Rice.no

நம் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உணவு தவிர்க்க முடியாத துணையாகின்றது. ஏழ்மையிலும் சரி, சீரான வாழ்க்கைத் தரத்திலும் சரி, உணவு என்பது அனைவரின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிறது. உணவுப் பழக்கம் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கிக்கும். அது கருவறையிலிருந்து கல்லறை வரையிலான நமது வாழ்க்கைப் பயணத்தில் நல்ல, கெட்ட உணர்ச்சிகள், நினைவுகள் மற்றும் அனுபவங்களைத் தூண்டும் ஆற்றல் கொண்டது. உணவின் நிறங்கள் மக்களின் வாழ்க்கைக் கதைகளை சொல்லும். அதில் புலம்பெயர் வரலாறும் உள்ளடங்கும். உணவு புதிய உறவுகளையும் பிணைப்புகளையும் உருவாக்குவதற்கான அழைப்பிதழாக செயல்படலாம். ஒரு தேசியத்தின், ஒரு பண்பாட்டுக் குமுகத்தின், ஒரு புவியியல் பிராந்தியத்தின், ஒரு மதக் குழுவின் மற்றும் ஒரு இனத்தின் அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அடிப்படைகளில் ஒன்றாக உணவுப் பண்பாட்டு வரலாறு இருக்கும். மறுபுறம், உணவு பல மாறுபட்ட பண்பாடுகளை வரவேற்பதுடன், தனது பூர்வீகத்தை வெளிப்படுத்தி பல புதிய இணைவுகளை (fusion) உருவாக்க வல்லது.

Rice.no என்பது ஒசுலோவை தளமாகக் கொண்ட ஒரு உணவு வலைப்பதிவு ஆகும். இது இரண்டு நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்டது. சிறிது காலத்தில் மூன்று நபர்களாகிய அனைவரும் தமிழ்-நோர்வேயியர்கள் ஆவர். இந்த வலைப்பதிவு உணவுப் பண்பாட்டின் மூலம் நோர்வேயின் பன்முக பண்பாட்டை பிரதிபலித்தது. இந்திய ஆட்டுக்கறி, சீன மிளகு மாட்டிறைச்சி, டோனர் கேபாப், ஃபெட்டா மற்றும் கீரையுடன் கோழி மார்பகம் மற்றும் கடுகு மற்றும் தோடம்பழம் சாஸுடன் பன்றி இறைச்சி போன்ற சமையல் குறிப்புகள் இணைக்கப்பட்டன.

இந்த உணவு வலைப்பதிவின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான ருஷாந்த் வதனகோபாலன் (ருவ) அவர்களை புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் (புதசுகா) 28 யூன் 2021 அன்று தொடர்புகொண்டு அவர்களின் உணவுக் கலையின் பயணத்தை பதிவு செய்தது.

புதசுகா: எது இந்த வலைப்பதிவை ஆரம்பிக்க உங்களைத் தூண்டியது?

ருவ: நாங்கள் இரண்டு நண்பர்களாக இருந்தோம். பின்னர் நாம் மூவரானோம். நாங்கள் உயர் கல்வி படித்த காலத்தில் சமையலில் ஆர்வம் கொண்டோம். பட்டம் பெற்ற பின்னர், எங்கள் சமையல் குறிப்புகளை உணவு வலைப்பதிவில் சேகரிக்க விரும்பினோம். அவற்றை எங்காவது எண்ணிம முறையில் பாதுகாத்து பிறறுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்பதற்காக இதை முன்னெடுத்தோம்.

புதசுகா: வலைப்பதிவுக்கான வேலைப்பகிர்வு மற்றும் ஒத்துழைப்பை உங்களுக்கிடையே எப்படி உருவாக்கினீர்கள்?

ருவ: ஒரு நடைமுறை ஒழுங்கில் உள்ளடக்கத்தை வெளியிட இணைங்கினோம். அதோடு பணியைப் பகிர்ந்து கொண்டோம். அதன் மூலம் வலைப்பதிவை தொடர்ந்து இயக்க முடிந்தது.

புதசுகா: வலைப்பதிவில் நீங்கள் சேர்த்த சமையல் குறிப்புகளை எப்படி அடையாளம் கண்டீர்கள்?

ருவ: சமையல் குறிப்புகளை அடையாளம் காண எங்களிடம் ஒரு குறிப்பிட்ட வழிமுறை இருக்கவில்லை. பெரும்பாலும் ஒவ்வொரு உறுப்பினரும் அவர்கள் சமைத்த சுவாரஸ்யமான சமையலை எழுதினார்கள். இருப்பினும், சிறப்பு நிகழ்வுகள் (ஈஸ்டர், நத்தார் அல்லது பிரேசிலில் நடந்த உலகக் கோப்பை போன்றவை) அல்லது வெளிநாட்டுப் பயணத்தில் அறிமுகமான புதிய சிந்தனைகள் குறிப்பிட்ட உணவுகளுக்கான சமையல் குறிப்புகளைக் கண்டறிய வைத்தது. அதோடு அதை எங்கள் பாணியில் மீண்டும் உருவாக்க வழிவகுத்தது.

புதசுகா: Rice.no க்கு பிடித்த உணவு எது?

ருவ: அது கடினமான கோள்வி. ஆனால் Rice.no இன் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, இந்திய ஆட்டுக் கறி மற்றும் சீன மிளகு மாட்டிறைச்சி ஆகியவை வாசகர்களிடையே மிகவும் பிரபலமாக இருப்பதை நான் அறிவேன். எங்களைப் பொறுத்தவரை, எல்லாம் நன்றாக இருந்தது. இருப்பினும், ஒரு முறை நாங்கள் மூன்று வகை உணவை (three-course meal) ஒன்றாகச் சமைத்தோம். அதில் கடுகு மற்றும் தோடம்பழம் சாஸுடன் பன்றி இறைச்சி முதல்மை உணவாக இருந்தது. தனிப்பட்ட முறையில் எங்களுக்கு அது சிறந்த அனுபவமாக அமைந்தது.

புதசுகா: Rice.no இற்கு விருப்பமான உணவில் உங்களுக்கு இருக்கும் உணர்ச்சி, நினைவு அல்லது அனுபவத்தைப் பற்றி கூறுங்கள்?

ருவ: ஒன்று உணவைக் குறிப்பிடலாம் – நாங்கள் புதிதாக ஒன்றை முயற்சித்தோம். ஆனால் சமையலறையில் ஒன்றாக நின்று, பேசி, ருசித்து, கலந்துரையாடி மற்றும் ஆரம்பம் முதல் இறுதி வரை முழு செயல்முறையையும் ஒரே எண்ணம் கொண்டவர்களுடன் ரசித்தது இன்னும் சிறப்பாக இருந்தது.

புதசுகா: நீங்கள் எவ்வளவு காலமாக இந்த வலைப்பதிவை நிர்வகித்து வருகிறீர்கள்?

ருவ: இந்த வலைப்பதிவை 2010ம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள் நாங்கள் தீவிரமாக நிர்வகித்தோம். ஆனால் அதற்கு பிந்தைய ஆண்டுகளில் நாங்கள் இந்த  வலைப்பதிவில் எந்தவொரு வேலையும் செய்யவில்லை.

புதசுகா: இந்த வலைப்பதிவின் நோக்கம் என்ன?

ருவ: சமையல் குறிப்புகளைச் சேகரித்து எண்ணிம முறையில் பகிர்வதே இந்த வலைப்பதில் நோக்கமாக இருந்தது. அதே நேரம் நாம் தமிழ் பின்புலத்தைக் கொண்டிருந்ததால் தமிழ் உணவுகளையும் இணைக்க விரும்பினோம். நாம் புதிய சுவைகளை எவ்வாறு இணைக்கலாம், மற்றும் சாதாரண சமையல் குறிப்புகளில் எவ்வாறு புதிய சுவைகளை இணைக்கலாம் என்பதைக் காண்பிப்பதும் நோக்கமாக இருந்தது. அக்காலத்தில், ஒரு சில வலைப்பதிவுகள் மட்டுமே இருந்தன. அவற்றில் எதுவும் ஆசிய சமயல் கூறுகளை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.  எனவே இதை நோர்வே வாழ் உணவு விரும்பிகளுக்கு கொண்டு செல்ல சுவாரசியமாக இருக்கும் என்று நாம் நினைத்தோம்.

புதசுகா: Rice.no உடன் உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

ருவ: இதுவரை எதுவும் இல்லை. நேரமும் ஆர்வமும் திரும்பினால், எதிர்காலத்தில் எப்போதாவது, இந்த வலைப்பதிவு புதுப்பிக்கப்பட்டு வேறு வடிவத்தில் வரலாம்.

ருஷாந்தின் தனிநபர் சுவடிகள் சேகரத்தின் (personal archives) அடிப்படையில், அவர் 2015 ஆம் ஆண்டில் சமயல் குறிப்புகளை ஒரு மின்நூல் வடிவில் உருவாக்க திட்டமிட்டிருந்தது புலப்பட்டது. அதில் அவர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சமையல் குறிப்புகளை இணைக்க நினைத்திருந்தார்.

தமிழ்-நோர்வேயியர்களின் மறைக்கப்பட்ட மற்றும் விரைவில் மறக்கப்படும் பல முயற்சிகளில் ஒன்றான Rice.no இணையதளத்தின் கதையை பதிவு செய்யவும் பேணிப் பாதுகாக்கவும் எங்களுக்கு வாய்ப்பளித்த Rice.no க்கு புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் (DTA) ஆகிய நாம் நன்றி தெரிவிக்கின்றோம். இந்த உணவு வலைப்பதிவின் கதையைப் பேணிப் பாதுகாப்பது, தமிழ்-நோர்வேயிய புலம்பெயர் வரலாற்றைப் (Tamil-Norwegian migration history) பாதுகாப்பதுடன் மட்டும் நின்றிவிடாது, புலம்பெயர்ந்த தமிழர்களின் (Tamil diaspora) வரலாற்றையும் அவர்களின் உணவுப் பண்பாட்டு வரலாற்றையும் பதிவு செய்து, வளப்படுத்திப் பாதுகாக்கும்.

கவலைக்குரிய விடயமாக, யனவரி 2022 ஆம் ஆண்டு முதல் Rice.no உணவு வலைப்பதிவு செயலற்ற நிலையில் உள்ளது. புலம்பெயர் தமிழர்களின் நினைவகம் மற்றும் எதிர்கால ஆராய்ச்சி பொருளாக பயன்படுத்த Rice.no இன் இணையதளம் மீட்டெடுக்கப்பட்டு காப்பகப்படுத்தப்பட வேண்டும் என்று நாம் ஊக்குவிக்கின்றோம். நோர்வேயைத் தளமாகக் கொண்ட இணையதளங்கள் அல்லது நோர்வே தொடர்பான உள்ளடக்கம் கொண்ட இணையதளங்கள் நோர்வே தேசிய நூலகத்தில் காப்பகப்படுத்தப்பட்டு பேணிப் பாதுகாக்கப்படலாம். DTA முடிந்தவரை தமிழ்-நோர்வேயிய இணையதளங்களை பராமரிக்கவும், காப்பகப்படுத்தவும் மற்றும் பேணிப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கிறது. ஏனெனில், இக்காலத்தில் தனியார்/ தன்னார்வ நிறுவனங்களின் முக்கிய வரலாற்று ஆவணங்களில் இணையதளங்கள் ஒன்றாகும். இது பண்பாட்டு வரலாற்றை, குறிப்பாக புலம்பெயர் சமூகங்களை ஆவணப்படுத்துகிறன.

மேலதிகத் தகவல்: நோர்வே தேசிய நூலகம் (National Library of Norway)
மின்னஞ்சல்: nettarkivet@nb.no


புதுப்பிப்பு│Update:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: