ஆவணகம் │ நூலகம் │ அருங்காட்சியகம்

ஆவணகங்கள், நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் பண்பாட்டு வளங்களைக் கொண்டிருக்கும் ஒத்த களஞ்சியங்களாகத் தோற்றம் அளிக்கலாம். ஆனால் இந்த மூன்று வகையான களஞ்சியங்களின் சேகரிப்பு, சேமிப்பு மற்றும் பேணிப் பாதுகாத்தலின் அடிப்படை வேறுபட்டு நிற்கின்றன. அத்துடன் அவை எவ்வாறு பத்திரங்கள், கோப்புகள், மற்றும் ஆவணப் பொருட்களை ஒழுங்கமைக்கின்றன, மற்றும் ஒவ்வொரு களஞ்சியமும் அதன் பயனாளர்களுடன் எவ்வாறு தொடர்புபட்டுள்ளது என்பதில் வேறுபாடு உள்ளது. களஞ்சியங்களின் கையகப்படுத்தல் கொள்கை, பொருட்களை வகைப்படுத்தும் விதம், ஆவணப்படுத்தும் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும் அணுக்கம் ஆகியவை அதன் சேகரிப்பு அலகின் அடிப்படியில் வேறுபடும். பொதுவாக ஒரு நாட்டில் இந்த மூன்று வகையான களஞ்சியங்களும் அன்நாட்டு அரசால் அல்லது அந்த அரசின் பொருளாதார ஆதரவுடன் நிர்வகிக்கப்படும். ஆனால் இங்கு பட்டியலிடும் தமிழ்க் களஞ்சியங்கள் தனியார் நிறுவனங்களாக, நன்கொடை மற்றும் தன்னார்வத் தொண்டு அடிப்படையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

நீங்கள் அறிந்த தமிழ் ஆவணகம், நூலகம் அல்லது அருங்காட்சியகம் பற்றி எங்களுக்கு அறியப்படுத்துங்கள்

Johan Didrik Sinning, nordlandshandler. Serie Ra – Nordfaruttrekk 1730-1783/பேர்கன் நகர ஆவணக்காப்பகம்
Bjørvika நூலகம் ஒசுலோ, 2020
Edvard Grieg அருங்காட்சியகம் பேர்கன், 2020

ஆவணகம்

ஆவணம் அறிவின் முதன்மை ஆதார மூலம் ஆகும்.
ஆவணகம் வெளியிடப்படாத பொருட்களையும் சேமிக்கும்.
ஆவணகம் ஆவணப் பொருட்களின் குழுக்களை நிர்வகிக்கின்றன மற்றும் ஒட்டுமொத்த ஆவணச் சேகரிப்பைச் சுற்றி உள்ள குறிப்பிட்ட சூழலையும் பராமரிப்பதில் கவனம் செலுத்தும் (archive context).
ஒரு ஆவணகத்தில் திருடப்பட்ட அல்லது சேதமடைந்த ஒரு ஆவணத்தை மாற்றீடு செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது ஆகும்.
ஆவணகம் தொட்டுணரக் கூடிய மற்றும் எண்ணிம களஞ்சியங்களாக இருக்கலாம்.

நூலகம்

நூலகம் அறிவின் இரண்டாம் நிலை மூலம் ஆகும்.
நூலகம் என்பது வெளியிடப்பட்ட பொருட்களை சேமிப்பதற்கான இடம்.
பாரம்பரிய நூலகம் தனிப்பட்ட உருப்படிகளை கொண்டிருக்கும் (individual item). ஆனால் அவ்வுருப்படிகள் பொதுவாக தனித்துவமானதாக இருக்காது.
ஒரு நூலகத்தில் திருடப்பட்ட அல்லது சேதமடைந்த நூலை எளிதாக மாற்றீடு செய்யலாம்.
தொட்டுணரக் கூடிய மற்றும் எண்ணிம களஞ்சியங்களாக இருக்கலாம்.

அருங்காட்சியகம்

அருங்காட்சியகங்கள் குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படியில் பொருட்களை சேகரித்து, அவை ஒவ்வொன்றிற்கும் கியூரேட்டோரியல் (curatorial) சூழலை வழங்குகின்றன.
இவை தொட்டுணரக் கூடிய களஞ்சியங்கள் ஆகும். இதில் ஒரு ஆவணகத்தில் இருக்கும் பொருட்களின் நகலையும் கண்காட்சிக்குப் பார்க்கலாம்.


உருவாக்கம்│Creation: 25.08.2020
புதுப்பிப்பு│Update: 04.07.2021