1973 ஆம் ஆண்டு சிலோனிலிருந்து (இன்று இலங்கை) “Aukra bruk” இற்கு வந்த இரண்டு தமிழ் தொழிலாளர்களைப் பற்றி இந்த நோர்வேயிய செய்தித்தாள் நறுக்கு பேசுகின்றது. “Aukra bruk” என்பது ஒரு கப்பல் கட்டும் தளம் ஆகும். அது மோரே மற்றும் றும்ஸ்டால் எனும் (Møre and Romsadal) மாகாணத்தில், ஔக்ரா (Aukra) எனும் நகராட்சியில் உள்ள கோஸ்சன் (Gossen) எனும் தீவுவில் அமைந்துள்ளது.
“Aukra bruk”. Photo by Eilif Næss. The picture is from the archive of the newspaper, “Tidens Krav”, from the period of 1970-1994. Now this photo is in Nordmøre museum’s photo collection. (digitaltmuseum.no)
கடந்த இரண்டு மாதங்களாக கப்பல் கட்டும் தளத்தில் ஒரு வேலைக்காக பூலோகநாதன் நடராஜா மற்றும் சண்முகம் கந்தையா நாகராசா கோஸ்சனில் (Gossen) தற்காலிகமாக குடியேறியதாக இக்கட்டுரை நிருபர் எழுதுகிறார். வெப்பமான காலநிலைச் சூழலைக் கொண்ட தெற்கிலிருந்து வந்த இந்த இரண்டு இளைஞர்களும் பலத்த காற்றுடன் வெளிப்படும் இடமான ரோம்ஸ்டாலின் (Romsdal) வடக்குக் கடற்கரையில் அமைந்துள்ள இயந்திரக் கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு தொழிற்பயிற்சிக்காக வந்துள்ளனர்.
இந்த இரண்டு இளைஞர்களும் சேர்ந்து இலங்கையில் உள்ள குருநகரில் வெவ்வேறு கப்பல்களைப் பழுதுபார்ப்பதற்கான ஒரு பட்டறை வைத்திருந்தனர். அதற்கு அவர்கள் “யாழ் மரைன் இன்ஜினியரிங்”1 என்று பெயரிட்டனர் என்பதை நாகராசா DsporA Tamil Archive விடம் தெரிவித்தார். அவர்கள் Cey-Nor உடனான பணி நிமிர்த்த நல்லுறவையும், மற்றும் அன்ரெனி இராஜேந்திரத்துடன்2 ஒரு நல்ல நட்பையும் கொண்டிருந்தனர். இக்காலப்பகுதியில், அன்ரெனி நோர்வேயில் இருந்து தனது குடும்பத்துடன் மீண்டும் இலங்கைக்குக் குடிபெயர்ந்திருந்தார். நோர்வேயில் உள்ள தனது நண்பர் ஒருவர் மூலம் அன்ரெனி இவ்விருவரையும் “Aukra bruk”க்கு பரிந்துரைத்தார். அவர்கள் இவ்விருவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க ஆர்வம் காட்டினர்.
இக்காலப் பகுதியில், நோர்வே வெளியுறவு ஆலோசகர் இந்தியாவில் டெல்லியில் மட்டுமே இருந்தார். அவர் 1971 ஆம் ஆண்டில் “Aukra bruk” அனுப்பி வைத்த «பயண வவுச்சரைப்»3 பெற்றார். ஆனால் பங்களாதேஷ் விடுதலைப் போரின் காரணமாக பூலோகநாதனும் நாகராசாவும் அந்தப் «பயண வவுச்சரை» 1973 ஆம் ஆண்டு வசந்த காலத்திலேயே தாமதமாகப் பெற்றுக் கொண்டனர். இறுதில் பூலோகநாதன் (28) மற்றும் நாகராசா (26) ஆகியோர் 20 ஆம் திகதி நவம்பர் மாதம் 1973 ஆம் ஆண்டு நோர்வேயில் தரையிறங்கினர்.

“Fra Ceylon til Aukra” (ஆண்டு தெரியவில்லை, அநேகமாக “Romsdals Budstikke”). இடது பக்கம் நாகராசா மற்றும் வலது பக்கம் பூலோகநாதன். பூலோகநாதனிடமிருந்து எண்ணிமப் படமாகப் பெறப்பட்டது. நாகராசாவுடனான உரையாடலின் அடிப்படையில் அவர்கள் “Aukra bruk” இல் பணி ஆரம்பித்து சிறிது காலத்திற்குப் பிறகு நேர்காணல் காணப்பட்டனர்.
நாகராசாவிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், இது “Romsdals Budstikke” எனும் செய்தித்தாளின் கட்டுரையாக இருக்க வாய்ப்புள்ளது. DsporA Tamil Archive இதன் மூல ஆவணப் பொருளை அதன் செய்தித்தாள் ஆவணத்திலிருந்து கண்டெடுக்க முயற்சித்தது. அதன் அடிப்படையில் நோர்வேயிய தேசிய நூலகத்தைத் தொடர்புகொண்டது. இந்த அரச நிறுவனம் “அனைத்து வகையான ஊடகங்களில் வெளியிடப்பட்ட உள்ளடக்கத்தை சேகரித்து, பேணி பாதுகாத்து மற்றும் அணுக்கத்திற்குக் கிடைக்கச் செய்யும்” பணிகளை மேற்கொள்கின்றது. அதில் நோர்வேயில் வெளியான செய்தித்தாள்களும் உள்ளடங்கும். எண்ணிமமயமாக்கப்பட்ட செய்தித்தாள்கள் அவர்களின் இணையத்தளத்தில் கிடைக்கின்றன. எதிர்பாராதவிதமாக, “Romsdals Budstikke” எனும் செய்தித்தாளின் 1970 களின் வெளியீடுகள் எண்ணிமமயமாக்கப்படவில்லை. எனவே, மைக்ரோ ஃபில்ம்களில் (microfilms) தேட அறிவுறுத்தப்பட்டது. அவை ஒஸ்லோ, Solli Plassல் அமைந்துள்ள நோர்வேயிய தேசிய நூலகத்தில் பொது அணுக்கத்திற்குக் கிடைக்கின்றன. அல்லது முன்பதிவின் அடிப்படையில், மைக்ரோஃபில்ம் கருவி கொண்ட, அருகாமையில் அமைந்துள்ள ஓர் நோர்வேயிய உள்ளூர் பொது நூலகத்தில் பயன்படுத்தலாம்.
நோர்வேயிய தேசிய நூலகம்
https://www.nb.no/
மேற்கோள்:
1 யாழ் என்பது ஈழத்தில் (இலங்கை / சிலோன்) உள்ள யாழ்ப்பாண குடாநாட்டின் ஒரு குறியீட்டுப் பெயர் ஆகும்.
TamilNet. (2008). Jaffna/ Yaazhppaa’nam/ Yaazhppaa’nap Paddinam/ Yaazhppaa’naayan Paddinam. Hentet fra https://www.tamilnet.com/art.html?catid=98&artid=26501
2 அன்ரெனி இராஜேந்திரம் 1956 இல் நோர்வேக்கு வந்த முதல் ஈழத் தமிழர்.
3«பயண வவுச்சர்» (travel voucher) ஒரு காரணத்தை அடிப்படையாகக் கொண்டுப் பெறப்படும் பயண அனுமதி.
பொறுப்புத் துறப்பு:
தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இதனால் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களில் வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளது.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை எழுதுவது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்கமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.
புதுப்பிப்பு│Update: 24.11.2021