
வணக்கம்
தனிநபர்கள், ஆர்வலர்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள்,
நோர்வேயில் தமிழ் புலம்பெயர் வரலாற்றின் 70வது ஆண்டு நிறைவின் வரலாற்றை அடயாளப்படுத்துவதற்கான பணிக்கு தன்னார்வலர்கள், அமைப்புகளின் ஒத்துழைப்புக்கான வேண்டுகோள்
புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் (DiasporA Tamil Archives) ஆகிய நாங்கள் 23.04.2020 முதல், தமிழ் புலம்பெயர் வரலாறு மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், அடுத்த தலைமுறைக்குக் கடத்துதல், பரிமாற்றம் மற்றும் பரவலாக்கல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இந்த ஆண்டு, நோர்வேயில் தமிழ் புலம்பெயர் வரலாற்றின் 70-வது ஆண்டு (1956-2026) நிறைவு ஆகும். உங்களுடன் இணைந்து, நாங்கள் பெருமகிழ்ச்சியுடனும் பெருமையுடனும், நோர்வே முழுவதும் வெவ்வேறு இடங்களில் 3 வெவ்வேறு கண்காட்சிகளை அமைக்க விரும்புகிறோம். 2026 மற்றும் 2027-ஆம் ஆண்டுகளில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை அடையாளப்படுத்தவும் கொண்டாடவும் உங்கள் பங்களிப்பை எதிர்பாரத்து நிற்கின்றோம்,
இவற்றில், இலக்கியம், கலை, பண்பாடு, உணவு, உடை, திரைப்படம் மற்றும் பிற அம்சங்களையும் அடையாளப்படுத்தி விரிவுபடுத்தலாம் என்று நம்புகிறோம்.
ஒத்துழைப்பிற்கான அடிப்படை நிபந்தனைகள்
இப்பணியில் பங்களிப்பபுச் செய்ய ஆர்வமாக உள்ளவர்கள் பாலினம், வயது, இனம் மற்றும் பாலியல் நோக்குநிலை ஆகியவற்றை பன்முகத்தன்மையுடன் (mangfold) மதித்து நடந்து கொள்ள வேண்டும். இந்த ஒத்துழைத்த செயல்பாட்டில் நீங்களும் ஒரு அங்கமாக இருக்க, புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் (Diaspora Tamil Archives) அமைப்பின் ஒழுங்குகளை மதித்து செயல்படவேண்டும்:
- தமிழர்களுக்குத் தனித்துவமான செம்மொழி, பண்பாடு, வரலாறு மற்றும் பாரம்பரியத் தாயகம் உண்டு.
- அனைத்து மக்களுக்கும் தங்கள் வேர்களை அறிந்து கொள்ளவும், அவற்றைப் பேணிப் பாதுகாக்கவும் உரிமை உண்டு.
- அனைவரையும் உள்வாங்குதல், வெளிப்படைத்தன்மை, மரியாதை, அத்துடன் தீர்வு நோக்குடன் இருத்தல் மற்றும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைக் கொடுத்தல்/பெறுதல்.
நோர்வேயிய-தமிழ் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் அடையாளப்படுத்துவதற்கும் தன்னார்வலர்கள் (volunteer), அங்கத்தவர்கள் (member), ஆதரவாளர்களை (supporting member) நோர்வே முழுவதிலும் இருந்து எதிர்பார்த்து நிற்கின்றோம்.
கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளுக்கான இடங்கள் குறித்த வேண்டுகோள்
உங்களுக்கு தொடர்புடைய அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் மையங்களைத் தொடர்புகொண்டு அங்கு கண்காட்சிகளை வைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தாருங்கள். அங்கு 2026, 2027 ஆம் ஆண்டுகளில் பொருத்தமான ஒரு காலப்பகுதியைத் தெரிவு செய்து கண்காட்சிகளை நடத்த ஆர்வமாக உள்ளோம்.
அதிகமானோர் ஆர்வம் காட்டுவதால், பதிலளிக்கும் திகதி 01.07.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூன்று கண்காட்சிகளைப் பற்றி
நோர்வே நூலகங்கள், சுவடிகள் காப்பகங்கள் மற்றும் பிற பண்பாட்டு மையங்களில் மூன்று வெவ்வேறு கண்காட்சிகளை முந்தைய ஆண்டுகளில் DTA நடத்தியுள்ளது. இது லேமினேட் செய்யப்பட்ட A3 தாள்களைக் கொண்ட ஒரு சுவரொட்டிக் கண்காட்சியாகும்
- ஆண் ஆதிக்க உலகில் தமிழ்-நோர்வேயிய பெண்கள் (2022)
இக்கண்காட்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் சமூகத்திற்குத் தங்களது பங்களிப்பு பற்றிக் கூறுகிறார்கள். இந்த ஆண்டு நாங்கள் ஒசுலோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மட்டுமல்லாது நோர்வே முழுவதற்கும் விரிவுபடுத்தியுள்ளோம். 2022 ஆம் ஆண்டின் கண்காட்சி சுவரொட்டிகளை இங்கே காண்க: https://diasporatamil.no/exhibition-tamil-norwegian-women-in-a-male-dominated-world/
மேற்குறிப்பிட்ட கண்காட்சிக்கான நிர்ணயித்த வரையெல்லைகள்:
- புலம்பெயர் தமிழ் சமூகம் அல்லது நோர்வேயிய சமூகத்தில் பணியாற்றும் தமிழ்-நோர்வேயிய பெண்கள்.
- ஓர் அமைப்பு/நிறுவனத்தில் சமூகப் பங்களிப்பைச் செய்தவர்கள் அல்லது செய்து கொண்டு இருப்பவர்கள்.
- நோர்வேயில் தனது/ தமது செயல்பாட்டை செய்தவர்கள் அல்லது செய்து கொண்டு இருப்பவர்கள்.
- சிறுவர் மற்றும் சிறுவர் கதைகள் (2023)
இக்கண்காட்சியில் சிறுவர் தமிழ்ப் பாரம்பரிய சிறுவர் கதைகளைச் சொல்கிறார்கள். 2023 கண்காட்சியின் சுவரொட்டிகளை இங்கே காண்க: https://diasporatamil.no/exhibition-children-and-children-stories/
- முள்ளிவாய்க்கால்: சிறுபான்மையினராக ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனம் (2024)
(ஈழத் தமிழ் ஆதிகாலம் தொடக்கம் ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழ் தேசியம் வரை)
இக்கண்காட்சியானது, இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்ட விரும்பும் நோர்வே வாழ் தமிழ் இளைஞர்களைக் கொண்ட ‘Tamil Insight’ (TI) என்ற முன்னெடுப்புடன் இணைந்து நடத்தப்பட்டது.
இது, போரின் இறுதிக் காலக்கட்டங்கள் மற்றும் ஆழமான தகவல்களின் மூலம் ஒடுக்குமுறை எங்கிருந்து உருவானது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு தகவல் கண்காட்சியாகும். இக்கண்காட்சி அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் முகமாக சுவரொட்டிகளில் வரைபடங்களையும் வரைகலை வடிவமைப்புகளையும் பயன்படுத்தி உள்ளோம். (முள்ளிவாய்க்கால் கண்காட்சிக்கான கதை வரைவு (script), கோரிக்கையின் பேரில் அனுப்பப்படும்.)
2024 கண்காட்சியின் சுவரொட்டிகளை இங்கே காண்க: https://diasporatamil.no/exhibition-mullivaikkal-a-nation-oppressed-as-a-minority/
நோர்வே வாழ் புலம்பெயர் தமிழர் வரலாற்றின் ஒரு சிறு குறிப்பு
நோர்வேக்கு வந்த முதல் தமிழர் அன்ரெனி இராஜேந்திரம் அவர்கள் ஆவார். அவர் சிலோனிலிருந்து (அப்போதைய ஈழம், இப்பொதைய இலங்கை/ ஸ்ரீலங்கா) 1956-ஆம் ஆண்டு கோடைக்காலத்தின் பிற்பகுதியில் பேர்கனில் காலடி வைத்தார். அவரைத் தொடர்ந்து 1960-களில், தொழில் நிமிர்த்தமும் கல்வி கற்பதற்காகவும் சில இளம் தமிழ் ஆண்கள் நோர்வேக்கு வந்தனர். பின்னர், தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட போரின் விளைவாக, மாணவர்கள், தொழிலாளர்கள், அகதிகள் மற்றும் குடும்ப இணைப்புக்காகப் பல ஆயிரம் தமிழர்கள் நோர்வேக்கு புலம்பெயர்ந்து வந்தனர். இந்தக் குடியேற்றம், நோர்வேயில் ஒரு நோர்வேயிய-தமிழ் சமூகத்தையும் ஒரு புலம்பெயர் தமிழ் சமூகத்தையும் (Tamil diaspora) உருவாக்க வழிவகுத்தது. இந்தப் புலம்பெயர்வு 2026 ஆம் ஆண்டில் தனது 70-வது ஆண்டு மைல்கல்லை எட்டியுள்ளது.
1956-ல் இலங்கையில் அரசியல் ரீதியாக அமுல்படுத்தப்பட்ட «சிங்களம் மட்டும்» என்ற சட்டத்தின் (Sinhala Only Act) 70-வது ஆண்டு நிறைவும் இந்த ஆண்டே ஆகும் (2026). «சிங்களம் மட்டும்» என்ற சட்டம் அமுல்படுத்தப்பட்ட சிறிது காலத்திலேயே தமிழர்களிற்கு எதிராக நடந்தப்பட்ட முதல் இனப்படுகொலையான கல் ஓயா இனப்படுகொலை நடைபெற்றும் 70 ஆண்டுகள் ஆகின்றது. இது இலங்கைத் தீவில் வாழந்த தமிழர்களிக்கு எதிராகப் பாகுபாடு காட்டிய ஒரு மொழி தேசியவாதக் கொள்கையாகும்.
இந்த ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் (1976) 50-வது ஆண்டும் ஆகும். தமிழர்கள் தங்களின் பாரம்பரிய தாயகத்தில் சுயநிர்ணயம் பெறுவதற்கான முதல் அரசியல் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஆண்டு இது ஆகும். தமிழீழம்[1] என்ற தனி அரசை நிறுவுவதற்கான தமிழர்களின் ஆணையை இத்தீர்மானம் வழங்கியது. இது 1976 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி வட்டுக்கோட்டைத் தொகுதியில் நடைபெற்ற தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் (TULF) முதல் தேசிய மாநாட்டில், எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும், தென்னிந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மலையப்பன் அவர்கள், 1716 ஆம் ஆண்டில் நோர்வே மண்ணில் காலடி வைத்த முதற் தமிழர் என்று கூறப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அது அவரது நண்பரான பார்த்தலோமியஸ் சீகன்பால்க் என்பவருடன் மேற்கொண்ட ஒரு குறுகிய பயணமாகவே இருந்தது. பார்த்தலோமியஸ் சீகன்பால்க் ஒரு ஜெர்மானிய லூத்தரன் சமயப் போதகர் ஆவார். அவர், மற்ற பணிகளுடன், தமிழ்நாட்டின் மையப்பகுதியில் உள்ள தரங்கம்பாடி என்ற டேனிஷ்-நோர்வே காலனித்துவத்திலும் பணியாற்றினார்.
உங்களுக்கு கேள்விகள் இருந்தால், தயங்காமல் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்களிடமிருந்து பதிலைப் பெற ஆவலுடன் காத்திருக்கிறோம்.
நன்றி.
தோழமையுடன்,
பகீரதி குமரேந்திரன்
På vegne av | on behalf of | சார்பில்
DiasporA Tamil Archives
புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள்
[1] மதிப்புக்குரிய பொன்னம்பலம் அருணாச்சலம் அவர்கள் 1919-ல் இலங்கை தேசிய காங்கிரஸை (Ceylon National Congress) நிறுவினார். இருப்பினும், அது நிறுவப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே, அவர் ஏமாற்றமடைந்தார். அவர் 1922-ல் இலங்கைத் தமிழ் லீக்கை (Ceylon Tamil League) உருவாக்கினார், அதன் தலைவராகவும் அவரே இருந்தார்.
ஆங்கிலேயக் காலனித்துவ காலத்தில் இலங்கைத் தமிழ் லீக்கின் இரண்டாவது பொதுச்சபையில் மதிப்புக்குரிய பொன்னம்பலம் அருணாச்சலம் அவர்கள் ஆற்றிய உரையில் ‘தமிழீழம்’ என்ற சொல் உருவாக்கப்பட்டது. (2024-ல் நடைபெற்ற “முள்ளிவாய்க்கால்: சிறுபான்மையினராக ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனம்” கண்காட்சியில் இடம்பெற்ற “சுய-ஆட்சியின் கருத்து: தமிழீழம்” என்ற சுவரொட்டியிலிருந்து)

Les minnefortellinger i kjeldearkivet på Lokalhistoriewiki.no på Nasjonalbiblioteket.
Les leksikalse artikler i tamil satsningsområde på Lokalhistoriewiki.no på Nasjonalbibliotket.

வெளியீ│launch: 17.02.2026
புதுப்பிப்பு│Update: 25.03.2026

