவணங்கள் “தமிழர் ஈழத்தின் (ii) பூர்வீகக் குடிகள்” என்பதற்கான சான்றுகளாகின்றன. அவை தமிழரின் இருப்பை தர்க்க ரீதியாக சர்வதேச மட்டத்தில் நிரூபிக்க வல்ல ஆதார மூலங்களாகும்.
இந்த குறிக்கோளை மையப்படுத்தி ஆவணச் சேகரிப்பு, நிர்வாகம், பேணிப் பாதுகாத்தல், பரப்புதல், காட்சிப்படுத்தல் என்ற பணிகளை பல புலம்பெயர் நாடுகளில் ஒரு நிறுவனமாகவோ, தனிநபராகவோ அல்லது சிறு குழுக்களாகவோ முன்னெடுக்கின்றன. இந்த செயல்பாடுகள் ஆவணகம், நூலகம் அல்லது/ மற்றும் அருங்காட்சியகப் பணிகளாக இனம் காணலாம். இச்செயல்பாடுகள் சிறு அளவிலாவது ஒவ்வொரு புலம்பெயர் நாடுகளிலும் உருவாக வேண்டும்.
இதில் முக்கியமாக, அவை செயல்பாட்டுத் தளமாகக் கொண்ட நாட்டின் பொது மக்களின் அணுக்கத்திற்கு உட்படுத்த வேண்டும். ஏனெனில் அந்த ஆவணங்கள் “தமிழர் ஈழத்தின் பூர்வீகக் குடிகள்” என்ற செய்தியைக் காவிச்செல்லும் சான்றுகளாகும்.

ஆனால் அதற்கு முழுமையான மற்றும் பகிரப்பட்ட மூலோபாயம் (holitic and shared strategy) கொண்ட பேணிப் பாதுகாத்தல் திட்டம் (preservation plan) உருவாக்கப்பட வேண்டும். இது ஒட்டுமொத்த திட்டம் (overall plan) மற்றும் உள்ளூர் திட்டம் (local plan) என்று பிரிக்கப்பட வேண்டும். அது ஆவணகம், நூலகம் மற்றும் அருங்காட்சியகப் பணிகளைச் செய்யும் நிறுவனங்கள், தனிநபர்கள் அல்லது சிறு குழுக்களுக்கு உதவியாக இருக்கும்.
இத்திட்டத்தை வரைய ஒரு செயல் திட்டக் குழு உருவாக வேண்டும். அக்குழுவில் இருக்கும் நபர்கள் ஆவணகம், நூலகம் அல்லது அருங்காட்சியகப் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேணும். இதில் உள்ள சவால் என்னவென்றால், உருவாக்கும் திட்டத்தில் பல விமர்சனங்களும் கருத்துகளும் உருவாகலாம். இதில் முக்கியமானது, இத்திட்டத்தை உருவாக்கும் செயல் திட்டக் குழு மீது உள்ள நம்பிக்கை மற்றும் அவர்கள் உருவாக்கும் திட்டத்தில் உள்ள நம்பிக்கை. இந்த நம்பிக்கையை வென்றெடுப்பதும் திட்டக் குழுவின் ஒரு துணை இலக்காக இருக்க வேண்டும். இருப்பினும், இக்குழு உருவாகும் திட்டம் குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒரு முறை அனைத்து நடைமுறை சவால்களையும் கருத்துகளையும் உள்வாங்கி மீள் பரிசீலனை செய்யும் நடைமுறையைக் கொண்டிருக்க வேண்டும். அதனூடாக குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட ஒட்டுமொத்த திட்டம் (overall plan) மற்றும் உள்ளூர் திட்டம் (local plan) வெளிவர வேண்டும்.
இது ஆவணகம், நூலகம் மற்றும் அருங்காட்சியகப் பணிகளில் ஈடுபடுபவர்களின் வேலைப்பகிர்வை உருவாக்கலாம். அது புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒரு பலமான அறிவுக் களஞ்சிய வலைப்பின்னலாக உருவாகும். ஒரு முழுமையான மற்றும் பகிரப்பட்ட திட்டம் இருக்கும் பட்டச்சில் நேரம், வளம், பொறுளாதாரச் சேமிப்பு ஏற்படுத்தலாம். அது எமது எஞ்சியிருக்கும் நினைவுகளை பல தலைமுறைகளுக்குப் பாதுகாக்கும். ஏனெனில், இந்த அனுபவங்களும் நினைவுகளும் எமது அறிவுக்கும் ஞானத்திற்குமான (knowledge and wisdom) ஆதார மூலங்கள் ஆகும். அவை ஒரு தேசத்தை வலிமைப்படுத்தி, வரலாறு மீள் நிகழாது தடுத்து பாதுகாக்கும்.

ஆவணம் நினைவகத்தின் சான்று.

DsporA தமிழ் ஆவணகம்

மேற்கோள்

Anderson-Lopez, K. & Lopez, R. (2017). Remember me. (Pixar). Coco. [YouTube].
Retrieved from https://www.youtube.com/watch?v=3iDxU9eNQ_0
Council of Europe. (n.a.). Remembrance. Retrieved from https://www.coe.int/en/web/compass/remembrance
DsporA Tamil Archive. (2020, 16.01.2021). எம்மைப் பற்றி. Retrieved from https://dspora.no/about-us-tamil/
IGI Global Publisher of Timely knowledge. (n.a.). What is Memory Institutions. Retrieved from https://www.igi-global.com/dictionary/collaboration-on-public-programming-by-memory-institutions-in-botswana/69080
Thirukkural. (2003).  (S.M.Diaz Ed. 2. ed. Vol. 1). Coimbatore: Ramanandha Adigalar Foundation.


பின்குறிப்பு

[1] “Rememberence is about making ourselves keeping a memory alive, or at least not allowing ourselves to overlook horrors that have happened in the past.»

[i] திருவள்ளுவர் ஒரு தமிழ் கவிஞரும் தத்துவஞானியும் ஆவார். அவர் திருக்குறளை எழுதியவர். அந்த நூல் சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சிறந்த தமிழ் இலக்கியமாகும். இதில் 1330 குறள்கள் உள்ளன. ஒவ்வொரு குறளும் இரண்டு வரிகளைக் கொண்ட அறநெறி ஆகும். இந்த நூல் நோர்வேயிய மொழி உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

[2] «help those who have been affected by a terrible past event to feel that society as a whole recognises their pain, condemns the actions which led to that pain, and provides some reassurance that such actions will not be repeated in the future. Remembrance can help in this way to give a sense of closure to victims, to enable them to move on from the past.

(ii) «ஈழம்» முழுத் தீவான, இப்போதைய, இலங்கையின் (ஸ்ரீலங்கா) பூர்வீகப் பெயர்.
IBC Tamil TV. (16.06.2020). ஈழம் இலங்கையின் பூர்வீகப் பெயர்?. Retreived from https://fb.watch/1NrGM76p4L/

TamilNet. (2008). Eezham Thamizh and Tamil Eelam: Understanding the terminologies of identity. Retrieved from https://www.tamilnet.com/art.html?catid=99&artid=27012

Veluppillai, Alvappillai. (1997). “Language”. From https://www.tamilnet.com/img/publish/2015/11/Tamil_Language_and_Eelam_Tamils_by_Prof_A_Veluppillai_July_1997.PDF

சொற்பிறப்பியல்:
TamilNet. (2010). “Eezham / E’lu / He’la”. From
https://www.tamilnet.com/art.html?catid=98&artid=30919


புதுப்பிப்பு│Update:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: